×

சித்திரை திருவிழாவில் விடிய விடிய கள்ளழகரின் தசாவதாரம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

மதுரை: சித்திரை திருவிழாவில் விடிய விடிய கள்ளழகரின் தசாவதாரம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மதுரையின் மணிமகுட திருவிழாவான சித்திரை திருவிழாவில் கடந்த 2ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம், 3ம் தேதி தேரோட்டம் நடந்தது. தொடர்ந்து 4ம் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெற்றது. அழகர்கோவில் சித்திரை திருழாவையொட்டி அழகர், கள்ளழகர் வேடம் பூண்டு கடந்த 3ம் தேதி தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டு வந்தார். 4ம் தேதி மூன்றுமாவடி முதல் தல்லாகுளம் வரை கள்ளழகருக்கு எதிர்சேவை நடந்தது. தல்லாகுளம் பெருமாள் கோயிலில் தங்கிய கள்ளழகர் 5ம் தேதி ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்கினார். அன்றிரவு வண்டியூர் பெருமாள் கோயிலில் தங்கினார்.

நேற்று வண்டியூர் பெருமாள் கோயிலில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்பட்ட அழகர் வைகை ஆற்றிலுள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு கள்ளழகர் கருட வாகனத்தில் தோன்றி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். பின் அங்கிருந்து புறப்பட்ட கள்ளழகர் நேற்றிரவு ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு, நள்ளிரவு முதல் கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி தொடங்கியது. நள்ளிரவு 12 மணிக்கு முத்தங்கி சேவை அவதாரத்தில் தோன்றினார். இதை தொடர்ந்து மச்சவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம் எடுத்தார். கிருஷ்ண அவதாரம் எடுக்கும் போது விடிந்தது. காலை 6 மணிக்கு மோகினி அவதாரத்தில் தோன்றிய கள்ளழகர், ராமராயர் மண்டபத்தில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். கள்ளழகரின் தசாவதாரத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

இன்று பிற்பகல் 2 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருளுகிறார். பின்னர் இரவு 11 மணிக்கு தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி, நாளை (8ம் தேதி) அதிகாலை 2.30 மணிக்கு கள்ளர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். அதே திருக்கோலத்துடன் கருப்பணசாமி கோயில் சன்னதியில் வையாழி ஆனவுடன் அங்கிருந்து அழகர் மலைக்கு புறப்படுகிறார். 9ம் தேதி அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக காலை 10.32 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் இருப்பிடம் சென்று அடைகிறார். 10ம் தேதி அங்கு உற்சவ சாந்தியுடன் கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

The post சித்திரை திருவிழாவில் விடிய விடிய கள்ளழகரின் தசாவதாரம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Vidiya Kallazhaga ,Chitrai Festival ,Madurai ,Dasavatharam ,Vidiya ,Kallazagar ,
× RELATED மோசடியாக நீட் தேர்வு எழுதிய நபர்களின்...