×

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.10 கோடி செலவில் நவீன சந்தை: அமைச்சர் பி.கே. சேகர்பாபு பேட்டி

சென்னை: சென்னை கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலை பகுதியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நவீன சந்தை அமைக்கப்படுவது தொடர்பாகவும் புழல், மேட்டுப்பாளையம், சீனிவாசன் தெருவில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்தை ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பது தொடர்பாகவும் புழல், மகாலட்சுமி நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் புதிய பள்ளி வளாகம் ரூ.4 கோடி மதிப்பீட்டில் அமைப்பது தொடர்பாகவும் சமுதாயக்கூடம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படுவது தொடர்பாகவும், திருவொற்றியூரில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் வடசென்னை மக்களுக்கு பயன்படும் வகையில் சுமார் 5 கிலோ மீட்டர் நீளம் உள்ள கடற்கரையை மேம்படுத்துவது தொடர்பாகவும் நேரடியாக சென்று அமைச்சர் பி.கே.சேகர் பாபு இன்று காலை களஆய்வு மேற்கொண்டார். இதன்பிறகு அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: தமிழ்நாடு சட்டசபையில் இந்த நிதியாண்டுக்கான அறிவிப்புகளில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு 50 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது.

இதில் சென்னையில் உள்ள 26 சட்டமன்ற தொகுதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளை துரிதமாக செயல்படுத்தும் வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலைப் பகுதியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நவீன சந்தை அமைக்கப்படும். மாதவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புழல், மேட்டுப்பாளையம், சீனிவாசன் தெருவில் உள்ள கால்பந்து மைதானத்தை சிறந்த முறையில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து தரப்படும். புழல், மகாலட்சுமி நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியை கான்கிரீட் தளத்துடன், அனைத்து அடிப்படைத் தேவைகளுடன் கூடிய நடுநிலைப் பள்ளியாக மாற்றப்படும். எண்ணூரில் உள்ள மீன் அங்காடி மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு நிரந்தர கடைகள் அனைத்து வசதிகளுடன் கூடிய கடைகள் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு சிறந்த முறையில் கட்டித் தரப்படும். அதில் மீன் மற்றும் இறைச்சி கடை தனியாகவும் காய்கறி மற்றும் கடைகள் தனியாகவும் மற்றும் ஒரு திருமண மண்டபம் கட்டித் தரப்படும். வடசென்னை மக்களுக்கு பயன்படும் வகையில் பார்வதி நகரில் இருந்து காசிமேடு வரை சுமார் 5 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையை ரூ.30 கோடி செலவில் அழகுபடுத்தப்படும்.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு அறிவிக்கப்பட்ட 50 அறிவிப்புகளில், சென்னையில் உள்ள 26 சட்டமன்ற தொகுதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளில் 16 இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள 18 இடங்களிலும் வெகு விரைவில் கள ஆய்வு மேற்கொண்டு பணிகளை தொடங்க இருக்கிறோம். இவ்வாறு அமைச்சர் கூறினார். அப்போது சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, கலாநிதி வீராசாமி எம்பி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச செயலாளர் அபூர்வா, எம்எல்ஏக்கள் மாதவரம் சுதர்சனம், கே.பி.சங்கர், சென்னை பெருநகர வளர்ச்சி‌க் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி, சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணை ஆணையர் (கல்வி) ஷரண்யா அறி, மாநகராட்சி மண்டல குழுத் தலைவர்கள் சரிதா மகேஷ்குமார், நந்தகோபால், ஏ.வி.ஆறுமுகம், தனியரசு உட்பட பலர் இருந்தனர்.

The post கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.10 கோடி செலவில் நவீன சந்தை: அமைச்சர் பி.கே. சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Kolathur assembly ,Minister ,P.K. Shekharbabu ,Chennai ,Kolathur Paper Mills Road ,Shekharbabu ,
× RELATED மக்களவை தேர்தல்: சிறுவர்களுடன்...