×

திருப்பத்தூர் மாவட்டத்தில் போலீசார் அதிரடி 50 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு-குண்டர் சட்டம் பாயும் என எஸ்பி எச்சரிக்கை

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் சாராயத்தை ஒழிக்க எஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 33 போலீசார் குழுக்களாக அமைத்து சாராய ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று தமிழக- ஆந்திர மாநில எல்லையை ஒட்டியுள்ள கோரிப்பள்ளம், மாதகடப்பா பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதில் 50 ஆயிரம் லிட்டர் கள்ளச் சாராய ஊறலும், ஊறல் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது.இதுகுறித்து எஸ்பி பாலகிருஷ்ணன் கூறியதாவது:
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் ஒழிப்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு கள்ளச்சாராயம் தமிழக- ஆந்திர எல்லை பகுதிகளில் இருந்து கடத்திவரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்ததன் பேரில் இன்று(நேற்று) வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையில் குழுக்கள் ஆந்திர மாநில எல்லை பகுதியான மாத கடப்பா, கோரிப்பள்ளம், வெலதிகாமணி பெண்டா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிரடி சாராயவேட்டை நடத்தி அங்கு சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட ஊறல்கள் மற்றும் சாராய அடுப்புகள், பெரிய பேரல்கள் உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கினர்.

மேலும் தொடர்ந்து இந்த சாராய வேட்டையானது நடைபெறும். மாவட்டத்தில் ஒரு சொட்டு சாராயம் இல்லாத மாவட்டமாக மாற்றி அமைக்க முழு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சாராயம் விற்பது தெரிய வந்தால் பொதுமக்கள் உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம். சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்கள் தொடர்ந்து பிடிப்பட்டால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post திருப்பத்தூர் மாவட்டத்தில் போலீசார் அதிரடி 50 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு-குண்டர் சட்டம் பாயும் என எஸ்பி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tirupattur district ,Tirupattur ,SP ,Balakrishnan ,Dinakaran ,
× RELATED மண்டைய உடைக்குறாங்க… மரியாதை கொடுக்க...