×

உணர்வுக்கு மதிப்பளிக்காதே!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 48 (பகவத்கீதை உரை)

ஓர் ஆசிரமத்தில் குருநாதர், பத்துப் பதினைந்து பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதிகாலையில் துயிலெழுவதிலிருந்து இரவு உறங்கப்போவது வரை எல்லா வேலைகளையும் அந்த மாணவர்களே பிரித்துக்கொண்டு செய்யவேண்டியிருந்தது. அந்த விடலைப் பையன்களுக்கு அவ்வாறு பணியாற்றுவது கொஞ்சம் கௌரவக் குறைச்சலாகவே தோன்றியது.

‘வீடு பெருக்குவது, மெழுகுவது, சமைப்பது, பாத்திரங்களைத் துலக்கி வைப்பது, குருநாதரின் உடைகளைத் துவைத்துக் கொடுப்பது. இவையெல்லாம் பெண்கள் சமாசாரம். இதைப்போய் நம்மை செய்யச் சொல்கிறாரே!’ என்று அவர்களுக்கெல்லாம் குருவின் மீது ஆதங்கம்.

பல நாட்கள் இந்த ‘கௌரவக் குறைச்சலான’ பணிகளை மேற்கொண்டிருந்த அவர்கள், தம் குறையை குரு விடமே முறையிட்டு விடுவதென்று தீர் மானம் செய்துகொண்டார்கள். அவர்கள் எதையோ சொல்ல நினைத்து, அதற்கு தைரியம் வராமல் தயங்கி நிற்பதை குரு உணர்ந்துகொண்டார். அவராகவே அவர்களிடம் பேசினார், ‘‘என்ன வேண்டும் உங்களுக்கு? தயங்காமல் என்னிடம் கேளுங்கள்.’’மாணவர்களில் மூத்தவன் முன்வந்தான். ‘‘குருவே, நாங்கள் தங்களிடம் பாடம் கற்பதைத் தவிர இந்தக் குடில் சம்பந்தப்பட்ட எல்லா வேலைகளையும் செய்கிறோம்.

இவையெல்லாம் ஒரு பெண் செய்ய வேண்டிய வேலைகள். யாராவது பணிப்பெண் ஒருத்தியை நீங்கள் நியமித்தால் நன்றாக இருக்குமென்று எங்களுக்குத் தோன்றுகிறது,’’ என்றான். அவனை ஆழமாகப் பார்த்தார் குரு. ‘‘அதுசரி, நீங்கள் சொல்கிறீர்கள் என்பதற்காக நான் திருமணம் செய்து கொள்ள முடியாதுதான்,’’ என்று நகைச்சுவையுடன் கூறிய அவர், ‘‘அதெல்லாம் வேண்டாம், நீங்களே அப்பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுங்கள்,’’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்.

மாணவர்களுக்குப் பெருத்த ஏமாற்றம். அவர் தம்மை சந்தேகப்படுகிறார் என்று கருதி, ‘‘யாராவது வயதான பெண்மணியைக்கூட நியமித்துக் கொள்ளலாம். ஏனென்றால் இந்த வேலைகளைச் செய்ய வேண்டியவர்கள் பெண்களே, ஆண்கள் அல்ல,’’ என்றும் யோசனை சொன்னார்கள்.

ஆனால், அவர் கேட்பதாக இல்லை. அடுத்தடுத்த நாட்களில் அவர்களுடைய நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது. அவர்களுடைய வெறுப்பு புலப்பட்டது. அதைக் கவனித்த குரு ஒரு முடிவுக்கு வந்தார். ‘‘சரி, பிள்ளைகளே, இன்று நான் சமையல் செய்வதாக உத்தேசித்திருக்கிறேன். நீங்கள் அந்த சாப்பாட்டை சாப்பிட வேண்டும்,’’ என்றார்.

