×

கோடை மழையால் குளத்தூர் பகுதியில் உப்பு உற்பத்தி பாதிப்பு

குளத்தூர் : கோடை மழையால் குளத்தூர் பகுதியில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் மற்றும் பனையூர், வேப்பலோடை, தருவைகுளம், கல்மேடு, பெரியசாமிபுரம், வேம்பார் பகுதிகளில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கனமழை கொட்டி தீர்த்த நிலையில், தொடர்ந்து 3 நாட்களாக அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது.

அக்னி நட்சத்திரம் ஆரம்பித்த நாள் முதல் பரவலாக மழை பெய்து வருவதால் கோடை வெயில் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தாலும் உப்பளத்தொழில் செய்து வரும் உப்பளத்தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். விட்டு விட்டு மழை பெய்து வருவதால் உப்பளப் பாத்திகளில் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் உப்பளங்களில் கோடு போடுதல், உப்பு வாருதல், உப்பு சுமை என உப்பளப் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மழை பெய்வதற்கு முன்பு கடந்த வாரங்களில் ஒரு டன் உப்பு ரூ.2200க்கு விற்ற நிலையில் தற்போது விலை சற்று உயர்ந்து ரூ.3000க்கு விற்பனையாகிறது.

இதுகுறித்து உப்பளத் தொழிலாளர்கள் கூறுகையில், ‘கடந்த தை மாதம் பிற்பகுதிக்கு மேல் துவங்கிய உப்பளப்பணிகள் கடந்த சில வாரங்களாக அதிகமான உப்பு உற்பத்தியை துவங்கியது. கடந்த வாரம் இப்பகுதியில் பெய்த கனமழையால் உப்பு பாத்திகள் முழுவதும் குளம்போல் தண்ணீர் தேங்கி காட்சியளிக்கிறது. இதனால் உப்பளப்பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் உப்பளத்தொழிலாளர்கள் வேலையின்றி வீட்டில் முடங்கும் சூழ்நிலையானது.

மேலும் நேற்று வரை கருமேகக் கூட்டங்களாக உள்ளதால் வெயில் குறைந்தே காணப்படுகிறது. இதனால் பாத்திகளில் தேங்கிய தண்ணீர் வற்றாமல் அப்படியே உள்ளது. வரும் நாட்களில் வெயில் அடித்த பிறகுதான் பாத்திகளில் உள்ள தண்ணீரை அகற்றி விட்டு பாத்தி, வரப்புகளை சரி செய்து மீண்டும் பாத்திகளில் டிகிரி தண்ணீர் விட்டு பணிகளை துவக்க முடியும்’ என்றனர்.

The post கோடை மழையால் குளத்தூர் பகுதியில் உப்பு உற்பத்தி பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Gluttur ,Glathur ,Thoothukudi District ,Chalathur ,Panayur ,Vepaloda ,Gluttur Region ,
× RELATED தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும்...