×

திட்டக்குடி பகுதியில் பலத்த மழை ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

*விவசாயிகள் கவலை: இழப்பீடு வழங்க கோரிக்கை

திட்டக்குடி : திட்டக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஏழு நாட்களாக பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தது. இதனால் விவசாயிகள் சோகத்துடன் காணப்படுகின்றனர். அரசு இழப்பீடு வழங்க கோரி உள்ளனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள மேலூர், அருகேரி, எரப்பாவூர், நாவலூர், மருதாத்தூர், ஆதமங்கலம், சிறுமுளை, பெருமுளை, வையங்குடி, தொளார், புத்தேரி, கோடங்குடி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் வெலிங்டன் நீர்த்தேக்க பாசனத்தை கொண்டு நெல் சாகுபடி செய்திருந்தனர். தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தன.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக திட்டக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்கதிர்கள் சாய்ந்து மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் செலவு செய்த விவசாயிகள் மீள முடியாத சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மழையை பார்த்து மகிழ்ச்சி அடைய வேண்டிய விவசாயிகள் மழையால் கண்ணீர் விட்டு கதற வேண்டிய அவல நிலை உள்ளது. மீள முடியாத சோகத்தில் விவசாயிகள் இருக்கின்றார்கள். கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் நெல் பயிரிட்டோம். ஆனால் பலத்த மழையால் நெற்பயிர்கள் மூழ்கி சேதமடைந்துள்ளன.
கடைசியில் வைக்கோல் கூட மிஞ்சவில்லை. விவசாயிகள் மீண்டும் பயிர் செய்ய தமிழ் அரசு இழப்பிடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட இடங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என சோகத்துடன் தெரிவித்தனர்.

The post திட்டக்குடி பகுதியில் பலத்த மழை ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் appeared first on Dinakaran.

Tags : Phetakkudi ,Chittakudi ,Dinakaran ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...