×

215 ரன் சேசிங் செய்வது எளிதானது அல்ல: கேப்டன் மார்க்ரம் பேட்டி

ஜெய்ப்பூர்:16வது சீசன் ஐபிஎல் தொடரில் ஜெய்ப்பூரில் நேற்றிரவு நடந்த 52வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-ராஜஸ்தான் ராயல்ஸ் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 214 ரன் குவித்தது. அதிகபட்சமாக பட்லர் 59 பந்தில், 10 பவுண்டரி, 4 சிக்சருடன் 95 ரன் விளாசினார். ஜெய்ஸ்வால் 18 பந்தில், 35 ரன் எடுக்க, கேப்டன் சஞ்சு சாம்சன் நாட் அவுட்டாக 38 பந்தில் 4 பவுண்டரி, 5 சிக்சருடன் 66 ரன் அடித்தார். பின்னர் களம் இறங்கிய ஐதராபாத் அணியில், அன்மோல்பிரீத் சிங் 33 ரன்னில் வெளியேற அபிஷேக் சர்மா 55 (34 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), ராகுல்திரிபாதி 47 ரன் (29 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். ஹென்ரிச் கிளாசென் 12 பந்தில், தலா 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 26 ரன்னில் அவுட் ஆக கேப்டன் மார்க்ரம் 6 ரன்னில் எல்பிடபிள்யூ ஆனார். 7 பந்தில், ஒரு பவுண்டரி, 3 சிக்சருடன் 25 ரன் அடித்த க்ளென் பிலிப்ஸ் 19வது ஓவரில் அவுட் ஆனார்.

கடைசி ஓவரில் 17 ரன் தேவைப்பட்ட நிலையில், சந்தீப் சர்மா வீசினார். முதல் பந்தில் 2 ரன் எடுத்த அப்துல் சமத் 2வது பந்தில் சிக்சர் விளாசினார். 3வது பந்தில் 2, 4வது மற்றும் 5வது பந்தில் தலா ஒரு ரன் எடுக்க கடைசி பந்தில் 5 ரன் தேவைப்பட்டது. அந்த பந்தில் அப்துல் சமத் கேட்ச் ஆக வெற்றி பெற்றதாக ராஜஸ்தான் அணியினர் கொண்டாடினர். ஆனால் அந்த பந்து `நோ பால்’ என அறிவிக்கப்பட்டது. இதனால், 1 பந்தில் 4 ரன் தேவைப்பட அப்துல் சமத் சிக்சருக்கு தூக்கினார். இதனால், சன்ரைசர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்துல் சமத் 17 (7 பந்து, 2 சிக்சர்), மார்கோ ஜான்சன் 3 ரன்னில் களத்தில் இருந்தனர். க்ளென் பிலிப்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். இரு அணிகளும் ஏற்கனவே கடந்த ஏப்.2ம் தேதி மோதிய போட்டியில் ராஜஸ்தான் 72 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் நேற்று சன்ரைசர்ஸ் பழிதீர்த்துக்கொண்ட.து. வெற்றிக்கு பின் சன்ரைசர்ஸ் கேப்டன் மார்க்ரம் கூறியதாவது: வெற்றி வெற்றது மகிழ்ச்சி. 215 ரன் இலக்கை துரத்துவது எளிதானது அல்ல. இதற்கு அனைவரும் பங்களித்தனர்.

இதுபோன்ற விரைவான அவுட்ஃபீல்டில் எதிர்பார்த்ததை விட அதிகமாக ஸ்கோர் செய்வோம் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் நாங்கள் ஆக்ரோஷமாக இருக்க வேண்டியிருந்தது. அபிஷேக் சிறப்பாக தொடங்கினார். திரிபாதி அவருக்கு கம்பெனி கொடுத்தார். பின்னர் பிலிப்ஸ் மற்றும் கிளாசென் அதிரடியாக ஆடினர். சமத்தின் ஃபினிஷிங் திறமையைப் பற்றி தெரியும்’’ என்றார். ஆட்டநாயகன் க்ளென் பிலிப்ஸ் கூறுகையில், இரு அணிக்கும் வாய்ப்பு இருந்த நிலையில் சிறப்பாக ஆடி வென்றதில் மகிழ்ச்சி. அணிக்கு இதுபோன்ற ஆட்டம் தான் தேவை. அதற்காக தான் நாங்கள் இங்கே இருக்கிறோம். நான் அவுட் ஆனது அடிக்க வேண்டிய பந்துதான். இதனால் ஏமாற்றம் அடைந்தேன். கடைசி ஓவரில் நான் களத்தில் இருந்திருக்கவேண்டும். ஆனால் சமத் அதை சிறப்பாக செய்து முடித்தார். மேலும் நோபால் எங்களுக்கு அதிர்ஷ்டமாக அமைந்தது என்றார்.

The post 215 ரன் சேசிங் செய்வது எளிதானது அல்ல: கேப்டன் மார்க்ரம் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Markram ,Jaipur ,Sunrisers ,Hyderabad ,Rajasthan Royals ,16th IPL ,Dinakaran ,
× RELATED டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன்...