×

கோடை கால சிறப்பு முகாமில் நீச்சல் பயிற்சி பெறுபவர் என்ன செய்ய வேண்டும்?..மருத்துவர்கள் விளக்கம்

தமிழகத்தில் அக்னி வெயில் தொடங்கியுள்ளது. அத்துடன் அனல் காற்றும் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. எனவே, வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், கோடை விடுமுறையில் பயனுள்ள வகையில் பொழுதைக் கழிக்கவும் பலரும் தற்போது நீச்சல் குளங்களை தேடி செல்ல ஆரம்பித்துள்ளனர். கோடை காலத்தில், கிராமப்புறங்களில் ஏரிகள், குளங்கள், கிணறுகள் போன்றவற்றில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் சர்வ சாதாரணமாக நீச்சல் அடித்து விளையாடுவதை இப்போதும் பார்க்கலாம். அது அவர்களுக்கு பழகிப்போன ஒரு விஷயம். மேலும், அங்குள்ள ஏரிகள் மற்றும் ஆறுகளில் நீர் தேங்காமல் சென்று கொண்டே இருக்கும். நீரோட்டம் உள்ள ஒரு பகுதியில் நாம் குளிக்கும் போது அது உடலுக்கு ஆரோக்கியமானது.

ஆனால், சென்னை போன்ற பெரு நகரங்களில் ஏரிகள், குளங்களை பார்ப்பது மிகவும் அரிது. அப்படியே அவை இருந்தாலும் அதில் சென்னை மக்கள் சாதாரணமாக சென்று குளிக்க முடியாது. எனவே, சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ளவர்கள் கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க, விடுமுறை காலங்களில் தங்கள் குழந்தைகளை நீச்சல் குளங்களுக்கு அழைத்து சென்று பயிற்சி அளிக்கின்றனர். ஒரு மணி நேரத்துக்கான கட்டணத்தை அளித்துவிட்டு பயிற்சி எடுக்கின்றனர். சென்னையில் சில இடங்களில் கட்டணம் பெற்றுக்கொண்டு மாணவ மாணவியருக்கு நீச்சல் கற்றுத் தருகின்றனர். இந்த நீச்சல் குளங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா, தண்ணீர் எப்போது மாற்றப்படுகிறது, ஒரு நாளைக்கு எவ்வளவு பேர் இதில் குளிக்கின்றனர், எத்தனை மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் மாற்ற வேண்டும், தண்ணீரில் என்ன வேதிப்பொருள் கலந்து உள்ளது.

என்ன மாதிரியான நீச்சல் உடை அணிந்து வர வேண்டும், குழந்தைகள், மாணவர்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகள் நீச்சல் குளத்தில் உள்ளதா என்பது குறித்து தெளிவான வழிகாட்டி நெறிமுறைகளை வைத்திருக்க வேண்டும். ஆனால், தனியார் நீச்சல் குளங்களில் இது போன்ற வரையறைகள் குறைவு என்று தான் சொல்ல வேண்டும். தற்போது சென்னையில் கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் மக்கள் நீச்சல் குளம் மற்றும் நீர் நிலைகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். ஆனால் நீச்சல் குளங்களில் இருந்து தான் குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களை அதிகளவில் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். நீரே பல்வேறு நோய்கள் பரவ முக்கிய காரணமாக உள்ளது என்பது பலருக்கு தெரிவதில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

எனவே, நீச்சல் குளங்களில் குளிக்கும் முன்னர் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது நாம் குளிக்கும் நீர் அசுத்தமாக இருப்பின் கண் வலி, காது வலி, வயிற்றுப்போக்கு, தோல் வெடிப்பு, இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். எனவே இதை தவிர்க்க வேண்டுமெனில் அசுத்தமான நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக நீச்சல் பழகும்போது, தெரியாமல் அசுத்தமான நீரை விழுங்கிவிட்டால் அதில் உள்ள வைரஸ் நம் உடலுக்குள் சென்று பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். சிலருக்கு அசுத்தமான நீரால் தோலில் அரிப்பு ஏற்படலாம். அசுத்தமான நீர் ஆவியாகும்போது அந்த நீராவியை நாம் சுவாசித்தால் அதன் மூலமாக கூட வைரஸ் பரவு நுரையீரலை பாதிக்கும். இவை எல்லாம் இயற்கையாக தண்ணீரில் இருந்து மனிதனுக்கு பரவும் வைரஸ்.

