×

இஸ்லாமியர்கள் இடஒதுக்கீடு விவகாரம்: கர்நாடக தேர்தல் பரப்புரைகளில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்..!!

டெல்லி: இஸ்லாமியர்கள் இடஒதுக்கீடு தொடர்பாக, கர்நாடக தேர்தல் பரப்புரைகளில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசி வந்த நிலையில் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கர்நாடகத்தில் முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 4% தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த தனி இடஒதுக்கீட்டை ஒன்றிய அரசு சமீபத்தில் ரத்து செய்வதாக அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் 4% இடஒதுக்கீட்டு ரத்து முடிவை அமல்படுத்தக் கூடாது என கர்நாடகா அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கர்நாடகா அரசும் 4% இடஒதுக்கீடு ரத்து அடிப்படையில் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என உச்சநீதிமன்றத்தில் உறுதி அளித்தது. இந்நிலையில், இஸ்லாமியர் இடஒதுக்கீடு தொடர்பான இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால் கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுவிட்டது. மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியாது என தொடர்ந்து பேசினார்.

இந்த நிலையில் இஸ்லாமியர் இடஒதுக்கீடு ரத்துக்கு எதிரான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது, இஸ்லாமியர் இடஒதுக்கீடு வழக்கு நிலுவையில் இருக்கும்போது அதை பற்றி பொதுவெளியில் எப்படி பேசலாம்? என நீதிபதி நாகரத்னா கேள்வி எழுப்பியுள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது இஸ்லாமியர் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதாக அமித் ஷா பேசியிருப்பது தவறு என்றும் இடஒதுக்கீட்டை அரசியலாக்க அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மக்கள் பிரதிநிதிகள் பொதுவெளியில் பேசும்போது கவனத்துடன் பேச வேண்டும் என நீதிபதி அறிவுரை வழங்கியுள்ளார்.

 

The post இஸ்லாமியர்கள் இடஒதுக்கீடு விவகாரம்: கர்நாடக தேர்தல் பரப்புரைகளில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : Islam ,Supreme Court ,Union Minister ,Amitsha ,Karnataka ,Delhi ,
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...