×

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் 2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி

*குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் நேற்று நடந்தது. அதில், டிஆர்ஓ பிரியதர்ஷினி, ஆர்டிஓ மந்தாகினி, வேளாண் இணை இயக்குநர் ஹரகுமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் குமரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, அரசு நலத்திட்ட உதவிகள், பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 484 பேர் கோரிக்கை மனு அளித்தனர். அதன்மீது, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும், கடந்த வாரங்களில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்த விபரங்களை கலெக்டர் ஆய்வு செய்தார். அதேபோல், முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்தும் ஆய்வு செய்தார். மேலும், மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனு மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் நம்மியம்பட்டு, பலாமரத்தூர் ஊராட்சியில் டேங்க் ஆபரேட்டர்களுக்கு ஊதியம் வழங்கக்கோரியும், அரசு மாதிரிப் பள்ளியை அந்த பகுதியில் இருந்து வேறு இடத்துக்கு மாற்ற வேண்டாம் என வலியுறுத்தியும் மனு அளித்தனர். இந்நிலையில், தண்டராம்பட்டு தாலுகா, தரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முதியவர் மாப்பினேஸ்வரன்(70), தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் மனு அளிக்க வந்தார்.

அப்போது, திடீரென டீசலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அதைத்தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து தடுத்து காப்பாற்றினர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், உறவினர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாகவும், கிராமத்தில் உள்ள கோயிலில் மிளகாய் தூள் மூலம் நேர்த்திக்கடன் செலுத்தியதற்காகவும், தங்களை கிராமத்தில் இருந்து ஒதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தனர். மேலும், மீண்டும் தங்களை ஊருடன் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில், கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே தணடராம்பட்டு அடுத்த ஒலகலாப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் தனது பெற்றோர் மற்றும் மனைவி, குழந்தைகளுடன் மனு அளிக்க வந்தார். அப்போது, திடீரென மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.

அவர்களையும், போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது, சொத்து பிரச்சனை தொடர்ப்பாக 15 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து தாக்கியதாகவும், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி தீக்குளிக்க முயன்றதாகவும் தெரிவித்தனர். பின்னர், தீக்குளிக்க முயன்ற இருதரப்பினர் மீதும் தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுவித்தனர். அடுத்தடுத்து இரண்டு குடும்பத்தினர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் 2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai collector ,Thiruvannamalai ,Tiruvannamalai Collector's ,Murukesh ,Tiruvannamalai Collector's Office ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...