×

மணிப்பூர் கலவரத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் : அன்புமணி வேண்டுகோள்!!

சென்னை : மணிப்பூர் கலவரத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்று அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுத்தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “மணிப்பூரில் மைத்தேயி – குக்கி இன மக்களுக்கிடையே நடைபெற்று வரும் மோதல் கலவரமாக மாறியுள்ள நிலையில் அங்கு பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. கலவரத்தில் இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள நிலையில், தமிழர்களின் வீடுகள் உட்பட 1700-க்கும் மேற்பட்ட வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. மோரே உள்ளிட்ட நகரங்களில் கலவரத்தில் சிக்கிக் கொண்டுள்ள தமிழர்கள் அச்சத்தில் நடுங்கிக் கொண்டிருப்பது கவலையளிக்கிறது.

மியான்மர் எல்லையில் உள்ள, தமிழர்கள் அதிகம் வாழும் மோரே பகுதியில் கலவரம் உச்சத்தை அடைந்துள்ளது. கலவரத்தில் தமிழர்களுக்கு உயிரிழப்பு இல்லை என்பது நிம்மதியளிக்கிறது. அதேநேரத்தில் 40-க்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்களின் வீடுகள் எரிக்கப்பட்டு விட்டதால், அவர்கள் வாழ்வதற்கு வழியின்றி தவிக்கின்றனர். உணவுக்கும், குடிநீருக்கும் கூட வழியில்லாமல் வாடுகின்றனர்.

மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மோரே தமிழ்ச் சங்கம் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் நிலைமையின் தீவிரத்துடன் ஒப்பிடும் போது இந்த உதவிகள் போதுமானவையாக இல்லை. தமிழ்நாடு அரசு தலையிட்டு தங்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்று மணிப்பூரில் தவிக்கும் தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர். மணிப்பூரை விட்டு வெளியேறி தமிழகத்திற்கு திரும்ப வேண்டிய தேவையில்லை என்றும், தங்களுக்கான உதவிகளை வழங்கினால் போதுமானது என்றும் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகின் எந்த மூலையில் தமிழச் சொந்தங்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு உதவ வேண்டிய பெருங்கடமை தமிழக அரசுக்கு உண்டு. மணிப்பூர் கலவரத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு போதிய பாதுகாப்பையும், உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். கலவரத்தில் சேதமடைந்த வீடுகளை மீண்டும் கட்டி எழுப்புவதற்காக நிதி உதவி வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்,’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post மணிப்பூர் கலவரத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் : அன்புமணி வேண்டுகோள்!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Manipur riots ,Chennai ,Tamil ,Nadu ,Tamil Nadu Govt ,Manipur Riot ,
× RELATED ஆளுநர் அமைத்த குழுவை மாற்றி தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு