×

கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு: 7 பேர் கவலைக்கிடம்

திருவனந்தபுரம்: மலப்புரம் அருகே தானூரில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர் அருகே ஒட்டும்புறம் என்ற இடத்தில் ஆறும், கடலும் கலக்கும் கழிமுக பகுதி உள்ளது. இங்கு விடுமுறை நாட்களில் உள்ளூர் மக்கள் பொழுதை கழிக்க அதிக அளவில் வருவார்கள். தொடர்ந்து இந்த பகுதியில் சமீபத்தில் படகு போக்குவரத்து தொடங்கப்பட்டது. கட்டணம் வசூலித்து பயணிகளை ஏற்றி சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள கழிமுகம் வரை சென்று திரும்புவார்கள். இங்கு தானூர் பகுதியைச் சேர்ந்த நாசர் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அட்லாண்டிக் என்ற பெயரில் சுற்றுலா படகு சேவையை தொடங்கினார். இதில் 20 பேர் பயணிக்கலாம்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பயணிகள் குவிந்தனர். இந்த படகில் செல்ல குழந்தைகள், பெண்கள் உள்பட 40 பேர் டிக்கெட் எடுத்திருந்ததாக கூறப்படுகிறது. இவர்களுடன் இரவு 7 மணிக்கு பின்னர் படகு புறப்பட்டு சென்றது. சிறிது தூரம் சென்ற உடனேயே எதிர்பாராதவிதமாக படகு தலைகீழாக கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த அனைவரும் தண்ணீருக்குள் விழுந்தனர். இது குறித்து உடனடியாக போலீசுக்கும், தீயணைப்புப் படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து சென்று மீட்புப் பணியை தொடங்கினர். ஆனால் இரவு நேரமாகி விட்டதால் மீட்புப் பணியில் கடும் சிரமம் ஏற்பட்டது. மீட்கப்பட்டவர்கள் உடனுக்குடன் ஆம்புலன்ஸ்கள் மூலம் அருகில் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்தில் 7 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 22 பேர் பலியானார்கள். இந்த விபத்தில் சிக்கி இறந்தவர்களில் 10 பேர் மிகவும் நெருக்கமான உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்தில் சிக்கிய 10 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள 7 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. நேற்று முன்தினம் இரவில் போதிய வெளிச்சம் இல்லாததால் மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில் நேற்று காலை மீண்டும் மீட்புப் பணிகள் தொடங்கியது. தேசிய பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு வீரர்கள், கொச்சி கடற்படை வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் மேலும் ஒரு சிறுவன் இறந்திருக்கலாம் எனறு அஞ்சப்பட்டது. ஆனால் பின்னர் அந்த சிறுவன் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தேடும் பணி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த விபத்தை தொடர்ந்து கேரளாவில் நேற்று துக்க நாளாக அனுசரிக்கப்பட்டது. அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

* படகு உரிமையாளர் கைது: போலீஸ் விசாரணையில் படகில் பயணிகளுக்கு கவச உடைகள் வழங்கப்படவில்லை. மேலும் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் பயணிகள் படகில் ஏற்றப்பட்டது தெரிய வந்தது. படகு உரிமையாளர் நாசரை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர்.

The post கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு: 7 பேர் கவலைக்கிடம் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Thanur ,Malappuram ,
× RELATED பெண்ணின் பலாத்கார வீடியோவை...