![]()
தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெரு நாய்கள், சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் என அனைவரையும் திடீரென துரத்தி செல்வது, சிறுவர்களை கடிப்பது, குப்பைக் கழிவுகளை சாலையில் இழுத்து வந்து போடுவது என தினமும் அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கு தாம்பரம், கஸ்தூரிபா நகர் பகுதியில் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த சிறுவன் சமீரை தெரு நாய் கடித்ததில், சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதே பகுதியில் 3க்கும் மேற்பட்டவர்களை தெருநாய் கடித்து காயமடைந்தனர்.
அதேபோல, கடந்த சில நாட்களுக்கு முன், குரோம்பேட்டை, ராதா நகர் பகுதியை சேர்ந்த தேன்மொழி (55). அவரது மகனுடன் பைக்கில் சென்றபோது தெரு நாய்கள் துரத்தியது, நாய்களிடமிருந்து தப்பிக்க பைக்கை தேன்மொழியின் மகன் வேகமாக ஓட்டும்போது, பின்னால் அமர்ந்திருந்த தேன்மொழி கட்டுப்பாட்டை இழந்து வாகனத்தில் இருந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுபோல, தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருநாய்களால் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் தாம்பரம் மாநகராட்சியில் புகார் அளித்து வந்தனர். இதனைத்தொடர்ந்து மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்களைப் பிடித்து இந்திய விலங்குகள் நல வாரியம் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இனக்கட்டுப்பாடு செய்யும் பணி மாநகராட்சியின் பொதுசுகாதாரத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெருகி வரும் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்திடும் வகையில், நாய்கள் பிடிக்கப்பட்டு வாகனங்கள் மூலம் பம்மல் மண்டலம், அனகாபுத்தூர் மற்றும் செம்பாக்கம் மண்டலம், பாரதிபுரம் ஆகிய இனக்கட்டுப்பாடு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு கால்நடை மருத்துவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனைத்தொடர்ந்து 18.04.2023 முதல் 07.05.2023 வரை 125 தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, அதில் 109 தெருநாய்களுக்கு கால்நடை மருத்துவக் குழுவினரால் இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சை முடிந்து 5 நாட்கள் வரை பராமரிக்கப்பட்டு, உடல் தகுதி பெற்றபின் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசியும் போடப்பட்ட பிறகு, பிடித்த இடத்திலேயே விடப்பட்டுள்ளது.
The post தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் 109 தெரு நாய்களுக்கு இனக்கட்டுப்பாடு சிகிச்சை: பொதுசுகாதாரத் துறை நடவடிக்கை appeared first on Dinakaran.
