×

தமிழ்நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் மட்டும் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் ரூ.288.38 கோடி திருட்டு: ரூ.106 கோடியை முடக்கியுள்ளதாக சைபர் க்ரைம் ஏடிஜிபி சஞ்சய் குமார் தகவல்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் பொதுமக்கள் வங்கி கணக்குகளில் இருந்து நூதன முறையில் ரூ.288.38 கோடி திருடப்பட்டுள்ளதாகவும், புகாரின் மீது 106 கோடி பணத்தை முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாநில சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார் தெரிவித்தார். சென்னை மாநகர காவல்துறை சார்பில் ‘முத்துவும் 30 திருடர்களும்’ என்ற தலைப்பில் புத்தக வகையில் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். சைபர் க்ரைம் போலீசார் பல வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், பொதுமக்களிடம் பல்வேறு வகையில் நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். குறிப்பாக நைஜீரியா, கென்யா நாடுகளை சேர்ந்தவர்கள் தான் இந்த மோசடியில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். மாநில சைபர் க்ரைம் மற்றும் சென்னை மாநகர சைபர் க்ரைம் போலீசார் திறமையாக கையாண்டு இதுபோன்ற வெளிநாட்டு குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார் நிருபர்களிடம் கூறியதாவது: பொதுமக்களை தொடர்பு கொண்டு மோசடி நபர்கள் பல்வேறு வகையில் அவர்களின் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை திருடி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் அளிக்கும் புகாரின் மீது உடனுக்குடன் வழக்கு பதிவு செய்து புகார்தாரர் பயன்படுத்தும் வங்கியின் அதிகாரிகளை சைபர் க்ரைம் போலீசார் தொடர்பு கொண்டு, பணத்தை உடனே முடக்கி மீண்டும் புகார் அளித்த நபர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் எந்த வங்கி அதிகாரிகளும் வங்கி ஏடிஎம் அட்டையை புதுப்பிக்க தொடர்பு கொள்ள மாட்டார்கள். அதை மக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில், பொதுமக்களிடம் நூதன முறையில் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.288.38 கோடி பணம் அவர்களின் வங்கி கணக்குகளில் இருந்து திருடப்பட்டுள்ளது. அதில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் சைபர் க்ரைம் போலீசார் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் பேசி மோசடி நபர்களிடம் இருந்து ரூ.106 கோடி பணம் முடக்கியுள்ளனர். மோசடி நபர்கள் வெளிநாடுகளில் இருந்து பணத்தை திருடுவதால் உடனுக்குடன் அந்த பணம் நமது நாட்டு வங்கியில் இருந்து அவர்கள் நாட்டு வங்கிக்கு பரிமாறப்படுகிறது. இதனால் சில வழக்குகளில் உடனே பணத்தை திரும்ப பெற முடியாத நிலை உள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும் சைபர் க்ரைம் போலீசாரின் ‘1930’ என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் மட்டும் 12 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன. அந்த புகார்களின் மீது சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன்படி கடந்த 3 மாதங்களில் பொதுமக்கள் வங்கி கணக்குகளில் இருந்து மொத்தம் ரூ.67 கோடி வரை மோசடி நபர்கள் பணத்தை திருடியுள்ளனர். அதில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் மீது, ரூ.27 கோடி மீட்கப்பட்டு உரியவர்களிடம் சைபர் க்ரைம் போலீசர் ஒப்படைத்துள்ளனர். மேலும் கடந்த ஒன்றரை மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் மோசடி செயல்களில் ஈடுபட்டதாக 27,905 சிம்கார்டுகளை முடக்க ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதில் 22,440 சிம்கார்டுகள் முடக்கப்பட்டது. பொதுமக்கள் இதுபோன்ற மோசடி நபர்களிடம் விழிப்புடன் இருக்க மாநில சைபர் க்ரைம் போலீசார் சார்பில் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். நைஜீரியா, கென்யா நாடுகளை சேர்ந்தவர்கள் தான் இந்த மோசடியில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post தமிழ்நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் மட்டும் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் ரூ.288.38 கோடி திருட்டு: ரூ.106 கோடியை முடக்கியுள்ளதாக சைபர் க்ரைம் ஏடிஜிபி சஞ்சய் குமார் தகவல் appeared first on Dinakaran.

Tags : Cybercrime ,ADGP ,Sanjay Kumar ,Tamil Nadu ,Chennai ,Dinakaran ,
× RELATED தேனியில் யூ டியூபர் சவுக்கு சங்கர் கைது: கோவை மாநகர சைபர் கிரைம் நடவடிக்கை