×

ஓடகுளம் கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் 580 காளைகளுடன் மல்லுகட்டிய வீரர்கள்-மாடுமுட்டியதில் 15 பேர் காயம்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள ஓடகுளம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இதில் 580 காளைகள் களம் கண்டு சீறிபாய்ந்தது. இதில் 15 பேர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை அருகே உள்ள ஓடகுளம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. முன்னதாக கடந்த ஒரு வாரமாக கிராமத்தினர் ஜல்லிகட்டு ஏற்பாடுகைளை செய்து வந்தனர். பேரிகாடு அமைப்பது, வாடிவாசலில் தேங்காயநார் போடுவது மேலும் பார்வையாளர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்துவந்தனர்.

இதனை பார்வையிட்ட வருவாய்துறை மற்றும் போலீஸ்சார் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கினர். இதனையடுத்து நேற்று ஜல்லிகட்டு தொடங்கியது. ஜல்லிக்கட்டு தொடங்கும் முன்பு மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ஜல்லிக்கட்டை சுற்றுசூழல்துறை அமைச்சர் மெய்யநாதன், எம்எல்ஏ டாக்டர் முத்துராஜா, நகர செயலாளர் செந்தில் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதனை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. இதனை தொடர்ந்து மற்ற காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப்பாய்ந்தப்படி சென்றது. இதனை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர்.

இதில் சில காளைகள் களத்தில் நின்று விளையாடின.காளைகள் அவிழ்த்து விடப்படும் போது அதன் உரிமையாளர் மற்றும் காளையின் பெயரை விழாக்குழுவினர் ஒலிபெருக்கியில் அறிவித்தப்படி இருந்தனர். இதேபோல மாடுபிடி வீரர்களும் விடா முயற்சியுடன் காளைகளின் திமிலை பிடித்து அடக்கினர். மாடுகள் சீறினாலும் துணிந்து சில வீரர்கள் களம் கண்டனர். அப்போது மாடுபிடி வீரர்களை விழாக்குழுவினர், பார்வையாளர்கள் பாராட்டினர்.

காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், வெள்ளி நாணயம், மின் விசிறி, சைக்கிள் மற்றும் ரொக்க பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, சிவகங்கை உள்பட பல மாவட்டங்களில் இருந்து காளைகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்திருந்தனர். மொத்தம் 580 காளைகள் பங்கேற்றன.

காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் 250 களம் கண்டனர். ஜல்லிக்கட்டை காண சுற்றியுள்ள கிராமத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பார்வையாளர்கள் அதிகம் பேர் வந்திருந்தனர். காளைகளை அடக்கியதில் மாடு பிடி வீரர்கள் 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்க வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில்3 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜல்லிகட்டுல் 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் ஜல்லிக்கட்டிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

The post ஓடகுளம் கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் 580 காளைகளுடன் மல்லுகட்டிய வீரர்கள்-மாடுமுட்டியதில் 15 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : jallikattu ,Odakulam village ,Pudukottai ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...