×

பிளஸ் 2 பொது தேர்வில் மாநகராட்சி பள்ளிகளில் 86.86 சதவீதம் தேர்ச்சி: புலியூர் சென்னை பள்ளி முதலிடம்

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 86.86 சதவீத மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மாநகராட்சி கல்வித் துறையின்கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகளும், 38 உயர்நிலைப் பள்ளிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2022-2023ம் கல்வியாண்டில் நடைபெற்ற 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 2,626 மாணவர்கள் மற்றும் 3,273 மாணவியர் என மொத்தம் 5,899 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இதில், 2,129 மாணவர்கள் (81.07%) மற்றும் 2,995 (91.50%) மாணவியர் என மொத்தம் 5,124 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 86.86% ஆகும். (கடந்த ஆண்டின் தேர்ச்சி விகிதம் 86.47% ஆகும்.)

பாடவாரியான தேர்ச்சி சதவீதத்தில் வேதியியல் பாடப் பிரிவில் 1, தாவரவியல் பாடப்பிரிவில் 1, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் பாடப்பிரிவில் 2, வரலாறு பாடப்பிரிவில் 1, புவியியல் பாடப்பிரிவில் 2, பொருளியல் பாடப்பிரிவில் 7, வணிகவியல் பாடப்பிரிவில் 20, கணக்கு பதிவியல் பாடப்பிரிவில் 25, கணினி அறிவியல் பாடப்பிரிவில் 3 மற்றும் கணினி பயன்பாடுகள் பாடப்பிரிவில் 9 மாணவ/மாணவியர்கள் என மொத்தம் 71 மாணவ, மாணவியர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும், 42 மாணவ, மாணவியர் பல்வேறு பாடப்பிரிவில் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மதிப்பெண்கள் அடிப்படையில் 52 மாணவ, மாணவியர்கள் 551க்கு மேல் 600 வரை மதிப்பெண்களும், 254 மாணவ மாணவியர்கள் 501லிருந்து 550 வரை மதிப்பெண்களும், 456 மாணவ, மாணவியர்கள் 451லிருந்து 500 வரை மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

மதிப்பெண்கள் அடிப்படையில் எம்.எச். சாலை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 600 மதிப்பெண்களுக்கு 592 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், மார்க்கெட் தெரு சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 600 மதிப்பெண்களுக்கு 589 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், சைதாப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 600 மதிப்பெண்களுக்கு 587 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும், மடுவின்கரை சென்னை மேல்நிலைப்பள்ளி 600 மதிப்பெண்களுக்கு 583 மதிப்பெண்கள் பெற்று நான்காம் இடத்தையும், மார்க்கெட் தெரு சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 600 மதிப்பெண்களுக்கு 582 மதிப்பெண்கள் பெற்று ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளன.

தேர்ச்சி வீதத்தின் அடிப்படையில், புலியூர் சென்னை மேல்நிலைப்பள்ளி 100 சதவீதத்துடன் முதலிடத்தையும், சுப்பராயன் சென்னை மேல்நிலைப்பள்ளி 98.29 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், நெசப்பாக்கம் சென்னை மேல்நிலைப்பள்ளி 97.89 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும், புல்லா அவென்யூ சென்னை மேல்நிலைப்பள்ளி 97.44 சதவீதத்துடன் நான்காம் இடத்தையும், திருவான்மியூர் சென்னை மேல்நிலைப்பள்ளி 95.55 சதவீதத்துடன் ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளன.

* கல்வி செலவை மாநகராட்சி ஏற்கும் சென்னை மாநகராட்சி சார்பில் ஆங்கிலத்திற்கென சிறப்பு வகுப்புகள், சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டது. இதனால் மாணவர்களின் மதிப்பெண் அதிகரித்துள்ளதாக மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், சென்னை மாநகராட்சி பள்ளி அளவில் முதல் 5 இடங்கள் பிடித்த பள்ளிகளுக்கு மேயர் சார்பில் பரிசு வழங்கப்படவுள்ளது. ஏற்கனவே சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை போல சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளின் கல்வி செலவை மாநகராட்சியே ஏற்கவுள்ளது.

The post பிளஸ் 2 பொது தேர்வில் மாநகராட்சி பள்ளிகளில் 86.86 சதவீதம் தேர்ச்சி: புலியூர் சென்னை பள்ளி முதலிடம் appeared first on Dinakaran.

Tags : Puliyur Chennai School ,Chennai ,Chennai Municipal Schools ,Chennai… ,Puliyur Chennai ,
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 87.13% மாணவ, மாணவியர் தேர்ச்சி: 56 பேர் 100/100