×

மேட்டுப்பாளையம் – சத்தி தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை வேளையில் உலா வந்த ஒற்றைக் காட்டு யானை: மக்களை துரத்தியதால் பரபரப்பு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானை,மான்,காட்டுமாடு,சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் வனப்பகுதியை விட்டு வெளியேறும் வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் மேட்டுப்பாளையம் – சத்தி சாலையில் உள்ள சிறுமுகை பகுதியில் செயல்படாத விஸ்கோஸ் தொழிற்சாலை உள்ளது. அடர் வனப்பகுதிக்குள் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் இந்த விஸ்கோஸ் ஆலைக்குள் புகுந்து அங்கேயே முகாமிட்டுள்ளன.

காட்டு யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறி விஸ்கோஸ் தொழிற்சாலையில் முகாமிட்டு பின்னர் அதிகாலை வேளையில் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளது.

இந்த நிலையில் சிறுமுகை விஸ்கோஸ் தொழிற்சாலையில் முகாமிட்டுள்ள ஏழு காட்டு யானைகளில் ஒன்று மட்டும் தனியாக பிரிந்து மேட்டுப்பாளையம் – சத்தி தேசிய நெடுஞ்சாலையை கடந்து மறுபுறம் சென்றுள்ளது.பின்னர், நேற்று காலை பரபரப்பான சக்தி சாலையை கடந்துள்ளது.

காட்டு யானையினை வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்தும், சப்தமிட்டும் மீண்டும் விஸ்கோஸ் ஆலைக்குள் விரட்டினர்.இச்சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டதால் காட்டு யானை மிரண்டு பொதுமக்களை விரட்டத்துவங்கியது.

இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும்,பரபரப்பான சாலையில் ஒற்றை காட்டு யானை சாலையைக்கடந்ததால் அப்பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் செயல்படாமல் உள்ள விஸ்கோஸ் ஆலையில் முகாமிட்டுள்ள ஏழு யானைகளை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என தொடர்ந்து தாங்கள் கோரிக்கை விடுத்து வந்தும், வனத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தாங்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சமடைந்துள்ளதாகவும்,வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து செயல்படாமல் உள்ள விஸ்கோஸ் தொழிற்சாலையில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சிறுமுகை வனச்சரகர் செந்தில்குமார் கூறுகையில் சிறுமுகையில் செயல்படாமல் உள்ள விஸ்கோஸ் தொழிற்சாலையில் முகாமிட்டுள்ள ஏழு காட்டு யானைகளை அடர் வனப்பகுதிக்குள் விரட்டினாலும் பகல் நேரங்களில் வனப்பகுதிக்குள் இருந்து விட்டு இரவு நேரங்களில் மீண்டும் வனப்பகுதியை விட்டு வெளியேறி மீண்டும் விஸ்கோஸ் தொழிற்சாலையில் முகாமிடுகின்றன.

இந்த யானைகளை விரட்டும் வகையில் இரவு நேரங்களில் விஸ்கோஸ் தொழிற்சாலை, கூத்தாமண்டி பிரிவு, பெத்திக்குட்டை,அம்மன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் தலா மூவர் அடங்கிய வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், இன்று காலை சாலையைக்கடந்த ஒற்றைக்காட்டு யானையினை போக்குவரத்தை நிறுத்தி பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் துரத்தி விடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும்,தற்போது சிறுமுகை சுற்றுவட்டாரப்பகுதிகளில் வாழை பயிரிட்டுள்ள நிலையில் வனத்துறையினர் தொடர்ந்து யானைகளை விரட்டும் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் மீண்டும் வனப்பகுதியை விட்டு வெளியே வந்து விடுகிறது.விரைவில் சிறுமுகை விஸ்கோஸ் தொழிற்சாலையில் முகாமிட்டுள்ள ஏழு காட்டு யானைகளை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

The post மேட்டுப்பாளையம் – சத்தி தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை வேளையில் உலா வந்த ஒற்றைக் காட்டு யானை: மக்களை துரத்தியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Madtupalayam ,Satti National Highway ,MATUPAPPAYA ,Matthupalam ,Dinakaran ,
× RELATED குன்னூர் சுற்றுலா பேருந்து விபத்து...