×

மேட்டூர் நீர்மட்டம் 300 நாளாக 100 அடிக்கும் மேல் நீடிப்பு

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம், தொடர்ந்து 300வது நாளாக 100 அடிக்கும் மேல் நீடிக்கிறது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், அதன் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு பகுதிகளிலும் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று, 2வது நாளாக நீர்வரத்து 4 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 6,595 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 6,295 கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

நீர் திறப்பை விட வரத்து அதிகமாக உள்ளதால், நீர்மட்டம் 102.25 அடியில் இருந்து 102.54 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 68.17 டி.எம்.சியாக உள்ளது. கடந்த ஆண்டு பரவலாக பெய்த பருவமழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், நீர்மட்டம் கடந்த ஜூலை 12ம் தேதி 100 அடியாக உயர்ந்தது. அதன் பின்னர், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 300வது நாளாக, 100 அடிக்கும் மேல் நீடிக்கிறது. நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதால், நடப்பு ஆண்டில் வரும் ஜூன் 12ம் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post மேட்டூர் நீர்மட்டம் 300 நாளாக 100 அடிக்கும் மேல் நீடிப்பு appeared first on Dinakaran.

Tags : Mettur ,Cauvery ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி