×

மாணவர்கள் கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்ற வேண்டும்

நாமக்கல், மே 6: கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு கலெக்டர் அறிவுரை கூறியுள்ளார். தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர் கோடை விடுமுறையை கொண்டாடுகிறோம் என்ற பெயரில், நீர்நிலைகளுக்கு சென்று ஆபத்தில் சிக்கி கொள்கிறார்கள். இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் பல மாவட்டங்களில் நடந்துள்ளது. எனவே, குழந்தைகள் விஷயத்தில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, நாமக்கல் மாவட்டத்தில் விழிப்புணர்வு நடவடிக்கையாக, நீர்நிலைகளில் எச்சரிக்கை விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் கூறியதாவது: பெற்றோர்களும், குழந்தைகளும் கோடை விடுமுறையை பயனுள்ள வகையிலும், மகிழ்ச்சியுடனும் கொண்டாட வேண்டும். 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியர், அடுத்த கட்டமாக என்ன படிக்கலாம் என்பது குறித்து, பெற்றோர்களுடன் பேசவேண்டும். குழந்தைகளின் ஆர்வத்தை முதலில் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். தேர்வு முடிவுகள் வரும் வரை காத்திருக்காமல், சேர்க்கைக்கான கட்டணங்களை தயார் செய்ய வேண்டும். கோடை விடுமுறையில் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பெற்றோர்கள் முழு கவனம் செலுத்த வேண்டும்.

கீரைகள், காய்கள், பழங்கள், சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகள் என தினமும் ஆரோக்கிய உணவை சமைத்து கொடுக்க வேண்டும். பள்ளி திறந்த பிறகு, அதுவே அவர்களுக்கு பழக்கமாக மாறி விடும்.
குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட்டு, தன்னம்பிக்கையான வார்த்தையை பெற்றோர்கள் பேச வேண்டும். அவர்களை குறை கூறி கொண்டும், அடுத்தவீட்டு குழந்தைகளோடு ஒப்பிட்டு தாழ்த்தியும் பேசக்கூடாது. குழந்தைகளை சுற்றுலா தளங்களுக்கு அழைத்து செல்ல வேண்டும். வெளியூர் செல்ல முடியவில்லை என்றால், உள்ளூரில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு அழைத்து செல்ல வேண்டும். விடுமுறையை உற்சாகமாக கொண்டாட என்ன வழியென்று, பெற்றோர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களில், பெரும்பாலும் குற்றவாளிகள் தெரிந்த நபர்களாகவே இருக்கிறார்கள்.

குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டு செல்லும் போது, பெற்றோர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க, குழந்தைகள் நீர்நிலைகளுக்கு செல்கிறார்கள். அவர்கள் எங்கு செல்கிறார்கள்? யாருடன் செல்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். விடுமுறையின் போது பொழுதுபோக்க செல்போனுக்கும், டிவிக்கும் குழந்தைகளை அடிமை ஆக்கக் கூடாது. பெண் குழந்தைகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்து கூறவேண்டும். பெண் குழந்தைகளுக்கு குழந்தை திருமணம் செய்வதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து பெற்றோர்கள் அறிந்து செயல்பட வேண்டும். கோடை விடுமுறையில், நீச்சல் தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் பெரியவர்களின் துணையில்லாமல் மாணவர்கள் நீர்நிலைகளுக்கு செல்லக்கூடாது. சிலம்பம் மற்றும் கராத்தே உள்ளிட்ட பல்வேறு தற்காப்பு கலைகளில் ஏதாவது ஒன்றை விருப்பத்துடன் கற்றுக் கொள்ளுங்கள். செல்போன் எந்த விதத்திலும், அறிவுரீதியான வளர்ச்சிக்கு உதவியாக இருக்காது. பாலியல் வன்முறை பற்றிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். யாரும் உங்களை தொட்டு பேச அனுமதிக்க கூடாது. ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும். பாக்கெட் உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் ஸ்ரேயா சிங் கூறியுள்ளார்.

The post மாணவர்கள் கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : NAMACKAL ,
× RELATED 15 வயது சிறுமியை திருமணம் செய்து...