×

மெரினாவில் குழந்தைகளை கதறவிட்டு போதையில் மயங்கி கிடந்த இளம்பெண்ணால் பரபரப்பு: போலீசார் மீட்டு விசாரணை

ெசன்னை, மே 8: மெரினா கடற்கரையில் பெண் ஒருவர் போதையில் மயங்கி கிடந்தார். அவர் அருகே 2 வயது பெண் குழந்தை பசி மயக்கத்திலும், 6 மாத ஆண் குழந்தை பசியால் அழுது துடித்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர். சென்னை மெரினா கடற்கரையில் வார இறுதி நாட்கள் என்பதால் நேற்று முன்தினம் அதிக மக்கள் நடமாட்டம் இருந்தது. அப்போது கண்ணகி சிலை அருகே நேற்று முன்தினம் இரவு நடைபாதையில் பெண் ஒருவர் மயங்கி கிடந்தார். அவரது அருகே 2 வயது பெண் குழந்தை ஒன்று தூங்கி கொண்டிருந்தது. 6 மாத ஆண் குழந்தை வெகு நேரம் அழுதப்படி இருந்தது.
கடற்கரைக்கு வந்த பொதுமக்களில் சிலர், குழந்தை அழுவதை பார்த்து, இயல்பாக கடந்து சென்றனர். அதில் சிலர் குழந்தை அழுகிறது என்று அருகில் சென்று பார்த்து, தூங்கி கொண்டிருந்த பெண்ணை எழுப்பினர். வெகு நேரம் எழுப்பியும் அந்த பெண் தூக்க நிலையிலேயே இருந்தார். உடனே சம்பவம் குறித்து பொதுமக்களில் ஒருவர், அண்ணாசதுக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது, தூங்கி கொண்டிருந்த பெண் கஞ்சா போதையில் இருந்தது தெரியவந்தது. பெண் அருகே தூங்கி கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தை பசி மயக்கத்தில் சுயநினைவின்றி இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். 6 மாத ஆண் குழந்தை பசியால் அழுது கொண்டிருப்பது தெரிந்தது. அதைதொடர்ந்து போதை மயக்கத்தில் இருந்து பெண் மற்றும் பசி மயக்கத்தில் இருந்த 2 வயது பெண் குழந்தையை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, பசி மயக்கத்தில் இருந்த 2 வயது குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 6 மாத ஆண் குழந்தைக்கு பால் கொடுத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

பின்னர் போதையில் மயங்கி கிடந்த பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, ஆதரவற்ற நிலையில் கடந்த 1 மாதங்களுக்கு மேலாக மெரினா கடற்கரை பகுதியில் தங்கி, கடற்கரைக்கு வரும் பொதுமக்களிம் யாசகம் பெற்று குழந்தைகளுக்கு உணவு வாங்கி கொடுத்து வந்தது தெரியவந்தது. மீட்கப்பட்ட பெண்ணுக்கு சரியாக போதை தெளியாததால் அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்த முடியாத நிலை உள்ளது.
இருந்தாலும் ஆதரவற்ற நிலையில் உள்ள தாய் மற்றும் 2 குழந்தைகளை போலீசார் ஆதரவற்ற இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

The post மெரினாவில் குழந்தைகளை கதறவிட்டு போதையில் மயங்கி கிடந்த இளம்பெண்ணால் பரபரப்பு: போலீசார் மீட்டு விசாரணை appeared first on Dinakaran.

Tags : Jesannai ,Marina beach ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?