×

பெண்களே பெண்களுக்காக நடத்தும் தொழில் வளர்ச்சி பஜார்!

ஊரடங்கு நாட்கள்ல எல்லோரும் என்ன பிஸினஸ் செய்யலாம்னு யோசிச்சிருப்பாங்க. ஆனால் நாங்க மட்டும் இன்னும் வித்யாசமா ஏன் பிஸினஸ் செய்கிற பெண்களை எல்லாம் ஒண்ணு சேர்க்கக் கூடாதுன்னு யோசிச்சோம்’ தன்னம்பிக்கையுடன் பேசுகிறார் குன் ஜெயின். பொதுவாகவே ஒரு தொழில் துவங்க திட்டமிடுவதோ, அல்லது மூலதனம் போடுவதோ இதெல்லாம் விட பெரிய வேலையே அந்தத் தொழிலை குறிப்பிட்ட வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதுதான். பலரும் அங்கேதான் தடுமாறுவார்கள். தனித்துவமான கற்பனை, தொழில் எனத் துவங்கி அதனை தகுந்த மக்களிடம் சேர்க்க முடியாமலே தொழிலை கைவிட்ட எத்தனையோ மக்கள் உள்ளனர். அதற்குதான் வழிவகுக்கும் விதமாக ஒவ்வொரு மாதமும், விழாக்களின் போதும் இப்படியான தொழில் முனையும் பெண்களை ஒன்றிணைத்து பஜார், ஸ்டால்கள், என அமைத்து தொழில் பெருக்கும் யுக்திகளை செய்கிறார்கள் குன் ஜெயின், சிரி சந்தனா மற்றும் இஷிதா ஆகிய மூவர் அடங்கிய ‘ஒயில்ட் மிலன்’ குழு.

‘என்னுடைய முதல் பார்ட்னர் சிரி சந்தனா, அவங்களும் ஒரு பிஸினஸ் செய்கிற பெண். ரெண்டு பிராண்ட் வெச்சிருக்காங்க. அவங்க சொந்த ஊர் ஆந்திரா. வீட்டில் இருந்தே ஆன்லைன் வெப்சைட் மூலமா டெக்ஸ்டைல், லைஃப்ஸ்டைல் புராடெக்ட் விற்பனை செய்றாங்க. இன்னொரு பார்ட்னர் இஷிதா, அவங்களும் நானும் நீண்ட நாட்கள் நண்பர்கள். நான் சோசியல் மீடியா இன்ஃபிளூயன்சர். எங்களுடையது மார்வாடி ஜெயின் குடும்பம், சென்னைதான் எனக்கு சொந்த ஊர், ஆனால் பூர்வீகம் வட இந்தியா. இஷிதா அடிப்படையிலே ஒரு மருத்துவர், இலங்கை தமிழ் பெண். கூடவே இன்ஃபிளூயன்சராவும் புராடெக்ட் புரமோஷன்கள் செய்வாங்க, டிஜிட்டல் மார்கெட்டிங் எல்லாம் என் கூடவே சேர்ந்து செய்திட்டு இருந்தாங்க. அப்படி எங்க கிட்ட தன்னுடைய புராடெக்ட்க்காக வந்தவங்கதான் சிரி சந்தனா. அப்போ மூணு பேருக்குமே இந்த பஜார், லைஃப்ஸ்டைல் பொருட்கள் விற்பனை செய்கிற குட்டிக்குட்டி ஸ்டால்கள் ஏன் போடக்கூடாதுன்னு ஒரு எண்ணம் இருந்துச்சு. மூணு பேருக்குமே அதிலே ஆர்வம் இருந்த காரணம் ஏன் நாம தொழில் செய்கிற பெண்களுடைய பிஸினஸ் வளர்ச்சிக்கு உதவக் கூடாதுன்னு தோணுச்சு’ அப்படி யோசித்தத் தருவாயில் அவர்களுக்குக் கை கொடுத்திருக்கிறது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள்.

