×

பர்மா இந்தியர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்க இடத்திலிருந்து ஆக்கிரமிப்பாளர்களை 6 மாதத்திற்குள் அகற்ற வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பர்மா இந்தியர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்க இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுமாறு சென்னை கலெக்டருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பர்மாவிலிருந்து இந்தியா திரும்பியவர்களின் மறுவாழ்வுக்காக பர்மா இந்தியர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் கடந்த 1968ல் தொடங்கப்பட்டது. சங்கத்தின் சார்பில் பாலவாக்கத்தில் 24.57 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு அதில் 318 பேருக்கு வீடு கட்ட இடம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 1991ல் தமிழ்நாடு மறுவாழ்வு இயக்குனர் உத்தரவின் அடிப்படையில் மேலும் 20 பேருக்கு அவர்களுக்கு மாற்று இடம் தரும்வரை தற்காலிகமாக இடம் ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த நிலத்தில் சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக கூறி சங்கத்தின் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்தும்படி கூறியது. இது தொடர்பாக தாம்பரம் தாசில்தாரருக்கு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்த வழக்குகளை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்தன. இந்த நிலையில், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தி, ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்தக் கோரி பர்மா இந்தியர்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் சார்பில் அதன் தலைவர் ஓ.போஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் சுகுமார், எஸ்.செந்தில் ஆகியோர் ஆஜராகி, கடந்த 2014ல் இந்த நீதிமன்றத்தின் முழு அமர்வு சங்கத்தின் இடத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் உரிமை கோர முடியாது என்று உத்தரவிட்டது என்று வாதிட்டனர். சிறப்பு அரசு பிளீடர் ஆர்.அனிதா ஆஜராகி, 300 ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்தி, சென்னை மாவட்ட கலெக்டர் மற்றும் சோழிங்கநல்லூர் தாசில்தார் ஆகியோர் ஆறுமாதங்களில் நிலத்தை சங்கத்தின் வசம் ஒப்படைக்க வேண்டும். ஆக்கிரமிப்பை அகற்றுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், காவல் துறை உதவியைப் பெறலாம் என்று உத்தரவிட்டனர்.

The post பர்மா இந்தியர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்க இடத்திலிருந்து ஆக்கிரமிப்பாளர்களை 6 மாதத்திற்குள் அகற்ற வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Burma ,Indians ,Tamil Nadu govt ,Chennai ,Burma Indians Cooperative Housing Society ,Chennai High ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED அரசு முத்திரை, சின்னங்கள் 1.04 லட்சம்...