×

விராலிமலையில் களைகட்டிய திருவிழா சந்தையில் ₹1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை

விராலிமலை : விராலிமலையில் களை கட்டிய திருவிழாவில் சந்தையில் நேற்று ₹1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் ஆட்டுச்சந்தை அப்பகுதிகளில் மிகவும் பிரபலமாகும். அதிகாலை தொடங்கும் இந்த ஆட்டு சந்தையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் முதல்நாள் இரவே லோடு வாகனங்களில் விராலிமலைக்கு வந்து தங்கி இருந்து அதிகாலை சந்தையில் ஆடுகளை வாங்கி செல்வது வழக்கம்.

அதிலும் குறிப்பாக பக்கத்து மாநிலமான புதுச்சேரியில் இருந்தும் வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கி செல்வது என்பது விராலிமலை ஆடுகளின் தனி சிறப்பை எடுத்துக்காட்டுகிறது. இயற்கையான முறையில் மட்டுமே வளர்க்கப்படும் இப்பகுதி ஆடுகளின் இறைச்சி ருசி அதிகமாக இருக்கும் என்பது அங்கு பரவலாக பேசப்படும் வழக்கமாகும்.

சிறப்புகள் பெற்ற விராலிமலை வாரச்சந்தை வழக்கம் போல் நேற்று கூடியது. ஊர்ப்பகுதியில் உள்ள கிராம கோயில்களில் சித்திரை திருவிழா நடைபெற்று வருவதால் ஆடுகள், கோழிகள் சந்தைக்கு விற்பனைக்கு வரத்தொடங்கியது. வியாபாரிகள் விலை ஏற்றத்தையும் பொருட்படுத்தாமல் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கி சென்றனர். வழக்கம் போல் ₹5 ஆயிரத்திற்கு விலை போகும் ஆடுகள் 8 ஆயிரத்திற்கும், 8 ஆயிரத்திற்கு விலை போகும் ஆடுகள் 12 ஆயிரத்திற்கும், 12 ஆயிரத்திற்கு விலை போகும் ஆடுகள் 18 ஆயிரம் வரைக்கு நேற்று போனது.

நேர்த்திக்கடன் நிறைவேற்ற கிடா வெட்டியும், கோழி பலியிட்டும் பூஜை செய்ய வேண்டிய நிலைமைக்கு பக்தர்கள் உள்ளதால் வியாபாரிகளின் விலையை பொருட்படுத்தாமல் வாங்கி சென்றனர். நேற்று ஒருநாள் நடைபெற்ற இந்த ஆட்டுச்சந்தையில் ₹1.50 கோடிக்கு மேல் ஆடுகள் விலை போனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post விராலிமலையில் களைகட்டிய திருவிழா சந்தையில் ₹1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Viralimalai ,Weed Festival market ,Pudukottai district ,
× RELATED முக்கண்ணாமலைப்பட்டியில் மழை வேண்டி சிறப்பு தொழுகை