×

கடைசி கட்டத்தில் கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் களத்தில் முந்தி நிற்கும் காங்கிரஸ்: மோடி அலையை உருவாக்க பா.ஜ முயற்சி

கர்நாடக சட்டபேரவை தேர்தல் களம் இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. எப்போதும் இல்லாத வகையில் பிரதமர் உள்பட ஒன்றிய அமைச்சரவை முழுவதும் கடந்த 15 நாட்களாக மாநிலத்தில் முகாமிட்டு பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரை செய்து வருகிறார்கள். உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்தியநாத், மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா உள்பட பலரும் தேர்தல் களத்தில் பரப்புரை செய்து வருகிறார்கள்.

காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தேசிய பொதுச்செயலாளர்கள் பிரியங்கா காந்தி, ரன்தீப்சிங் சுர்ஜிவாலா, கே.சி.வேணுகோபால், ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக்கெலாட், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பிரித்திவ்ராஜ் சவுகான், முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர்கள் வைத்தியலிங்கம், நாராயணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் உள்பட பலர் பரப்புரை செய்து வருகிறார்கள்.

மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு தேசியளவில் நட்சத்திர தலைவர்கள் இல்லாமல் இருந்தாலும் முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா, முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி ஆகியோர் மட்டுமே நட்சத்திர தலைவர்களாக இருந்து பரப்புரை செய்து வருகிறார்கள். இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இடதுசாரி கட்சி தலைவர்கள், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் மாயாவதி, ஆம்ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி மாநில முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் பரப்புரை செய்து வருகிறார்கள்.

பிரதமர் பூஸ்ட்
தேர்தல் தொடர்பாக பெரும்பான்மையான கருத்து கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருப்பது ஒன்றியத்திலும் மாநிலத்திலும் ஆளும் பாஜவுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. கர்நாடக சட்டபேரவை தேர்தலை வரும் 2024ல் நடக்கும் மக்களவை தேர்தலுக்கு உந்து சக்தியாக பயன்படுத்த நினைத்துள்ள பிரதமர் மோடி, எப்படியாவது கர்நாடகாவில் மீண்டும் ஆட்சி அமைப்பதின் மூலம் தென்மாநிலங்களின் நுழைவு வாயிலாக கர்நாடகாவை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்து திட்டமிட்டு பிரசாரதம் செய்து வருகிறார். இதற்காக மூன்று கட்டமாக தேர்தல் பரப்புரை நடத்த முடிவு செய்து ஏப்ரல் 29, 30, மே 2, 3 ஆகிய நான்கு நாட்கள் பீதர், விஜயபுரா, பெலகாவி, பெங்களூரு, கோலார், ராம்நகரம், ஹாசன், மைசூரு, மங்களூரு, வடகனரா, பெலகாவி, சித்ரதுர்கா, விஜயநகர், ரெய்ச்சூர் , கல்புர்கி மாவட்டங்களில் பொதுக்கூட்டம் மற்றும் சாலை பேரணியில் கலந்து கொண்டார். இது சோர்ந்து போய் இருந்த பாஜ தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடந்த இறுதி பரப்புரை கூட்டம் பாஜவுக்கு உற்சாக டானிக் கொடுத்துள்ளது என்பதில் மாற்று கருத்தில்லை.

மாநிலத்தில் சாதிவாரியான ஆதரவு விஷயத்தில் காங்கிரஸ், மஜத கட்சிகளை காட்டிலும் ஆளும் பாஜவுக்கு பலம் சற்று கூடுதலாக உள்ளது. மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக இருக்கும் லிங்காயத்து வகுப்பினரின் ஆதரவு ஏற்கனவே பாஜவுக்கு உள்ள நிலையில், அந்த ஆதரவை தக்க வைத்து கொள்வதுடன் இன்னும் கூடுதலாக ஆதரவு பெரும் பணியை முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிடம் அக்கட்சி தலைமை ஒப்படைத்துள்ளது. பேரவை தேர்தலில் பாஜ 52 புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. அதே சமயத்தில் தற்போதுள்ள 21 எம்எல்ஏகளுக்கு சீட் வழங்கவில்லை. இதனால் கட்சி தலைமை மீது அதிருப்தி கொண்டு முன்னாள் முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர் உள்பட 8 பேர் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்று கட்சியில் இணைந்து தேர்தல் களத்தில் உள்ளனர்.இதையெல்லாம் மீறி பிரதமர் மோடியின் பிரசாரம் பா.ஜவுக்கு உற்சாகம் அளித்துள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தேர்தல் வெற்றிக்காக பல்வேறு வியூகங்களை வகுத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் பாஜ வட்டாரத்திலும் வெற்றி முகம் காணப்படுகிறது.

