×

சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை விவகாரம் ஆளுநர் ஆர்.என்.ரவி பொய் சொன்னாரா? பிப்ரவரியில் அரசு கடிதம் அனுப்பிய தகவல்களை மறைத்தது அம்பலம்

சென்னை: தீட்சிதர்களின் உறவினரான சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை நடந்ததாக ஆளுநர் ரவி கூறியது சர்ச்சையாகியுள்ள நிலையில், கடந்த பிப்ரவரி மாதமே தமிழக அரசு அவருக்கு விளக்கம் அளித்துள்ள தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக ஆளுநர் இரு நாட்களுக்கு முன்னர் ஆங்கில பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், ‘‘சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களை பழிவாங்க, சமூக நலத்துறை அதிகாரிகள், தீட்சிதர்கள் மீது குழந்தை திருமண குற்றச்சாட்டை சுமத்தினர். மேலும், 6 மற்றும் 7ம் வகுப்பு படிக்கும் மாணவிகளை வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று இரு விரல் கன்னித் தன்மை பரிசோதனை செய்துள்ளனர் என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு திட்டவட்டமாக மறுத்து அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில் ஆளுநர் சொன்னது உண்மையா என்ற விவாதம் ஏற்பட்டது. அதில் தமிழக ஆளுநருக்கு, சிதம்பரம் தீட்சிதர்கள் நடத்திய சிறுமிகளின் திருமணம் மற்றும் அவர்களது உறவு சிறுமிகளுக்கு இருவிரல் கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டதா என்பது குறித்து புகார் வந்ததாகவும், இதன் உண்மை தன்மை குறித்து தமிழக அரசுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த டிசம்பர் மாதம் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து தீவிர விசாரணை நடத்திய தமிழக அரசு, ஆளுநர் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது. கற்பனையான குற்றச்சாட்டுகள். உண்மைக்கு மாறானவை என்று தமிழக அரசு ஆதாரங்களுடன் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்தக் கடிதம் கவர்னரின் கைக்கு கிடைத்த பிறகும், அவர் 2 மாதங்களுக்குப் பிறகு தமிழக அரசு அனுப்பிய விளக்க கடிதத்தை மறுத்து, வேண்டும் என்றே தமிழக அரசு மீது குற்றச்சாட்டுகளை கூற வேண்டும் என்பதற்காக தகவல்களையும், உண்மைகளையும் மறைத்து பேட்டி அளித்துள்ளது, தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. தமிழக அரசு, கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடந்த பிப்ரவரி மாதம் விளக்க கடிதம் எழுதியது உண்மை என்று பொதுத்துறை அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* கடலூரில் சென்னை மருத்துவ குழு விசாரணை
சிறுமிகளுக்கு கட்டாயப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருவிரல் கன்னித்தன்மை பரிசோதனை செய்துள்ளதாக ஆளுநரின் கருத்துக்கு டிஜிபி சைலேந்திரபாபு மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனரக கூடுதல் இயக்குநர் டாக்டர் விஸ்வநாதன் தலைமையில் 4 பேர் அடங்கிய மருத்துவ குழுவினர் சிதம்பரம் ஏஎஸ்பி அலுவலகத்தில் ஏஎஸ்பி ரகுபதியிடம், குழந்தை திருமணம் தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து கடலூர் அரசு மருத்துவமனையில், மருத்துவ பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்திற்கு சென்று சிறுமிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றதா, மருத்துவ பரிசோதனை நடைபெற்றதாக கூறப்பட்ட நாளில் பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் யார், யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் சமூக நலத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த சென்றனர்.

The post சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை விவகாரம் ஆளுநர் ஆர்.என்.ரவி பொய் சொன்னாரா? பிப்ரவரியில் அரசு கடிதம் அனுப்பிய தகவல்களை மறைத்தது அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Governor R. N.N. ,Ravi ,Chennai ,Governor ,Dikshitas ,R. ,N.N. ,
× RELATED செங்கோலை மீட்டெடுத்த தேசம்...