மாணவர்கள் ஒருவரை ஒருவர் விநோதமாகப் பார்த்துக்கொண்டார்கள் என்றாலும், அன்றைய ஒரு தினமாவது வழக்கமான வேலைகளில் ஒன்றிலிருந்து விடுதலை பெறுகிறோமே என்று மகிழ்ந்தார்கள். குரு சமைத்து முடித்தார். மாணவர்களை சாப்பிட அழைத்தார். அவர்கள் வந்து அமர்ந்ததும் அவரவர் தட்டுகளில் உணவைப் பரிமாறினார். ‘‘கூச்சப்படாதீர்கள். இத்தனை நாள் எனக்குப் பல பணிவிடைகள் செய்தீர்கள், இன்று நான் உங்களுக்கு சமைத்துப் போடுவதை மட்டும்தானே செய்கிறேன்,’’ என்று அவர்களுடைய தர்மசங்கட உணர்வைப் போக்கினார். அவர்களும் மனந்தெளிந்து உணவை உட்கொண்டார்கள். இரண்டாவது கவளம் வாய்க்குள் போவதற்குள் அனைவரும் அலறிவிட்டார்கள்.

ஆமாம், அத்தனை காரம். உப்பில்லாத காரப்பண்டம். நாக்கு, வாயெல்லாம் வெந்துபோவதுபோல எரிய, ‘தண்ணீர், தண்ணீர்’ என்று கதறினார்கள். ஆனால், சாப்பிடுமுன் தண்ணீர் எடுத்து வைத்துக்கொள்ளவில்லை அவர்கள். நீர்ப்பானையை நோக்கி ஓடினார்கள். அது முற்றிலும் காலியாக இருந்தது. எங்குமே குடிநீர் இல்லை. அங்கும், இங்கும் ஓடிய அவர்கள் குடிலுக்குப் பின்னால் ஒரு தொட்டியில் நீர் நிறைந்திருப்பதைக் கண்டார்கள்.

அது சற்றே கலங்கியிருந்தாலும், பரவாயில்லை என்று அள்ளிஅள்ளி வாயில் விட்டுக்கொண்டார்கள். காரச்சுவையிலிருந்து விடுபட முயன்றார்கள். ஓரளவு தாகமும், காரமும் அடங்கிய பிறகு, அவர்கள் குடிலுக்குத் திரும்பினார்கள். அமைதியாகத் தங்களைப் பார்த்த குருவிடம் கோபமாகக் கேட்டார்கள், ‘‘இப்படி எங்களைத் துன்பப்படுத்தி விட்டீர்களே! உங்களுக்கு விருப்பமில்லாவிட்டால் எந்தப் பெண்ணையும் நியமிக்க வேண்டாம், அதற்காக இப்படியா தண்டிப்பீர்கள்?’’

‘‘நான் தண்டிக்கவில்லை, பாடம்தான் நடத்தினேன்,’’ குரு மென்மையாகச் சொன்னார். ‘‘தாகத்தையும், காரத்தையும் தணித்துக்கொள்ள நீங்கள் குடித்தீர்களே, அந்தத் தண்ணீரில் மாட்டுச் சாணம் கரைத்து வைத்திருந்தேன்.’’ அப்படியே குமட்டிக்கொண்டு வந்தது மாணவர்களுக்கு.‘‘உங்கள் வேலைகளைக் குறைத்துக் கொள்வதற்காக, இதெல்லாம் பெண்கள் செய்யும் வேலை என்று சமாதானம் சொல்லிக்கொண்டு ஒரு பெண்மணியைப் பணிக்கு அமர்த்தலாம் என்று யோசனையும் சொன்னீர்கள். ஆனால், உங்களுடைய விடலைப் பருவத்தில் நீங்கள் அந்தப் பெண்ணை அவள் எந்த வயதுடையவளாக இருந்தாலும் சரி ஆசிரம பணிக்காக மட்டு மின்றி வேறு கோணத்திலும் நோக்க வாய்ப்பு இருக்கிறது. உங்களுக்குள் எழும் ஆசை அப்படிப்பட்டது. அதற்குத் தெரிந்ததெல்லாம் ஒரு பெண்.

