×

‘நம்ம ஊரு சூப்பரு’ விழிப்புணர்வு சுகாதார இயக்கம்

 

கிருஷ்ணகிரி, மே 8: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஊராட்சி ஒன்றியம் ஐகொத்தப்பள்ளி கிராமத்தில் “நம்ம ஊரு சூப்பரு” தூய்மைப்பணி இயக்கத்தை, கலெக்டர் தீபக் ஜேக்கப் துவக்கி வைத்தார். தொடர்ந்து விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். பின்னர், பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி கூறி, மஞ்சப்பைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர்(வளர்ச்சி) வந்தனா கார்க், ஊராட்சிகள் உதவி இயக்குநர் மகாதேவன், பிடிஓ.,க்கள் சுப்பிரமணி, பாலாஜி, ஊராட்சி மன்றத் தலைவர் ரீனா கிரிதரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: இந்த இயக்கத்தின் கீழ், இன்று(8ம் தேதி) முதல் 13ம் தேதி வரை, தீவிர தூய்மை பணிகள் நடைபெறும். 4ம் நிலையில் வரும் 15ம் தேதி முதல் 27ம் தேதி வரை, சுய உதவிக்குழுக்கள் மூலம் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் தண்ணீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மையின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 5ம் நிலையில், 29 முதல் ஜூன் 3ம் தேதி வரை ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்தல் மற்றும் பிளாஸ்டிக்குக்கு மாற்றுப் பொருட்களை பயன்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

6ம் நிலையில், ஜூன் 5ம் தேதி முதல் 15ம் தேதி வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நீர் சுகாதாரம் மற்றும் திட, திரவக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். மேலும், அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த பணிகள் பொதுமக்களை சென்றடைவதை கண்காணிக்க, ஊராட்சி ஒன்றிய அளவில் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ‘நம்ம ஊரு சூப்பரு’ விழிப்புணர்வு சுகாதார இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Namma Uru Superu ,Krishnagiri ,Namma Uru Superparu ,Aikothapalli village ,Parkur Panchayat Union ,Krishnagiri district ,Namma ,
× RELATED கெலமங்கலம் அருகே மாட்டுத்தீவனம்...