×

ஏ.வி.எம்., ஹெரிடேஜ் மியூசியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பு மற்றும் ஸ்டுடியோ நிறுவனமான ஏ.வி.எம் புரொடக்‌ஷன்ஸ், ஏ.வி.மெய்யப்ப செட்டியாரால் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் கடந்த 77 ஆண்டுகளில் 178 திரைப்படங்கள் தயாரித்துள்ளது. அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், என்டிஆர், ஜெயலலிதா ஆகிய 5 முதல்வர்கள் இந்நிறுவனத்தில் பணியாற்றியுள்ளனர். சிவாஜி கணேசன், கமல்ஹாசன், சிவகுமார், எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.ஆர்.மகாலிங்கம், தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ், கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட பல ஹீரோக்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

முதல் டப்பிங் படம் (ஹரிச்சந்திரா), முதல் பின்னணி பாடலுடன் உருவான படம் (நந்தகுமார்), முதல் அனிமேஷன் காட்சி இடம்பெற்ற படம் (ராஜா சின்ன ரோஜா), முதல் டால்பி ஒலிக்கலவை படம் (சிவாஜி) என்பது உள்பட பல்வேறு சாதனைகளை இந்நிறுவனம் படைத்துள்ளது.தற்போது இந்நிறுவனம் வடபழநியில் அமைந்துள்ள தனது ஸ்டுடியோ வளாகத்தில், ‘ஏ.வி.எம் ஹெரிடேஜ் மியூசியம்’ என்ற பெயரில் அருங்காட்சியகம் ஒன்றை திறந்துள்ளது. இதில் மிகப்பழமையான சினிமா கேமராக்கள், எடிட்டிங் யூனிட்டுகள், புரொஜெக்டர்கள், லைட்டுகள், ஏ.வி.எம்., தயாரித்த படங்களில் முன்னணி நடிகர்கள் பலர் பயன்படுத்திய வாகனங்கள், ஆடைகள், ஏ.வி.எம்., தயாரித்த அனைத்து திரைப்படங்களின் போட்டோக்கள், விளம்பரங்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

தவிர, எம்.எஸ்.குகன் சேகரித்த 45 பழமையான கார்களும், 20 பைக்குகளும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், அமைச்சர் பொன்முடி, டி.ஆர்.பாலு எம்பி, கவிஞர் வைரமுத்து, நடிகர் சிவகுமார், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், தயாரிப்பாளர்கள் ஏ.வி.எம்.சரவணன், எம்.எஸ்.குகன், அருணா குகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திறப்பு விழாவுக்குப் பிறகு எம்.எஸ்.குகன் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஏ.வி.எம்., நிறுவனத்தில் அருங்காட்சியகம் அமைக்க நீண்ட காலம் திட்டமிட்டு, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தோம். திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட ஆடைகள் முதல் வாகனங்கள், கேமரா வரை அனைத்தையும் பாதுகாப்பாக வைத்திருந்தோம். இன்றைய இளம் தலைமுறை ஏ.வி.எம் நிறுவனம் பற்றியும், பழமையான சினிமா தொழில்நுட்பம் பற்றியும் அறிந்துகொள்வதற்காகவே இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. இது நிரந்தரமான அருங்காட்சியகம். வார நாட்களில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். பெரியோருக்கு 200 ரூபாயும், சிறுவர்களுக்கு 150 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும் என்றார்.

‘நமது சமூக வரலாறு அடங்கி இருக்கிறது’: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் திரை வரலாறு என்பது சமூக வரலாற்றோடும், அரசியல் வரலாற்றோடும் பின்னிப் பிணைந்தது. அதில் ஏவிஎம் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்கு தலையானது. தவிர்க்க முடியாதது. மேலும், இந்தியத் துணைக்கண்டத்தில் சினிமாவின் பரிணாம வளர்ச்சியை ஏவிஎம் இல்லாமல் எழுதிவிட முடியாது. நீண்ட திரை வரலாற்றை, தொழில்நுட்ப வளர்ச்சிகளை எடுத்துக்காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தில் நமது சமூக வரலாறும் அடங்கியிருக்கிறது.

The post ஏ.வி.எம்., ஹெரிடேஜ் மியூசியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : AVM, Heritage Museum ,CM ,Stalin ,CHENNAI ,AVM Productions ,AV ,Meiyappa ,Chettiar ,AVM, ,Heritage Museum ,Chief Minister ,M.K.Stalin ,
× RELATED தொழிலாளர்கள் குடும்பங்கள் கல்வி,...