×

ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தக் கூடாது என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜோசப் அமல்ராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: அரசு துவக்கப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றும் நான், டிஇடி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்திற்கு தகுதி உள்ளது. தற்போது டிஇடி தேர்ச்சி பெறாமல் ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக உள்ளவர்களுக்கு, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்குவதற்கு மாநில அளவிலான பொது கலந்தாய்வு நடத்த உள்ளனர். இதனால், என்னைப் போன்றோரின் வாய்ப்புகள் பறிபோகிறது.

எனவே, எனக்கு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார். அரசு சிறப்பு பிளீடர் காந்திராஜ் ஆஜராகி, ‘‘கட்டாய கல்வி உரிமை சட்டப்படி டிஇடி தகுதி பெற்றவர்கள் தான் பணியை தொடர முடியும். தற்போதைய பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே நடத்தப்படுகிறது’’ என்றார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘‘தகுதியானவர்களைக் கொண்டு பதவி உயர்வுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். டிஇடி தேர்ச்சி பெறாதவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கும் தகுதி குறித்து கொள்கை முடிவு எடுக்க வேண்டும். இந்த கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்டோர் விளக்கமளிக்க வாய்ப்பளித்து 2 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதுவரை எந்தவித பதவி உயர்வுக்கான கலந்தாய்வும் நடத்தக் கூடாது’’ என உத்தரவிட்டுள்ளார்.

The post ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madurai ,ICourt ,Joseph Amalraj ,Ramanathapuram ,Dinakaran ,
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...