×

டெல்லி ஐகோர்ட் சரமாரி கேள்வி திகார் சிறையில் என்ன நடக்கிறது? சூப்பிரண்டு நேரில் ஆஜராக உத்தரவு

புதுடெல்லி: திகார் சிறை வளாகத்துக்குள் என்ன நடக்கிறது என சரமாரி கேள்வியெழுப்பிய டெல்லி உயர்நீதிமன்றம், தில்லு தஜ்பூரியா படுகொலை விவகாரத்தில் சூப்பிரண்டு அடுத்த விசாரணையின் போது நேரில் ஆஜரான வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. டெல்லி நீதிமன்ற வளாகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இதில் தாதா தில்லு தஜ்பூரியா கோஷ்டிக்கு தொட ர்பு இருக்கிறது என்பது போலீஸ் குற்றச்சாட்டு. இதையடுத்து பல்வேறு வழக்குகளில் டெல்லியில் இருக்கும் திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார் தில்லு தஜ்பூரியா. இந்த நிலையில் தில்லு தாஜ்பூரியாவை மற்றொரு தாதா கும்பல், திகார் சிறைக்குள் துப்பாக்கியால் சுட்டுப் கடந்த வாரம் படுகொலை செய்தது.

இந்த நிலையில் இறந்த பிரபல ரவுடி தில்லு தஜ்பூரியா தந்தை தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில்,‘‘தனது மகன் தில்லு தஜ்பூரியா படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அதன் உண்மை நிலவரம் தெரிவதற்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார். இதையடுத்து மேற்கண்ட மனுவானது டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்மித் சிங் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில்,‘‘தில்லு தஜ்பூரியா படுகொலை விவகாரத்தில் அனைத்தும் சி.சி.டி.வியில் பதிவாகி உள்ளது. அப்படி இருந்தும் அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு கைதி சிறை கம்பியை அறுத்து வெளியில் வந்து கொலை செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது எந்த விதத்திலும் ஏற்க கூடியது கிடையாது. அப்படியென்றால் திகார் சிறை வளாகத்திற்குள் என்ன தான் நடக்கிறது. மேலும் இதுதொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்பது தெளிவாக தெரிவருகிறது என சரிமாரியாக கேள்வியெழுப்பிய நீதிபதி,‘‘தில்லு தஜ்பூரியா படுகொலை விவகாரம் தொடர்பாக திகார் சிறைத்துறை நிர்வாகம் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் தில்லுவின் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து டெல்லி காவல்துறை பரிசீலிக்க வேண்டும். குறிப்பாக அடுத்த விசாரணையின் போது இந்த விவகாரம் தொடர்பாக திகார் சிறை சூப்பிரண்டு நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

* தமிழக ஏடிஜிபி நேரில் ஆய்வு
தில்லு தஜ்பூரியா படுகொலையை தடுக்க தவறியதாக திகார் சிறையில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆறு போலீசார் கடந்த வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அந்த ஆறு பேரும் தமிழ்நாடு சிறப்பு காவல்படையை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், தமிழ்நாடு கமாண்டோ படை ஏ.டி.ஜி.பி ஜெயராமன் நேற்று டெல்லி திகார் சிறைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இதைத் தொடர்ந்து அதுதொடர்பாக தமிழக டி.ஜி.பியிடம் அவர் அறிக்கை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல், இந்தோ-திபெத்திய எல்லை காவல்படை பிரிவின் டிஐஜி பன்வார் சிங்கும் திகார் சிறை டிஜியை நேரில் சந்தித்து சிறை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்து ஆலோசித்தார்.

The post டெல்லி ஐகோர்ட் சரமாரி கேள்வி திகார் சிறையில் என்ன நடக்கிறது? சூப்பிரண்டு நேரில் ஆஜராக உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Delhi High Court ,Tihar Jail ,New Delhi ,Dillu Tajpuria massacre ,Dinakaran ,
× RELATED டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...