×

கோடை விடுமுறையையொட்டி ஆழியாரில் குவிந்த சுற்றுலா பயணிகள் பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர்

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு, கோடை கால பள்ளி விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.நேற்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அதிகளவு பூங்காவில் குவிந்து உற்சாகமாக பொழுதை கழித்தனர். சிறுவர்,சிறுமிகள் விளையாடி மகிழ்ந்தனர். கோவை மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் ஆங்காங்கே சுற்றுலாத்தலங்கள் இருந்தாலும், பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு, தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த ஆண்டில் ஜனவரி மாதம் வரையிலும் சுற்றுலா பயணிகள் வருகை, ஓரளவு இருந்தது.

அதன்பின் பிப்ரவரி மாதத்திலிருந்து வெயிலின் தாக்கத்தால், முக்கிய விடுமுறை நாட்களை தவிர பிற நாட்களில் ஆழியார் அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவாக இருந்தது. அதன்பின் கடந்த இரண்டு வாரமாக வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்ததுடன்,பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் வருகை மீண்டும் அதிகரித்தது.

அதிலும், கடந்த ஒரு வாரமாக ஆழியாருக்கு வரும் சுற்றுலா பணிகள் எண்ணிக்கை அதிகமானது.வழக்கமாக நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருவார்கள். ஆனால் தற்போது 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதில் கடந்த இரு நாட்களும், ஆழியார் அணைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
கோவை சுற்றுவட்டார பகுதியிலிருந்து மட்டுமின்றி திருப்பூர்,ஈரோடு,சேலம்,திண்டுக்கல்,மதுரை மற்றும் கேரளமாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கார்,வேன்,பஸ் ஆகிய வாகனங்களில் அதிகளவில் வந்திருந்தனர்.அவர்கள் வந்த வாகனங்கள் ஆங்காங்கே வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தது.

அணை பகுதி மற்றும் பூங்காவிற்கு செல்வதற்காக, டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் எடுத்து சென்றனர். கூட்டம் அதிகளவில் இருந்தபடியால் டிக்கெட் எடுக்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுற்றுலா பயணிகள், அணையின் மேல்பகுதியில் வெகு நேரம் சுற்றிபார்த்துவிட்டு, பின் பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்பட்டு வரும் அணைக்கு முன்புள்ள பூங்காவில் பல மணிநேரம் பொழுதை மகிழ்ச்சியாக கழித்தனர்.

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை என ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். மேலும், சுற்றுலா பயணிகள் பலர் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இரண்டு ஆண்டுக்கு முன்பு இருந்த கட்டணத்தை விட மூன்று மடங்கு கட்டணம் உயர்ந்திருந்தாலும், பலரும் ஆர்வமுடன் படகு சவாரி செய்தனர். கூட்டம் அதிகமாக இருந்தாலும், பலர் வெகுநேரம் காத்திருந்து சவாரி செய்து மகிழ்ந்தனர்.

பள்ளி முழுஆண்டு தேர்வு விடுமுறையையொட்டி ஆழியாருக்கு சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தைவிட அதிகமாக இருந்ததால், ஆழியார் பூங்கா முன்பு வால்பாறை சாலை போக்குவரத்து நெரிசலுடன் காணப்பட்டது. இதனால், போலீசார் ஆங்காங்கே நின்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த மாதத்தில் கடந்த 7 நாட்களில் மட்டும் சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாகவும். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கோடை விடுமுறையையொட்டி ஆழியாரில் குவிந்த சுற்றுலா பயணிகள் பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர் appeared first on Dinakaran.

Tags : Azhiyar ,Pollachi ,Aliyar dam ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...