×

நொய்யல் நதியை பாதுகாக்க கோரி விவசாயிகள் மனு

 

கோவை, மே 9: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிச்சாமி தலைமையில் விவசாயிகள் நொய்யல் நதியின் மாசுபட்ட நீரை பாட்டிலில் எடுத்து வந்து, மாசடைந்த நீர்நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி, பதாகைகளை ஏந்தி மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவையில் நொய்யல் நதியில் தொழிற்சாலை ரசாயன கழிவுகள் பெருமளவில் கலக்கிறது.

இதனால், கழிவுநுரை ததும்ப நொய்யல் நதி அலங்கோலமாக காட்சியளிக்கிறது. சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பலரும் நொய்யல் நதியை பாதுகாக்க முன்வரவேண்டும் என தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், எந்த நடவடிக்கையும் இல்லை. தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகள் தொடர்ச்சியாக நொய்யல் ஆற்றில் கலந்துவருகிறது. இதனால், நொய்யல் நதி மாசுபடுவதுடன், அருகில் நீர்நிலைகளும் மாசுபடுகிறது. இதன்காரணமாக, விளைநிலங்கள் மலடாகிறது. மகசூல் அடியோடு பாதிக்கப்படுகிறது. எனவே, நொய்யல் நதியை பாதுகாக்க வேண்டும். ரசாயன கழிவு கலப்பதை நிரந்தரமாக தடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

The post நொய்யல் நதியை பாதுகாக்க கோரி விவசாயிகள் மனு appeared first on Dinakaran.

Tags : Noyal river ,Coimbatore ,Coimbatore District Collector ,Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...