×

ஜம்முவில் வெடிகுண்டு தாக்குதலில் 5 வீரர்கள் பலி ராஜ்நாத் சிங் நேரில் ஆய்வு: தீவிரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரம்

ரஜோரி: ஜம்முவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில் பாதுகாப்பு சூழல் குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று நேரில் ஆய்வு செய்தார். ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் பட்டா துரியான் பகுதியில் ஏப்.20ம் தேதி ராணுவ வாகனத்தில் தீவிரவாதிகள் குண்டுவீசி தாக்குதல் நடத்தினார்கள்.இந்த தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் ரஜோரி மாவட்டத்தில் உள்ள கண்டி வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து அங்கு சென்ற போது தீவிரவாதிகள் வெடிகுண்டை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தினார்கள். இதில் ராணுவ மேஜர் உட்பட 5 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி பொறுப்பேற்று உள்ளது.

இதை அடுத்து ரஜோரி மாவட்டத்தில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டு ஆபரேஷன் திரிநேத்ரா என்ற பெயரில் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு சூழல் குறித்து நேரில் ஆய்வு செய்தார். நேற்று ஜம்மு சென்ற அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன், ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே மற்றும் ஆளுநர் மனோஜ் சின்கா உள்ளிட்டோர் உடன் சென்றனர். தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் அங்கு நடந்தது. இதை தொடர்ந்து ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டத்தில் அருகில் உள்ள மற்ற பகுதிகளிலும் தீவிரவாத தேடுதல் வேட்டை நடத்த உத்தரவிடப்பட்டது.

* ஜம்மு காஷ்மீரில் கடந்த 18 மாதங்களில் 35 பேர் கொல்லப்பட்டனர். அதில் 26 பேர் ராணுவ வீரர்கள்.

* பாக்.எல்லை மாவட்டமான ரஜோரி, பூஞ்ச் பகுதியில் மட்டும் இதுவரை 8 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

* ஜனவரி 1ம் தேதி ரஜோரி மாவட்டத்தில் தங்கிரி பகுதியில் 7 அப்பாவி மக்களை தீவிரவாதிகள் கொன்றனர்.

* கண்டி வனப்பகுதியில் குண்டுவெடித்து 5 வீரர்கள் பலியானது இந்த ஆண்டின் 3வது மிகப்பெரிய தாக்குதல்.

* தீவிரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் வீரர்கள் மற்றும் தீவிரவாதிகள் இடையே மோதல் வெடித்தது. தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதை அடுத்து வீரர்கள் கொடுத்த பதிலடியில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். கொல்லப்பட்ட தீவிரவாதி அபித் வானி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவன் குல்காமின் பபாபோரா பகுதியை சேர்ந்தவன்.

* புலனாய்வு அதிகாரிகள் சோதனை

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதியின் வீட்டில் காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். தீவிரவாதி பரூக் அகமது பட் என்ற நலியின் தந்தை அப்துல் கனி பட்டின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

The post ஜம்முவில் வெடிகுண்டு தாக்குதலில் 5 வீரர்கள் பலி ராஜ்நாத் சிங் நேரில் ஆய்வு: தீவிரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Rajnath Singh ,Jammu ,Rajori ,Minister ,Dinakaran ,
× RELATED ஒர்க் ஃப்ரம் ஹோம் தெரியும் ஒர்க்...