அவ்வளவுதான்.அவளுடைய வயதோ, தகுதியோ, விருப்பமோ எதைப்பற்றியும் நீங்கள் சிந்திக்கமாட்டீர்கள். ஏனென்றால் உங்களுடைய ஆசை அப்படிப்பட்டது. அது புத்தியை நிலைகுலையச்செய்து விடும். கண்கள் அவளை சௌந்தர்யமானவளாகவே பார்க்கும். அவளுடைய குரட்டை ஒலியும் சங்கீதமாகவே கேட்கும். அவளிடமிருந்து எழும் துர்நாற்றமும் பரிமள சுகந்தமாகத் தோன்றும். தூக்கத்திலும் அவளைப் பற்றியே வாய் பிதற்றும். அப்படி உங்கள் மனம் கெட நான் உடந்தையாக இருக்கமாட்டேன். ஆசிரமப்பணி என்ற போர்வையில் நீங்கள் சபலப்படும் வகையில் எந்த ஒழுங்கீனத்தையும் நான் அனுமதிக்கமாட்டேன்.

அந்தந்த ஆசைக்கென்று அந்தந்த வயது இருக்கிறது. இப்போதைய உங்கள் நோக்கம், விருப்பமெல்லாம் கல்வியில் நன்கு தேர்ச்சி பெறுவதாக மட்டுமே இருக்கவேண்டும்,’’ என்றார் குருநாதர்.

தஸ்மாத்த்வமிந்திரியாண்யாதௌ நியம்யபரதர்ஷப
பாப்மானம் ப்ரஜஹி ஹ்யேனம் ஞானவிக்ஞானநாசனம் (3:41)

‘‘அர்ஜுனா, பரதவீரனே! முதலில் உன் ஐம்புலன்களுக்கு அணை கட்டி அவை உன் கட்டுப்பாட்டிலிருந்து மீறாமல் அடங்கிக் கிடக்குமாறு பார்த்துக்கொள். ஆசை என்பது பாப உணர்வு. அது நூலறிவால் பெறப்பட்ட ஞானத்தையும், அனுபவ அறிவால் பெறப்பட்ட விஞ்ஞானத்தையும் ஒருசேர அழிக்கும் நாசகாரியாகும்.’’ கிருஷ்ணன், அர்ஜுனனுக்குக் கொஞ்சம் கடுமையாகவே உபதேசிக்கிறார். காமத்தை, ஆசையை, அழித்து ஒழித்துவிடு என்கிறார். அழித்து ஒழிப்பது என்றால் முற்றிலுமாக நிர்மூலமாக்கிவிடுதல் என்று பொருளில்லை. ஒன்றின் அழிவில் இன்னொன்று உருவாவது இயற்கையின் விதி. மண்ணுக்குள் இடப்பட்ட விதை நசுங்கி, அழிந்தால்தான், அதனுள்ளிருந்து மரம் உருவாக முடியும். இது இயற்கையின் நியதி.

‘வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது?’ என்று கேட்டார் கவிஞர் கண்ணதாசன். ஆக, ஒரு அழிவில் இன்னொன்று உற்பத்தியாகிறது. அதன் இடத்தை இது பிடித்துக் கொள்கிறது. இந்த வகையில் எளிமையாகச் சொல்வதானால், ‘இருளை அழித்துவிடு’ என்றால் அங்கே ‘ஒளியைப் படரவிடு’ என்று பொருள். இந்திரியங்களை அடக்குதல் என்பது அவற்றை அழித்தல் அல்ல. அவை அழிந்தால், நாம் உயிர் வாழ்வதில் அர்த்தமே இல்லை.

