×

தூண்டில் வளைவு திட்டத்துக்கு எதிராக பசுமை தீர்ப்பாயத்தின் தடையை நீக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: ‘‘தமிழக கடலோர கிராமங்களில், கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவுகளை அமைக்க பசுமை தீர்ப்பாயம் விதித்த தடையை நீக்க ஏன் அரசு முயற்சி செய்யவில்லை’’ என்று ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுக்களுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு மீனவர் நல சங்கத்தின் தலைவர் பீட்டர் ராயன் தாக்கல் செய்துள்ள மனுவில், திருநெல்வேலி கூடுதாழை, தோமையார்புரம், கூட்டப்புளி கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடலோர அரிப்பு ஏற்படுகிறது. இதனால், மீனவர்களின் வீடுகள், படகுகள் மற்றும் கடற்பரப்புகள் சேதமடைகிறது. இதையடுத்து, இந்த பகுதிகளில் பசுமை காலநிலை நிதியின் கீழ் தூண்டில் வளைவு அமைக்க, தமிழ்நாடு அரசு ரூ.36 கோடி ஒதுக்கீடு செய்தது.

இந்நிலையில், கடலோர கிராமங்களில் தூண்டில் வளைவு அமைக்க தடை விதித்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. பசுமை தீர்ப்பாயத்தின் தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா மற்றும் சி.சரவணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் மவுரியா ஆஜராகி, ‘‘தூண்டில் வளைவு திட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள கடலோரத்தில் வசிக்கும் கிராம மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக கடல் அரிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்’’ என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், பசுமை தீர்ப்பாயம் தடை விதித்து ஓராண்டு ஆகியும் அந்த தடையை நீக்க ஒன்றிய, மாநில அரசுகள் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை என்றனர்.

அதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் சிலம்பண்ணன், ‘இந்த மனுவுக்கு பதில் தருகிறோம்’ என்றார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மாநில அரசு நிதி ஒதுக்கியும் அந்த திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. மாநில அரசுதான் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை பெற்றிருக்க வேண்டும். இந்த விஷயத்தில் மீனவர்களின் நலன்தான் முக்கியம். எனவே, இந்த திட்டம் தொடர்பாக ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதுவரை இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 2வது வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

The post தூண்டில் வளைவு திட்டத்துக்கு எதிராக பசுமை தீர்ப்பாயத்தின் தடையை நீக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Green Tribunal ,ICourt ,Union ,Tamil Nadu Govt. Chennai ,Tamil ,United ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED விதிகளின்படி விநாயகர் சிலைகள்...