×

வைகை ஆற்றில் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம்; அழகர் இன்று மலைக்கு புறப்படுகிறார்: விடிய, விடிய பூப்பல்லக்கில் பக்தர்களுக்கு தரிசனம்

மதுரை: வைகை ஆற்றில் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் வழங்கிய அழகர், நேற்றிரவு பூப்பல்லக்கில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு விடிய, விடிய அருள்பாலித்தார். இன்று காலை மதுரையை விட்டு, மலைக்கு புறப்பட்டு செல்கிறார்.மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 5ம் தேதி அழகர் வைகை ஆற்றில் இறங்கினார். நேற்று முன்தினம் சேஷ வாகனத்தில் வண்டியூரில் இருந்து புறப்பட்டு வைகை ஆற்றிலுள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு கருட வாகனத்தில் தோன்றி மண்டூக (தவளை) உருவில் இருந்த சுதபஸ் முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். அதனைத்தொடர்ந்து, கொட்டும் மழையில் இரவு ராமராயர் மண்டபத்திற்கு வந்தார். அங்கு, அழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய, விடிய நடந்தது.

நள்ளிரவு 12 மணி முதல் முத்தங்கி சேவை, மச்சவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம் எடுக்கும் போது விடிந்தது. காலை 6 மணிக்கு மோகினி அவதாரத்தில் மண்டபத்தை விட்டு வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து வலம் வந்தார். பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து, அழகரின் அவதாரங்களை தரிசனம் செய்தனர். நேற்று பகல் முழுவதும் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளி இருந்தார். மாலை 5 மணிக்கு மேல், ராமராயர் மண்டபத்தில் இருந்து அனந்தராயர் பல்லக்கில் ராசாங்க திருக்கோலத்துடன் அழகர் புறப்பட்டு, ஆழ்வார்புரம், மூங்கில் கடைவீதி, கோரிப்பாளையம் வழியாக இரவு 11 மணிக்கு தல்லாகுளம் கருப்பணசுவாமி கோயில் எதிரே உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு சென்றார்.

அங்கு, இதுவரை அழகராக காட்சி தந்தவர், இன்று அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் கள்ளழகர் வேடத்திற்கு மாறி, விடிய, விடிய பூப்பல்லக்கில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை காண மதுரையை சுற்றியுள்ள பல்வேறு மாவட்ட மக்கள் நேற்றிரவு தல்லாகுளம் பகுதியில் குவிந்தனர். அழகரை தரிசித்த பொதுமக்கள், விவசாயிகள், தாங்கள் விளைநிலங்களில் விளைவித்த நெல், கேப்பை, கம்பு, சோளம் மற்றும் தானியங்கள், புளி, வெங்காயம் உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை தல்லாகுளம் பெருமாள் கோயிலில் கோட்டையாக காணிக்கை செலுத்தினர்.

பின்னர், பூப்பல்லக்கில் கள்ளழகர் கருப்பணசாமி கோயில் சன்னதியில் வையாழி ஆனவுடன் அங்கிருந்து அழகர்மலைக்கு புறப்படுகிறார். கள்ளழகர், தல்லாகுளம், பிரசன்ன வெங்கடஜலபதி கோயில், அவுட்போஸ்ட், ரிசர்வ்லைன், டிஆர்ஓ. காலனி, புதூர் மூன்றுமாவடி வழியாக, இன்றிரவு சுந்தரராஜன்பட்டி, அப்பன்திருப்பதி, கள்ளந்திரி வழியாக நாளை காலை 9 மணிக்கு மேல் அழகர்கோவில் மலையை சென்று அடைகிறார்.

The post வைகை ஆற்றில் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம்; அழகர் இன்று மலைக்கு புறப்படுகிறார்: விடிய, விடிய பூப்பல்லக்கில் பக்தர்களுக்கு தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Sage Manduka ,Vaigai River ,Alagar ,Vidya, Vidya Bhuppallak ,Madurai ,Bhupallak ,Alaghar ,Vidya, Vidya Bhupallak ,
× RELATED குடிநீர் தொட்டியை கமிஷனர் ஆய்வு