×

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் சிறப்பு அதிகாரிகள் பதவி இறக்கத்திற்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் சார்பில் செயல்பட்டு வந்த 202 கல்வி மையங்களை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். நிர்வாக பிரச்னை காரணமாக பல்கலைக்கழகத்தை அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. அதன் பிறகு பல்கலைக்கழகத்தின் கல்வி மையங்களின் எண்ணிக்கை 59 ஆக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக சிறப்பு அதிகாரிகள் பலர் உபரி அதிகாரிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்களில் பலரை உதவி பிரிவு அதிகாரியாக பதவி இறக்கம் செய்தும், ஊதியத்தைக் குறைத்தும் பல்கலைக்கழகம் எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில், அவர்களை வேளாண் துறைக்கும், கல்லூரி கல்வி துறைக்கும் அயல் பணியாக மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இதேபோல, 350 சிறப்பு அதிகாரிகள் அரசு கல்லூரிகளில் ஆய்வக உதவியாளர்களாக நியமிக்கப்பட்டு அவர்களின் ஊதியமும் குறைக்கப்பட்டது. இதை எதிர்த்து கிருஷ்ணமூர்த்தி என்பவர் உள்பட 115 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.அவர்கள் தாக்கல் செய்த மனுக்களில், தங்களை ஆய்வக உதவியாளர்களாக நியமித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், முதுகலை பட்டம் பெற்ற மனுதாரர்களை, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்கும் ஆய்வக உதவியாளர்களாக நியமித்தது சட்டவிரோதமானது.
ஏற்கனவே பதவி இறக்கம் செய்யப்பட்டவர்கள் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர்களை ஆய்வக உதவியாளர்களாக பதவி இறக்கம் செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும், இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழ்நாடு அரசு, அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு உத்தரவிட்டு விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

The post சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் சிறப்பு அதிகாரிகள் பதவி இறக்கத்திற்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chidambaram Annamalai University ,CHENNAI ,Dinakaran ,
× RELATED சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இணையவழித் தேர்வு முடிவுகள் வெளியீடு..!!