×

உத்தமபாளையத்தில் வீடற்ற ஏழை,எளிய மக்களின் நலனுக்காக 700 அடுக்குமாடி குடியிருப்புகள் ‘ரெடி’-அரசு நிர்ணயத் தொகையை வழங்கி வீடு பெறலாம்

கம்பம் : தேனி மாவட்டத்தில் போடி, கம்பம், சின்னமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், அரசு பள்ளி கட்டிட பணிகள், புதிய வகுப்பறை கட்டும் பணிகள், பல்வேறு கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பணிகள் தற்போது ராக்கெட் வேககத்தில் படுஜோராக நடந்து வருவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

தேனி மாவட்டத்தில், உத்தமபாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதி மக்களுக்காக, குடிசை மாற்று வாரியத்தால் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் பெறுவதற்கு சிறப்பு முகாம் கம்பம் நகராட்சியில் கடந்த 4ம் தேதி நடைபெற்றது. இம்முகாமில் வீடற்ற பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழைகள், கணவன் மற்றும் மனைவியின் ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ரூ.10 ஆயிரத்துக்கான டி.டி.யுடன் மனு அளித்தனர்.

வீடு ஒன்றுக்கு ரூ.2 லட்சத்து 34 ஆயிரம் என தோராயமாக தமிழ்நாடு நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் 130 கிராம ஊராட்சிகள், 6 நகராட்சிகள், 22 பேருராட்சிகள் உள்ளன. பெருகி வரும் மக்கள்தொகைக்கு தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

உத்தமபாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட உத்தமபாளையத்திலிருந்து கோம்பை செல்லும் ரோட்டில் சிக்கச்சி அம்மன் கோயில் மேடு அருகில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் சார்பில் 480 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. ஒன்றிய, மாநில அரசுகளின் மானியம் கழித்தது போக ஒரு வீட்டின் விலையாக ரூ.2 லட்சத்து 12 ஆயிரம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை சிக்கச்சி அம்மன் கோயில் மேடு பகுதிகள் கட்டப்பட்டுள்ள 480 வீடுகளில் 40 வீடுகள் பொதுமக்களுக்கு விற்பனை 100 வீடுகளுக்கு மேல் வீடு வேண்டி பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.

அதேபோல கூடலூரில் இருந்து குமுளி செல்லும் ரோட்டில் உள்ள தம்மனம்பட்டியில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் சார்பில் 300 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஒன்றிய, மாநில அரசுகளின் மானியம் கழித்தது போக வீடு ஒன்றுக்கு ரூ.2 லட்சத்து 34 ஆயிரம் என தோராயமாக தமிழ்நாடு நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தம்மனம்பட்டியில் பட்டா வழங்கிய 36 பேர்கள் கழித்தது போக எஞ்சியுள்ள 264 வீடுகளுக்கு மனுக்கள் வாங்கும் சிறப்பு முகாம் உத்தமபாளையம் தாலுகாவில் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு வாரியம் சார்பில் கம்பம் காட்டுப்பள்ளிவாசல் ரோட்டில் ஆதி திராவிடர்களுக்கு என 336 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த குடியிருப்புகள் முழுவதும் ஆதிதிராவிடர் தவிர பிற வகுப்பினர் யாரும் குடியேற முடியாது. குடியிருப்புகள் இந்த வருட இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கம்பத்தில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் வருவதால் அப்பகுதி முழுவதும் நிலத்தின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து உதவி பொறியாளர் ராஜாராம் கூறுகையில், ‘‘பொருளாதாரத்தில் நலிவுற்ற, சொந்த வீடு இல்லாத ஏழைகள் அனைவரும் இத்திடத்தின் கீழ் பயன்பெற தகுதியானவர்கள். தகுதியுள்ள ஏழைகளை கண்டறிந்து, அவர்களுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள தொகையினை பெற்றுக்கொண்டு வீடு ஒதுக்கப்படும். முன்னாள் மனு அளிப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் வீடற்ற பொதுமக்கள் பயன்பெற வேண்டுமென்றார். முகாமில் மனு அளிக்க தவறியவர்கள் 9789005518, 8838561894,9787575962,9629168513 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பகுதி மேலாளர்களிடம் மனுக்களை அளிக்கலாம்.

மக்கள் பெரியளவில் பயனயடைவார்கள்

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘கடந்த 2021ம் ஆண்டு மே 7ம் தேதி தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் முதல்முறை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பதவியேற்ற காலகட்டம் தமிழகம் பெரும் தள்ளாட்டத்தில் இருந்தது. கொரோனா பெருந்தொற்று, பருவமழை பாதிப்புகள், நிதிச்சுமை என நெருக்கடிகள் அடுத்தடுத்து வந்தன. அவற்றே செம்மையாக ஒருபக்கம் கையாண்டு கொண்டே, மறுபுறம் மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தினார். அதுவும் முதல் நாளில் இருந்தே களப்பணியை தொடங்கி விட்டார். அவற்றில் கிராமங்களின் மேம்பாட்டிற்காக செய்த விஷயங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன. இதில் பல்வேறு திட்டங்கள் நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது. வீடற்ற பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழைகளுக்காக குடிசை மாற்று வாரியத்தால் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு நிர்ணய விலையில் தருவது பலருக்கு பெரும் பயனுள்ளதாக உள்ளது’’ என்றனர்.

The post உத்தமபாளையத்தில் வீடற்ற ஏழை,எளிய மக்களின் நலனுக்காக 700 அடுக்குமாடி குடியிருப்புகள் ‘ரெடி’-அரசு நிர்ணயத் தொகையை வழங்கி வீடு பெறலாம் appeared first on Dinakaran.

Tags : Utthampalam ,Theni ,Podi ,Polam ,Chinnamanur ,Antipati ,Uthamapalam ,
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்