காங்கிரஸ் பலம்
இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி போராட்டம் நடத்துவதில் கர்நாடகா உள்ளது. அதற்கு காரணம் அங்கு காங்கிரஸ் தீவிரமாக செயல்படுவது தான். தென்மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் பலமாக உள்ளது. கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவகுமார், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் ஒன்றிய மற்றும் மாநில அரசுக்கு எதிராக கடந்த நான்காண்டுகளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். சட்டபேரவை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்ற கருத்து கணிப்பு கடந்த 6 மாதங்களுக்கு முன்பே தனியார் நிறுவனங்கள், மீடியாக்கள், சமூகவலைத்தளங்களில் வெளியாக தொடங்கியது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னும், காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவு அலை குறையாமல் உள்ளது. இது ஆர்பாட்டம் இல்லாமல் நடந்து வரும் மவுன புரட்சி என்பதும் அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது. இவை தவிர ஆளும் கட்சிக்கு எதிராக மக்கள் குரல், வெற்றி பாதை உள்ளிட்ட பெயர்களில் காங்கிரஸ் நடத்திய பாதயாத்திரை மற்றும் வாகன யாத்திரைகள் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

வாக்குறுதிகள் பலம்
கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ₹2,000, அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், பிபிஎல் ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் தலா 10 கிலோ அரிசி, படித்த பட்டதாரிகளுக்கு மாதம் ₹3,000 மற்றும் தொழில் பயிற்சி முடித்தவர்களுக்கு மாதம் ₹1,500 ஊக்க தொகை, 6,006 ஊரக பஞ்சாயத்துகளுக்கு ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் தலா ₹1 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட வாக்குறுதிகள் நகரம் தொடங்கி கிராமம் வரை ஆதரவு ஏற்படுத்தியுள்ளது.

ராகுல், பிரியங்கா உற்சாகம்
காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மற்றும் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணம் பெரியளவில் ஆதரவு அலை ஏற்படுத்தியுள்ளது. பிரியங்கா காந்தியின் தேர்தல் பரப்புரை பெண்களிடம் பெரியளவில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளதை யாரும் மறுக்க முடியாது. மிகவும் எளிமையாகவும் இயல்பாகவும் அவர் வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் செயல்படுவதுடன் பெண்களுடன் பாதுகாப்பையும் மீறி மிகவும் நெருக்கமாக பழகுவது ஆகியவை கட்சிக்கு பெண்கள் ஆதரவை இழுத்துள்ளது.

இடஒதுக்கீடு யாருக்கு சாதகம்
தேர்தல் தேதி அறிவிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் மார்ச் 28ம் தேதி முதல்வர் பசவராஜ்பொம்மை தலைமையில் நடந்த கடைசி அமைச்சரவை கூட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீதம் இடஒதுக்கீட்டை ரத்து செய்து, அதை தலா 2 சதவீதம் என்ற வகையில் லிங்காயத்து மற்றும் ஒக்கலிக வகுப்பினருக்கு பிரித்து கொடுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசின் இந்த முடிவு இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மை வகுப்பினருக்கு அதிருப்தி ஏற்படுத்தியது. ஆனால் கூடுதலாக இரண்டு சதவீதம் இடஒதுக்கீடு கிடைத்திருப்பது லிங்காயத்து மற்றும் ஒக்கலிக வகுப்பினருக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளதா? என்பதை உறுதி செய்யவில்லை. இதற்கு காரணம் அமைச்சரவை கூட்டத்தில் எடுத்துள்ள தீர்மானம் அரசிலயமைப்பு சட்ட அட்டவணையில் சேர்க்கப்பட்டால் மட்டுமே அங்கிகரிக்கப்படும். ஒன்றியத்திலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி இருந்தும் அதற்கான முயற்சி மேற்கொள்ளவில்லை என்ற அதிருப்தி உள்ளதாக தெரியவருகிறது.

