×

ஊட்டி – 200 கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி 2 ஆயிரம் பேர் பங்கேற்பு

ஊட்டி : ஊட்டி – 200 கொண்டாடத்தின் ஒருபகுதியாக சுற்றுசூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக என்சான்டிங் நீலகிரி, வாக்கத்தான் 2023 என்ற விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஊட்டி – 200 விழாவின் ஒருபகுதியாக நீலகிரி மாவட்ட நிர்வாகத்தால் நீலகிரியின் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் என்சான்டிங் நீலகிரி, வாக்கத்தான் 2023 என்ற விழிப்புணர்வு பேரணி நேற்று காலை 8.30 மணிக்கு வென்லாக் டவுன் பகுதியில் நடந்தது.

மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி எம்பி ஆ. ராசா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
நீலகிரியின் சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் கோளத்தை பேணி பாதுகாக்கும் வகையில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட இந்த பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வணிக சங்கங்களின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் என சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த பேரணி பிங்கர் போஸ்ட், தமிழகம் சாலை, ஹில்பங்க், ஸ்டீபன் சர்ச், சேரிங்கிராஸ் வழியாக எஸ்ஏடிபி விளையாட்டு மைதானத்தை சென்றடைந்தது. தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது: 200 ஆண்டுகளுக்கு முன்பு ஊட்டி நகரினை கண்டறிந்து கட்டமைத்தவர் ஜான் சல்லிவன். இவர் வாழ்ந்த கோத்தகிரி பகுதியில் நினைவிடம் உள்ளது. இவர் இயற்கை சுற்றுச்சூழலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தமிழ்நாடு முதலமைச்சர் ஊட்டி – 200 நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக கடந்த ஆண்டு நமது மாவட்டத்திற்கு ரூ.10 கோடி அறிவித்தார். இதன் அடிப்படையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் சுற்றுச்சூழலை பேண கூடிய பேரணியும் நடத்தப்பட்டுள்ளது. முன்பு மக்கள் சோளம், ராகி, கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்களை தங்கள் தோட்டங்களில் பயிரிட்டு அதனை உணவாக உட்கொண்டு வந்ததன் மூலம் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வந்தனர். எனவே இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து, அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினர்.

தொடர்ந்து நீலகிரி எம்பி ஆ. ராசா பேசியதாவது: நீலகிரி மாவட்டத்திற்கு இருக்கின்ற மிகப்பெரிய சிறப்பு என்பது சுமூகமான, நல்லிணக்கமான, நாகரிகமான வாழ்க்கை. இவ்விழாவின் நோக்கம் ஜான் சல்லிவனை கொண்டாடுவது மட்டுமல்ல, அவர் காட்டிய நீலகிரியின் சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் கோளத்தை பேணி காக்க வேண்டும். நமது மாவட்டத்தில் வாழ்கின்ற பழங்குடியின மக்கள் தான் நமது வனத்தை காப்பாற்றுகின்ற பூர்வகுடி தமிழ் மக்கள் ஆவார்கள். அறிவியலை உலகத்திற்கு சொல்வதற்கு முன்னாள் அதனை உணர்ந்து வாழ்ந்த இனம் இந்த இனம். சுற்றுச்சூழல் மற்றும் வனத்தை பாதுகாப்பது நமது முக்கிய கடமை. அனைவரும் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பேணி காக்க வேண்டும் இவ்வாற அவர் பேசினார்.

முன்னதாக ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்காக பங்கேற்று பன்னாட்டு விளையாட்டு போட்டியில் 10 பதக்கங்களை வென்ற உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த வீராங்கனை பிரியங்கா கோஸ்மிக்கும், மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றவரும், ஆசிய போட்டிகளில் வெற்றி பெற்று பன்னாட்டு விளையாட்டு போட்டிகளில் 20 முறை பதக்கங்கள் வென்ற ஹரியானாவை சேர்ந்த சந்தீப்குமார் ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து மாசு கட்டுபாட்டு வாரியம் சார்பில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு மாற்றாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த மஞ்சப்பை மற்றும் கைவினை பொருட்கள் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி பிரபாகர், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநர் மோனிகா ரானா, மாவட்ட வன அலுவலர் கௌதம், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மனோகரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமா மகேஷ்வரி, நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, துணை தலைவர் ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஊட்டி – 200 கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி 2 ஆயிரம் பேர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Ooty – 200 ,Ooty ,Nilgiris ,Ooty – 200 celebrations ,Walkathon 2023… ,
× RELATED நீலகிரியில் நிலச்சரிவுகளை தடுக்க...