×

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிப்பு..!!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 25ம் தேதி நடைபெற்ற டிஎன்ஏ பரிசோதனைக்கு 11 பேரில் 3 பேர் மட்டுமே வந்திருந்தனர். மீதமுள்ள 8 பேர் வரவில்லை என்பதால் அவர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்பி வரவழைப்பதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் அடுத்தகட்டமாக 10 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் கொடுத்தனர். அதில் வேங்கைவயல் பகுதியை சேர்ந்த 2 நபர்களும், இரையூர் கிராமத்தை சேர்ந்த 7 நபர்கள் மட்டுமல்லாமல் கீழமுட்டுகாடு கிராமத்தை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 10 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பினர்.

இரையூர் மற்றும் மேலமுட்டுகிராமத்தை சேர்ந்த 8 பேர் ரத்தமாதிரி பரிசோதனைக்கு வந்திருக்கின்றனர். அவர்களுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள சட்ட மருத்துவ துறை சார்பில் ரத்தமாதிரி சேகரிப்பு நடைபெற்று வருகிறது. வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 2 நபர்கள் வரவுள்ளதாகவும் தகவல் தெரியப்பட்டது. இந்த வழக்கை பொறுத்தவரையில் கிட்டத்தட்ட 140 நாட்களை கடந்து விசாரணை நடைபெற்று வருகிறது. முதலில் தமிழக காவல்துறையினர் 20 நாட்கள் விசாரணை மேற்கொண்டுவந்தனர். அவர்கள் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் தற்போது சிபிசிஐடி போலீசார் வழக்கை 123 வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே 153 சாட்சியங்களை விசாரிக்கப்பட்ட நிலையில் அதில் 7 காவலர்கள் உள்ளடங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கை குறித்து ஏற்கனவே குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் எடுக்கப்பட்ட மாதிரிகளை சென்னையில் உள்ள தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி இருந்தனர். இதில் 3 பேரின் மரபணு மாதிரிகள் இருப்பதாக தெரியவந்ததின் அடிப்படையில் தான் வேங்கைவயல், இரையூர், கீழமுட்டுகாடு, காவேரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர்தொட்டி அமைந்துள்ள பல்வேறு பகுதிகளை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 119 நபர்களுக்கு ரத்தமாதிரி பரிசோதனை எடுத்து அதன் மூலம் டிஎன்ஏ பரிசோதனை எடுக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டிருந்தனர்.

அதன் அடிப்படையில் கடந்த 25ம் தேதி 11 நபர்களுக்கும் இன்று 10 நபர்களுக்கும் டிஎன்ஏ பரிசோதனை மாதிரி எடுக்க திட்டமிட்டிருக்கிறது. டிஎன்ஏ மாதிரி பரிசோதனை பொறுத்தவரையில் ஏற்கனவே அந்த குடிநீர் தொட்டியில் எடுக்கப்பட்ட மாதிரிகளுடன் இந்த மாதிரிகள் ஒத்துபோகிறதா?அதன் மூலம் இந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்படுகிறதா? என்பதற்காக சிபிசிஐடி போலீசார் இந்த முடிவை எடுத்துள்ளனர். இந்த வழக்கை பொறுத்தவரையில் நேரடி சாட்சியங்கள் ஏதும் இல்லாத சூழலில் இது போன்ற அறிவியல் பூர்வமான சாட்சியங்களை வைத்து விசாரணையை முன்னெடுக்கவேண்டிய நிலைக்கு சிபிசிஐடி போலீசார் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

கடந்த மரபணு சோதனையின் போது 8 பேர் வராதது சிக்கலாக பார்க்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 2 வருவதாக தகவல் தெரிவித்தனர். வராத 8 பேர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர் . குறிப்பிட்ட எங்களை மட்டும் அதிகப்படியாக வர சொல்வதாகவும் அவர்கள் குற்றசாட்டு வைத்தனர். ஆனால் சிபிசிஐடி போலீசார் அதற்கு விளக்கமளித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 119 பேருக்கு டிஎன்ஏ மாதிரி எடுக்கப்போவதாகவும் யாரையும் குறிப்பிட்டு எடுக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.

டிஎன்ஏ பரிசோதனையில் அனைத்து மக்களும் ஒத்துழைப்பார்கள் என்று சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து மூன்று மாத காலத்திற்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை நீதிமன்றம் தனிநபர் ஆணையத்தை அமைத்திருந்தது. ஆணையத்தின் தலைவர் சத்திய நாராயணன் நேற்று முன்தினம்வருகை தந்தார். வழக்கில் அதிகாரிகள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவான விசாரணை மேற்கொண்டு வந்தார். சிபிசிஐடி போலீசார் ரத்தமாதிரி பரிசோதனையை முடித்த பின்பு தான் அடுத்தகட்ட விசாரணையை தொடங்கவுள்ளனர்.

The post புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Vengai ,Pudukottai district ,Venkai Valley ,Dinakaran ,
× RELATED மக்காச்சோளம் சாகுபடியில் படைப்புழுவை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம்