×

விராலிமலையில் கன மழையால் கிளை நூலகத்திற்குள் புகுந்த மழைநீர்

விராலிமலை, மே, 8: விராலிமலையில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையின் கிளை நூலகம் இட நெருக்கடியிலும், புதர்களுக்கு நடுவே சிக்கித் தவித்து வருவதோடு நேற்று முன்தினம் பெய்த மழையால் வெள்ள நீர் கட்டத்திற்குள் புகுந்ததால் வாசகர்கள் நூலகம் உள்ளே செல்ல முடியாமல் தவித்தனர்.விராலிமலை பேருந்து நிலையம் அருகே 1994ம் ஆண்டு கட்டப்பட்ட இந்நூலகம் தற்போது சிதிலமடைந்த நிலையிலும், மழைகாலங்களில் தண்ணீர் சூழ்ந்துவிடுவதும் இங்கு வாடிக்கையாக நடைபெறும் நிகழ்வாகும் இதனால், வாசகர்கள் நூலகம் வந்து செல்ல முடியாத சூழல் நீண்ட நாட்களாக நிலவி வருகிறது. வாசிப்பு திறனோடு தங்கள் அறிவுதிறனை வளர்த்து கொள்ளும் நூலகத்தை வேறு ஒரு இடத்திற்கு மாற்றி தரவேண்டும் என்ற கோரிக்கை வாசகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக இருந்து வரும் சூழலில் தற்போது இக்கோரிக்கை மேலும் வலுப்பெற்று வருகிறது. விராலிமலை கிளை நூலகம் சுமார் 2400 உறுப்பினர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான புரவலர்கள் கொண்டதாகும், இந்த நூலகத்துக்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட வாசகர்கள் வந்து தங்கள் வாசிப்பு திறனை வளர்த்து செல்கின்றனர். ஊழியர்கள் 2 பேர் பணிபுரியும் இந்நூலகத்தில் வரலாறு, அறிவியல், கதை, கட்டுரைகள், சிறுவர் கதைகள் என சுமார் 30 ஆயிரம் நூல்கள் உள்ளன.

இதில் அரியவகை நூல்களும் அடங்கும் என்றாலும், இவ்வாறான நூல்களை வாசகர்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது தான் வேதனையின் உச்சம், நூலகம் அறை போதிய இடவசதியின்றி குறுகிய பரப்பளவில் இருப்பதே இதற்குக் காரணமாகும். ஒரு அறை, ஒரே ஒரு கூடம் கொண்ட மிகச் சிறிய அளவிலான இந்த நூலகத்தில் வெறும் 10 வாசகர்கள் மட்டுமே அமர்ந்து படிக்க முடியும். நூலகத்தில் வாசகர்கள் அமர்ந்து படிப்பதற்கு போதிய இடவசதி இல்லாத நிலையில் நூல்களை அடுக்கி வைக்கவும் போதுமான இடம் இல்லை. இதனால், அரிய நூல்கள் வாசகர்களின் பார்வைக்கு வைக்கப்பட முடியாமல் கட்டுக் கட்டாக கட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விராலிமலை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக விராலிமலையில் 9 சென்டிமீட்டர் மழை பதிவானது. இதனால் தாழ்வான பகுதி வீடுகள் கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதே போல் கிளை நூலகத்திற்குள்ளும் மழைநீர் புகுந்தது. கெண்டைக்கால் அளவிற்கு நூலகத்திற்குள் நீர் தேங்கி நின்றதால் வாசகர்கள் நூலகத்திற்குள் சென்று அமர்ந்து படிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. கிராமப்புற மாணவர்களின் வாசிப்பு திறனை அதிகப்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு வைஃபை (கம்பி இல்லாத அதிவேக இணையதள இணைப்பு) வசதி இலவசமாக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த நூலகத்தில் மழைக்காலங்களில் வாசகர்கள் நூலகம் செல்ல முடியாத சூழல் நிலவி வருவது மிகவும் வேதனை தரும் ஒன்றாகும் எனவே, இந்த நூலகத்துக்கு கூடுதல் கட்டட வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் இல்லை என்றால் நூலகத்தை வேறு ஒரு இடத்திற்கு மாற்றி தரவேண்டும் என்ற கோரிக்கை வாசகர்கள் மத்தியில் தற்போது வலுத்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இதை கவனத்தில் கொண்டு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாசகர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாகும்.

The post விராலிமலையில் கன மழையால் கிளை நூலகத்திற்குள் புகுந்த மழைநீர் appeared first on Dinakaran.

Tags : Viralimalai ,Tamil Nadu Government Public Library Department ,
× RELATED விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் பூச்சொரிதல் விழா