கண்ணிருக்கும், பார்வை இருக்கும், ஆனால் எதையும் பாராதபடி கண்ணைக் கட்டுப்படுத்து. காது இருக்கும், செவித்திறன் இருக்கும், ஆனால் எதையும் கேளாதபடி இரு. மூக்கு இருக்கும், சுவாசம் இருக்கும், ஆனால் எதையும் நுகராமல் இரு. வாய் இருக்கும், ரசனை இருக்கும், ஆனால் எதையும் ருசிக்காமல் இரு. மேனி இருக்கும், தொடு உணர்வு இருக்கும், ஆனால் எதையும் ஸ்பரிசிக்காமல் இரு என்கிறார் கிருஷ்ணன்.

இப்படி கட்டுப்படுத்துவதால் அந்த ஆற்றலெல்லாம் எங்கே போகும்? மேன்மேலும் பொங்கிப் பொங்கிப் பிரவாகம் எடுக்காதா? அபிரிமிதமாக வேகம் எடுக்காதா? இந்த ஆற்றலை யெல்லாம் ஒருமுகப்படுத்தி, தனக்கு சமர்ப் பணம் செய்துவிடுமாறு கோருகிறார் கிருஷ்ணன். உதாரணமாக, ஒரு புலன் பாதிக்கப்பட்டவருக்கு, பிற புலன்களெல்லாம் தீட்சண்யமாகிவிடும். பார்வை இழந்த ஒருவருக்கு, காதுகள், மூக்கு, வாய், மேனி எல்லாமே கண்களாகி விடும்! அவர் செல்லும் பாதையில் மேடு பள்ளம் காரணமாக கால்கள் வேண்டுமானால் தடுமாறுமே தவிர, கண்கள் தவிர்த்த பிற புலன்கள் அவருக்குத் துணையாக வரும். காது ஒலியைப் பார்வையாக்க, நாசி நுகர்ச்சியைப் பார்வையாக்க, வாய் உரையாடலை பார்வையாக்க, படரும் காற்றின், உராயும் பொருட்களின் ஸ்பரிசத்தை மேனி பார்வையாக்க, அவரால் சுற்றுச் சூழல் முழுவதையும் பார்க்க முடிகிறது! அதே சமயம் எச்சரிக்கை உணர்வை, மனம் பார்வையாக்குகிறது. அதனால் அவர் தூங்கும்போதும் விழிப்புடன் இருக்கிறார்!

அதனால்தான் ‘அடக்குதல்’ என்பதை உணர்வு மாற்றமாகச் செய் என்கிறார் கிருஷ்ணன். அதாவது அந்த புலனுணர்வுகள் தன்னுடையது என்று ஒருவன் நினைத்துக்கொள்ளக் கூடாது என்பது அவருடைய அறிவுரை. தனக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத வகையில், தன்னுடைய ஐம்புலன்களின் இயக்கத்தையும் கவனிக்க வேண்டும் என்கிறார். அதாவது கண் பார்க்கிறது என்றால், ‘ஆமாம், பார்க்கிறது’ என்று சொல்லும் ஒரு சாட்சியாக மட்டுமே அவன் விளங்க வேண்டும்!

ஒரு சம்பவம்

கிருஷ்ணன், தான் வசித்த யமுனை ஆற்றின் எதிர்க்கரையில் ஒரு குடிலில் வாழ்ந்து வரும் முனிவருக்கு ஒரு பெரிய மூட்டையில் உணவுப் பொருட்களை அனுப்பிவைத்தார். அவ்வாறு உணவு கொண்டுசெல்லும் பொறுப்பை அவருடைய குடும்பத்துப் பெண்கள் சிலர் மேற்கொண்டார்கள். ஆனால், யமுனை சுழித்துக் கொண்டு பெருவெள்ளமாக ஓடுகிறதே, எப்படிக் கடப்பது? இதற்கும் கிருஷ்ணனே ஒரு வழி சொல்கிறார். ‘முனிவர் உணவு எதுவும் அருந்தாமல் உபவாசம் இருப்பவர் என்பது உண்மையானால், யமுனைநதி வழி விடட்டும்’ என்று பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அவ்வாறே அவர்களும் செய்ய, யமுனை இரண்டாகப் பிரிந்து அவர்களுக்கு வழிவிட்டது. இதைக் கண்டு பெரிதும் வியப்புற்ற அந்தப் பெண்கள், அக்கரைக்குச் சென்று முனிவரிடம், கிருஷ்ணன் கொடுக்கச் சொன்னார் என்று சொல்லி உணவு மூட்டையை அவர் முன்னால் வைத்தார்கள்.

