சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம், மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் மற்றும் மறுக்கூட்டல், விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தல் தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் நாளை செவ்வாய்கிழமை காலை 11 மணி முதல் 13ம்தேதி சனிக்கிழமை மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிற்கு மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க இயலும். தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகல் வேண்டுமா? அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா? என்பது குறித்து தெளிவாக முடிவு செய்து கொண்டு, அதன் பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும். விடைத்தாளின் நகல் பெறுவதற்கான கட்டணம் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.275ம், உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூ.305, ஏனையப் பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.205 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க உள்ள தேர்வர்கள் விடைத்தாள் நகலுக்கான கட்டணத்தை பள்ளியிலேயே பணமாக செலுத்த வேண்டும். விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் ஊடகங்கள் வாயிலாகவும், www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்படும். பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் வழியாகவும், மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம், மறுகூட்டல் விடைத்தாள் நகலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு appeared first on Dinakaran.