×

தர்மநாயக்கன் பட்டறை கிராமத்தில் பழுதடைந்து எலும்பு கூடான மேல்நிலை நீர் தேக்க தொட்டி: அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்

வாலாஜாபாத்: தர்மநாயக்கன் பட்டறை கிராமத்தில் பழுதடைந்து எலும்பு கூடாக காட்சி அளிக்கும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை, விபத்து ஏற்படுவதற்கு முன்பாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் வையாவூர் ஊராட்சியில் தர்மநாயக்கன் பட்டறை கிராமம் உள்ளது. இங்கு, 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதி மக்களின் குடிநீருக்காக 2013ம் ஆண்டு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஒன்று கட்டப்பட்டது. இதன் மூலம் தர்மநாயக்கன் பட்டறை பகுதியில் உள்ள மக்களுக்கு நாள்தோறும் குடிநீர் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி தற்போது முழுமையாக சிதிலமடைந்து எந்த நேரத்தில் விழும் என்பது தெரியாமல் இப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘தர்மநாயக்கன் பட்டறை பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி முழுமையாக சிதிலமடைந்து காணப்படுகின்றது. குறிப்பாக, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நிற்கும் அனைத்து தூண்களும் எலும்புக்கூடு போன்று கம்பிகள் தெரியும் அளவிற்கு முழுமையாக சிதிலம் அடைந்து காணப்படுகிறது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கீழே விழும் சூழல் இப்பகுதியில் நிலவுகின்றது.

இதுபோன்ற சூழ்நிலையில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியை அப்புறப்படுத்த வேண்டும் என தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்திடமும் மாவட்ட அதிகாரிகளிடமும் வலியுறுத்தி வருகிறோம். இருப்பினும் இதுவரை இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அப்புறப்படுத்துவதற்கான எந்தெந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் சாலையை ஒட்டியுள்ள இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை உடனடியாக அகற்ற வேண்டும்’ என்றனர். இது குறித்து வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் கேட்டப்போது, ‘தர்மநாயக்கன் பட்டறை மேல்நிலை நீர்தேக்க தொட்டியை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றார்.

The post தர்மநாயக்கன் பட்டறை கிராமத்தில் பழுதடைந்து எலும்பு கூடான மேல்நிலை நீர் தேக்க தொட்டி: அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Dharmanayakan Pattarai village ,Walajahabad ,Dharmanayakan Pattara village ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...