உடனே அந்த மூட்டையைப் பிரித்துப் பார்த்த முனிவர், நிதானமாக, கொஞ்சம் கொஞ்சமாக, எல்லா உணவு வகைகளையும் சாப்பிட்டுவிட்டார். இருபது பேருக்கான உணவு வகைகள் அவை. எல்லாவற்றையும் இவர் ஒருவரே சாப்பிட்டு தீர்த்துவிட்டார். பெண்களோ இவரால் எப்படி இவ்வளவையும் சாப்பிட முடிந்தது என்று பெரும் வியப்புக்குள்ளானார்கள்.

சரி, கிருஷ்ணன் சொன்னதை நிறைவேற்றிவிட்டோம். நம் இருப்பிடத்துக்குத் திரும்பலாம் என்று கருதி வந்தால் யமுனை இப்போது, பிளவு படாமல், பாதை காட்டாமல் இணைந்து பெருவெள்ளமாக ஓடிக் கொண்டிருந்தது. எப்படி கடப்பது இதை? வரும்போது கிருஷ்ணன் சொன்னபடி உச்சரித்தோம், யமுனை பிரிந்து வழிவிட்டது. இப்போது என்ன உபாயம் செய்வது? ஒன்றும் புரியாத அவர்கள் முனிவரிடமே போனார்கள். ‘வழி காட்டுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார்கள். ‘‘அதேதான், ‘முனிவர் உணவு எதுவும் அருந்தாமல் உபவாசம் இருப்பவர் என்பது உண்மையானால், யமுனை நதி வழி விடட்டும்’ என்று பிரார்த்தனை செய்யுங்கள்,’’ என்றார் முனிவர். திகைத்தார்கள் பெண்கள்.

நம் கண் முன்னாலேயே எத்தனையோ பேர் சாப்பிடக்கூடிய உணவு எல்லாவற்றையும் உண்டு விட்டு, உபவாசம் இருக்கிறார் என்று எப்படிப் பொய் சொல்வது? ஆனாலும் சந்தேகத்துடன் யமுனைக் கரையில் போய் நின்று அப்படியே சொல்ல, என்ன ஆச்சரியம், யமுனை வழி விட்டது!பெண்கள் பெரிதும் குழப்பமடைந்தார்கள். ‘இது என்ன அநியாயம்?’ என்று கிருஷ்ணனிடமே கேட்டார்கள். மெல்லச் சிரித்தார் கிருஷ்ணன்.

‘அவர் தன் உணர்வுக்கு மதிப்பளிப்பவர் இல்லை. அவர் பசியையும் உணர்ந்தவர் இல்லை. பசி தீர்ந்ததையும் உணர்ந்தவர் இல்லை. இரண்டுக்கும் அவர் வெறும் சாட்சியாகத்தான் இருந்தாரே தவிர, தன்னிலிருந்து விலகி நின்று பார்த்துக் கொண்டுதான் இருந்தாரே தவிர, அந்த இரு நிலைகளையும் அவர் உணரவே இல்லை’ என்று பதிலளித்தார். அர்ஜுனனிடமும் இதைத்தான் சொன்னார் கிருஷ்ணன். ‘நீ பார்க்கிறாய் என்றாலும், வெறும் சாட்சியாக மட்டும் இரு. இந்த சாட்சி பாவம் உன் இந்திரியங்களை உன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும்.’

(கீதை இசைக்கும்)

தொகுப்பு: பிரபு சங்கர்

The post உணர்வுக்கு மதிப்பளிக்காதே! appeared first on Dinakaran.

Tags : Kunkum ,
× RELATED கவுன்சலிங் ரூம்