கருத்து கணிப்புகள்
தேர்தல் வாக்கு பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே பாக்கியுள்ளது. 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் நடத்தி வெளியிட்டுள்ள கருத்து கணிப்பு முடிவுகளில் 13 நிறுவனங்களின் கணிப்பு காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது. 3 நிறுவனங்கள் பாஜ தலைமையில் ஆட்சி அமையும் என்றும் நான்கு 4 நிறுவனங்கள் தொங்கு பேரவை உருவாகும் என்றும் தெரிவித்துள்ளது. இதனிடையில் தொங்கு பேரவை அமைந்தால், நான் தான் கிங்மேக்கராக இருப்பேன் என்ற எதிர்பார்ப்பில் முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி உள்ளார். சட்டபேரவை தேர்தலில் 150 தொகுதியில் வெற்றிபெற வேண்டும் என்பதை பாஜ இலக்காக கொண்டுள்ளது. ஆனால் மாநிலத்தில் ஆளும் பாஜவுக்கு எதிரான அலை வீசுகிறது. அதற்கு பலம் கொடுக்கும் வகையில் 40 சதவீதம் கமிஷன், ஆளும் கட்சி எம்எல்ஏ விருபாட்சப்பாவின் மகன் அலுவலகத்தில் டெண்டர் அழைப்புக்கு ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியது, அவர்களது வீட்டில் பறிமுதல் செய்த ரூ.8 கோடி ரொக்க பணம், கமிஷன் நெருக்கடியால் இரு அரசு ஒப்பந்ததாரர்கள் தற்கொலை செய்து கொண்டது, சிறுபான்மை வகுப்பு மாணவிகளுக்கு எதிராக ஹிஜாப் சட்டம் உள்பட பல அஸ்திரங்களை காங்கிரஸ் கையில் எடுத்திருப்பது பாஜவின் 150 தொகுதி வெற்றிக்கு பிரேக் போடும் வகையில் இருப்பதுடன் காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு மக்களிடம் பெரிய அளவில் ஆதரவு அலை ஏற்படுத்தி இருப்பதால், கருத்து கணிப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள முடிவுகள் போல் 115 முதல் 130 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை வாக்காளர்கள் நாளை மறுநாள் பதிவு செய்யும் வாக்கின் மூலம் தீர்மானிக்கவுள்ளனர்.

பஜ்ரங் தளம்-பிஎப்ஐ தடை பாலிடிக்ஸ்
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், பாஜ ஆட்சியில் கொண்டுவந்துள்ள பசுவதை தடை சட்டம், மதமாற்ற தடை சட்டம், விவசாயிகளுக்கு எதிராக நில சீர்த்திருத்த சட்டம், ஏபிஎம்சி சட்ட திருத்தம் ஆகியவை வாபஸ் பெறுவதுடன் நாட்டில் பொது அமைதியை சீர்குலைத்து வரும் பஜ்ரங்தளம் மற்றும் பிஎப்ஐ அமைப்புகள் தடை செய்யப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறி இருப்பதற்கு மக்கள் மத்தியில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகள் கிளம்பியுள்ளது. காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை இந்துக்களுக்கு மட்டுமில்லாமல், இந்து மதத்திற்கும் எதிரானது என்ற வாதத்தை பாஜவினர் வாக்காளர்களிடம் எடுத்து கூறி காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அஸ்த்திரத்தை கையில் எடுத்துள்ளது. இது எந்தளவுக்கு பாஜவுக்கு சாதகமாக அமையும் என்பது தெரியவில்லை. இருப்பினும் பஜ்ரங் தளம் தடை என்பதை இந்து அமைப்புகள் தங்கள் சுயமரியாதைக்கு விட்ட சவாலாக எடுத்து கொண்டு காங்கிரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வருகிறார்கள்.

அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி
நாடு முழுவதும் அரசு துறையில் பணியாற்றும் ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்றபின் பென்ஷன் வழங்குவதில் ஒன்றிய அரசு புதிய பென்ஷன் திட்டம் (என்பிஎஸ்) அறிமுகம் செய்துள்ளது. இதை பாஜ ஆளும் மாநிலங்களில் நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளனர். அதே சமயத்தில் என்பிஎஸ் திட்டத்திற்கு எதிராக அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் என்பிஎஸ் திட்டம் ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டம் (ஓபிஎஸ்) அமல்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது அரசு ஊழியர்கள் மத்தியில் ஆதரவு ஏற்படுத்தியுள்ளது.

அனல் பறந்த விமர்சனங்கள்
பிரதமர் மோடியை விஷப்பாம்பு என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் செய்ததும், சோனியா காந்தியை விஷக்கன்னி என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் பசனகவுடா பாட்டீல் யத்னால் விமர்சித்தது, ராகுல்காந்தியை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற பாஜவினரின் விமர்சித்ததும், காங்கிரஸ் தலைவர்கள் என்னை 91 முறை அவமதித்துள்ளதாக பிரதமர் மோடி கூறியதும், அதற்கு பதிலடியாக நேரு குடும்பத்தை கடந்த 9 ஆண்டுகளில் பிரதமரும் பாஜ தலைவர்கள் விமர்சனம் செய்தது எத்தனை ஆயிரம் முறை என்று பிரியங்காகாந்தி எதிர்கேள்வி எழுப்பியதும் கர்நாடகா தேர்தல் களத்தை அனல் பறக்க வைத்துள்ளது.

The post கடைசி கட்டத்தில் கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் களத்தில் முந்தி நிற்கும் காங்கிரஸ்: மோடி அலையை உருவாக்க பா.ஜ முயற்சி appeared first on Dinakaran.

Tags : Congress ,Karnataka ,assembly ,BJP ,Modi ,Karnataka Assembly ,Union Cabinet ,Modi wave ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்