×

கொளத்தூர் தொகுதியில் ரூ.10 கோடியில் நவீன சந்தை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புபடி, கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.10 கோடி செலவில் நவீன சந்தை அமைக்கப்படும் என்று அமைச்சர் பி.கே. சேகர்பாபு கூறினார். கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலை பகுதியில் ரூ.10 கோடியில் நவீன சந்தை அமைக்கப்பட உள்ளது. புழல், மேட்டுப்பாளையம், சீனிவாசன் தெருவில் உள்ள கால்பந்து மைதானத்தை ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பது, புழல், மகாலட்சுமி நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் புதிய பள்ளி வளாகம் ரூ.4 கோடியில் அமைப்பது, சமுதாயக்கூடம் ரூ.5 கோடியில் புதுப்பிப்பது, திருவொற்றியூரில் ரூ.30 கோடியில் வடசென்னை மக்களுக்கு பயன்படும் வகையில் சுமார் 5 கிலோ மீட்டர் நீளம் உள்ள கடற்கரையை மேம்படுத்துவது தொடர்பாக அமைச்சர் பி.கே.சேகர் பாபு நேற்று நேரில் சென்று களஆய்வு மேற்கொண்டார்.

பிறகு அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: சட்டசபையில் இந்த நிதியாண்டுக்கான அறிவிப்புகளில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு 50 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. இதில் சென்னையில் உள்ள 26 சட்டமன்ற தொகுதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளை துரிதமாக செயல்படுத்தும் வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலைப் பகுதியில் ரூ.10 கோடி மதிப்பில் நவீன சந்தை அமைக்கப்படும். மாதவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புழல், மேட்டுப்பாளையம், சீனிவாசன் தெருவில் உள்ள கால்பந்து மைதானம் சிறந்த முறையில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து தரப்படும். புழல், மகாலட்சுமி நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கான்கிரீட் தளத்துடன், அனைத்து அடிப்படை தேவைகளுடன் கூடிய நடுநிலைப் பள்ளியாக மாற்றப்படும்.

எண்ணூரில் உள்ள மீன் அங்காடி மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு நிரந்தர கடைகள் அனைத்து வசதிகளுடன் கூடிய கடைகள் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு சிறந்த முறையில் கட்டித் தரப்படும். அதில் மீன் மற்றும் இறைச்சி கடை தனியாகவும் காய்கறி மற்றும் கடைகள் தனியாகவும் மற்றும் ஒரு திருமண மண்டபம் கட்டித் தரப்படும். வடசென்னை மக்களுக்கு பயன்படும் வகையில் பார்வதி நகரில் இருந்து காசிமேடு வரை சுமார் 5 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரை ரூ.30 கோடி செலவில் அழகுபடுத்தப்படும். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு அறிவிக்கப்பட்ட 50 அறிவிப்புகளில், சென்னையில் உள்ள 26 சட்டமன்ற தொகுதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளில் 16 இடங்களில் கள ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 18 இடங்களிலும் வெகு விரைவில் கள ஆய்வு பணிகளை தொடங்க இருக்கிறோம். இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.

அப்போது சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, கலாநிதி வீராசாமி எம்பி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் அபூர்வா, எம்எல்ஏக்கள் மாதவரம் சுதர்சனம், கே.பி.சங்கர், சென்னை பெருநகர வளர்ச்சி‌க் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, சென்னை கலெக்டர் அமிர்தஜோதி, மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், துணை ஆணையர் (கல்வி) ஷரண்யா அறி, மாநகராட்சி மண்டல குழுத் தலைவர்கள் சரிதா மகேஷ்குமார், நந்தகோபால், ஏ.வி.ஆறுமுகம், தனியரசு உட்பட பலர் இருந்தனர்.

The post கொளத்தூர் தொகுதியில் ரூ.10 கோடியில் நவீன சந்தை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekharbabu ,Chennai ,Kolathur ,Dinakaran ,
× RELATED கொளத்தூர் தொகுதியில் 370 கர்ப்பிணி...