×

தளர வேண்டாம்

பிளஸ் 2 தேர்வில் 94.03 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. வழக்கம்போல் இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகள் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவ, மாணவிகள் மேற்படிப்பை தேர்ந்தெடுப்பதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நன்கு ஆராய்ந்து மேற்படிப்பில் சேர வேண்டியது மிக அவசியம். பிளஸ் 2 தேர்ச்சி பெற்று மேற்படிப்பில் சேருவது தான் வாழ்க்கையின் முக்கிய கட்டம். எனவே தற்போது எந்தெந்த மேற்படிப்புகளுக்கு ‘மவுசு’ இருக்கிறது என்பதை முதலில் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பின்னர், அந்த படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.

கல்வியாளர்களின் ஆலோசனை பெற்று மேற்படிப்பில் மாணவர்கள் சேரலாம். பெற்றோர் தங்களது விருப்பத்தின் அடிப்படையில் மாணவர்களை குறிப்பிட்ட மேற்படிப்பை தான் படிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதை முடிந்தளவிற்கு தவிர்க்கலாம். மாணவர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ற மேற்படிப்பை படித்தால், அவர்களால் அந்த துறையில் சாதிக்க முடியும். மாணவர்களின் திறமையை அறிந்து, அவர்களுக்கு ஏற்ற மேற்படிப்பை தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது.

தற்போது, டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப புதுப்புது மேற்படிப்புகள் உள்ளன. அவற்றை தேர்ந்தெடுத்து மாணவர்கள் படிக்கலாம். மதிப்பெண்களை வைத்து மற்ற மாணவர்களை தங்களின் பிள்ளைகளுடன் ஒப்பிட்டு பேசக்கூடாது. இதனால் மாணவர்களுக்கு தீவிர மனஅழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மதிப்பெண் மட்டும் வாழ்க்கையை நிர்ணயித்து விடாது. எனவே மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. எதையும் தாங்கி, விடா முயற்சியுடன் தொடர்ந்து படித்தால் வெற்றி அடையலாம் என்ற நம்பிக்கையை மாணவர்களிடம் உருவாக்க வேண்டும். அவ்வாறு அசைக்க முடியாத நம்பிக்கையுள்ள மாணவர்கள், மேற்படிப்பில் எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும் அதில் அவர்கள் சிறப்பான இடத்திற்கு செல்வார்கள்.

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துவண்டு விட வேண்டாம். தொடர்ச்சியாக முயன்றால் எளிதாக பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற முடியும். தேர்வு தோல்வியை கண்டு மாணவ, மாணவிகள் ஒரு போதும் அச்சம் கொள்ளக்கூடாது. தேர்வு தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, அடுத்த முறை தேர்வில் வெற்றி பெற தீவிரமாக படிக்க வேண்டும். தேர்வு தோல்வியால் ஒரு விதமான தாழ்வு மனப்பான்மை மாணவர்களிடம் ஏற்படும். எனவே இவ்விஷயத்தில் மாணவர்களுக்கு பெற்றோர் அடிக்கடி அறிவுரை வழங்க வேண்டியது மிக அவசியம். தேர்வு தோல்வி பயத்தில் இருந்து மாணவர்களை வெளியே கொண்டு வர வேண்டிய கடமை பெற்றோருக்கு உள்ளது. கல்வியால் மட்டுமே மாற்றத்தை கொண்டு வர முடியும். கல்விக்கு அதீத முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க முடியும். பிளஸ் 2 முடித்து மேற்படிப்பில் சேர உள்ள மாணவ, மாணவிகள் தங்களது துறைகளில் சிறந்து விளங்கி சாதனை படைக்க வேண்டும்.

The post தளர வேண்டாம் appeared first on Dinakaran.

Tags : Virudunagar district ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...