ஆனால் செயற்கையாக மனிதர்களாலும் வைரஸ், பாக்டீரியாக்கள் பரவ வாய்ப்புள்ளது. சரி இந்த பிரச்னைகளிலிருந்து தப்பிப்பது எப்படி என ஆய்வாளர்கள் சில அறிவுரைகளை கூறியுள்ளனர். அதாவது குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் உடல்நல பிரச்னை உள்ளவர்கள் அல்லது வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்கள், புற்றுநோய், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் இதுபோன்ற சுகாதாரமற்ற நீச்சல் குளங்களில் இறங்கி குளிப்பது ஆபத்தானதாகும். ஏனெனில் இவர்கள் கிரிப்டோஸ்போரிடியம் எனும் ஒட்டுண்ணியால் பாதிக்கப்படலாம். இந்த கிரிப்டோஸ்போரிடியம் விலங்குகளை தாக்கும் ஒட்டுண்ணி. அதேபோல இதில் சில வகை மனிதர்களையும் பாதிக்கும். இதிலிருந்து தப்பிக்க நீச்சல் வீரர்கள் தங்களை தற்காத்துக்கொள்ள சில வழிகளை பின்பற்றுகின்றனர்.

அதாவது, நமக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருந்தால் இரண்டு வாரங்களுக்கு பின்னர்தான் நீச்சல் குளத்தில் இறங்க வேண்டும். நீச்சல் அடிக்கும்போது வாயில் தண்ணீர் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீச்சல் முடிந்த பின்னர் காதுகளை நன்கு உலர வைக்க வேண்டும். நீச்சல் குளத்தில் குளிக்கிறீர்கள் எனில் அந்த குளம் குளோரின் அல்லது புரோமின் கொண்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளதா, என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும் நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு முன்பு அப்பகுதியில் உள்ள பாத்ரூமில் குளித்த பின்பு நீச்சல் குளத்தில் இறங்க வேண்டும். அதேபோன்று நீச்சல் குளத்தில் குளித்து விட்ட பிறகு மீண்டும் வீட்டிற்கு சென்று நல்ல தண்ணீரில் குளிக்க வேண்டும்.

நீச்சல் குளத்தில் தண்ணீரை எத்தனை மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்றுகிறார்கள் என்பதை கண்டிப்பாக கண்காணிக்க வேண்டும். இவ்வாறு நீச்சல் குளத்தில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் நிறைய உள்ளன. வெயில் காலம் வந்துவிட்டது இதமாக தண்ணீரில் போய் குளிக்கலாம் என குளித்து அதிலிருந்து நோயை வாங்கி வருவதற்கு பதிலாக, நீச்சல் குளங்களுக்கு என்று வரையறுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை முறையாக பின்பற்றி மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நீச்சல் குளங்களை பயன்படுத்தினால் நோய்களிலிருந்து தப்பித்து கோடை காலத்தையும் வசந்தகாலமாக்கலாம். இவ்வாறு மருத்துவர்கள் கூறினர்.

நீச்சல் குளங்களில் பொதுமக்கள் குளிக்கும் போது ஏற்படும் பிரச்னைகள் குறித்து டாக்டர் வெங்கடேஷ் கூறுகையில், ‘‘நீச்சல் குளங்களை பராமரிக்க அந்த தண்ணீரில் குளோரின் பயன்படுத்துவார்கள். அதிகப்படியான குளோரின் பயன்படுத்தும்போது அது குளிப்பவர்களுக்கு தோல் அலர்ஜியையும், இதர பிற தோள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளையும் ஏற்படுத்தும். மேலும் உடல் நலக்குறைவு காரணமாக ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்றால் அவர் கண்டிப்பாக நீச்சல் குளங்களில் இறங்கி குளிக்க கூடாது.

அவர் இறங்கி குளிக்கும்போது அவரிடம் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் நீரில் கலந்து அது நீச்சல் குளங்களில் குளிக்கும் மற்றவர்களுக்கும் பிரச்னையை ஏற்படுத்தி விடுகிறது. இதன் மூலம் வயிற்றுப்போக்கு, ஜலதோஷம், காய்ச்சல் உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படுகிறது. பொதுவாக நீச்சல் குளங்களை பராமரிக்கும் போது தண்ணீர் சுழற்சி முறை குறித்து தெளிவாக வரையறை கொடுக்கப்பட்டிருக்கும். அதனை முறையாக பயன்படுத்தி தரமான நீச்சல் குளங்களை பொதுமக்கள் தேர்ந்தெடுத்து குளிக்க வேண்டும். இல்லையென்றால் நோய்களின் தாக்கத்திற்கு ஆளாக நேரிடும்,’’ என்றார்.

The post கோடை கால சிறப்பு முகாமில் நீச்சல் பயிற்சி பெறுபவர் என்ன செய்ய வேண்டும்?..மருத்துவர்கள் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Agni Veil ,Tamil Nadu ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...