‘இனிமே சமூக வலைத்தளங்களைத்தான் பொருட்கள் விற்கிற தளமாகவும், வாங்குகிற தளமாகவும் பயன்படுத்தப் போறோம். இனிமே கஸ்டமர்கள்தான் மாடல்கள், புரமோஷனும் இனிமே அங்கேதான் நடக்கும். இந்த நுணுக்கம் புரிஞ்சாலே எல்லோரும் பிஸினஸில் வெற்றியடையலாம். ஏன் தொழில் துவங்குகிற பெண்களுக்கு உதவுகிற மாதிரி பஜார்கள் போடக்கூடாது அவங்களுக்கும் கஸ்டமர்கள் கிடைக்கச் செய்யலாமேன்னு நினைச்சோம். இன்ஸ்டாகிராம், உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாகவே புரமோஷன்கள் எல்லாம் கொடுத்தோம். நிறைய இளம் பெண்கள், ஹவுஸ் ஒயிஃப்ஸ், வேலைக்குப் போயிகிட்டே வீட்டில் தனக்குன்னு ஒரு பிஸினஸ் செய்கிற மக்கள்ன்னு ஏராளமான பெண்கள் எங்களைத் தொடர்புக் கொண்டாங்க. ஊரடங்கு காலத்திலேதான் நிறைய பெண்கள் வீட்டிலிருந்தே பிஸினஸ் செய்ய ஆரம்பிச்சிருக்காங்க. குறிப்பா கொரோனா காலத்திலே சில பெண்களுடைய கணவர்களுடைய வேலையில் பிரச்னை, அல்லது பிஸினஸில் தொய்வு இப்படியான வேளை நாமளும் குடும்ப வருமானத்துக்கு எதாவது செய்யலாமேன்னு ஆரம்பிச்சப் பெண்கள் ஏராளம். ஆனால் அதனை கஸ்டமர்கள் கிட்டே சேர்க்கறதுக்குத்தான் நிறைய பேர் கடினமான சூழலை சந்திச்சிருக்காங்க’ நிறைய வித்யாசமான தொழில் ஐடியாக்கள், இப்படியெல்லாம் கூடவா பிஸினஸ் செய்யலாம் என்கிற ஆச்சர்யம் இவர்களுக்கே உண்டாகியிருக்கிறது.

‘எங்களைத் தொடர்பு கொண்ட ஒரு சில பெண்களுடைய புராடெக்ட் ஐடியாக்கள் ரொம்ப தனித்துவமா இருந்துச்சு. ஒரு சின்னப் பொண்ணுதான் இந்த வேஸ்ட் பாக்கெட்கள், மசாலா பாக்கெட்கள், பிளாஸ்டிக் பைகள், இதெல்லாம் கொண்டு ரொம்ப அற்புதமா ஹேண்ட்பேக்ஸ், பர்ஸ், வேலட் இதெல்லாம் செய்திருந்தாங்க. அவங்களா ‘அது மசாலா பாக்கெட்’ ன்னு சொன்ன பிறகுதான் எங்களுக்கே தெரிஞ்சது. அடுத்து ஒரு பொண்ணு வேஸ்ட் அட்டைகள், கார்ட் போர்டுகள்ல டீ ஸ்டூல், டேபிள் இப்படியான ஃபர்னிச்சர்கள் செய்யறாங்க. ஒரு பொண்ணு நேச்சுரல் பூக்கள், இலைகள் கொண்டு நெக்லஸ், தோடு இதெல்லாம் செய்யறாங்க. இப்படி வித்யாசமா யோசிக்கக் கூடிய பெண்கள் தங்களுடைய புராடெக்ட்களை விற்க வாய்ப்பு உண்டாக்கணும்னு நினைச்சோம். சிலருக்கு இன்ஸ்டா பக்கங்கள், ஆன்லைன் மார்கெட்டிங் உதவிகள் எல்லாம் செய்திருக்கோம். எந்த விழாக்காலம் நெருங்கினாலும் அதற்கான பஜார் ‘ஒயில்ட் மிலன்’ குழுவான நாங்க அமைச்சிடுவோம். அங்கே பெண்கள் தங்களுடைய ஸ்டால்களை அமைச்சு புராடெக்ட்களை விற்பனை செய்யலாம். மேலும் பஜார்களுக்கு சிறப்பு விருந்தினர்களாகவும் சமூக வலைத்தள பிரபலங்கள், செலிபிரிட்டிகள் வருகை இருக்கும். இதனால் அவங்க புராடெக்ட்களும் குறிப்பிட்ட மக்களுக்கு போய் சேரும். வெற்றிகரமா 9வது பஜார் நடத்திட்டோம். பெரும்பாலும் ஸ்டால் போட்ட மக்கள் பஜார் முடிக்கும் போது நிச்சயம் ஒரு 30 கஸ்டமர்களையாவது பிடிச்சிடுவாங்க’ மகிழ்வுடன் சொல்கிறார்கள் இந்த மூவர் பெண்கள் குழு.
– ஷாலினி நியூட்டன்

The post பெண்களே பெண்களுக்காக நடத்தும் தொழில் வளர்ச்சி பஜார்! appeared first on Dinakaran.

Tags : Women's Business Development Bazaar ,Nanga ,Dinakaran ,
× RELATED வீட்டு வேலைக்காரர்களை கட்சி...