×

சாதி, மத ரீதியாக பிரித்து பார்த்தால் திராவிட மாடல் தெரியாது ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி: மக்களுக்கு சம்பந்தம் இல்லாதவர்களை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என பேச்சு

சென்னை: ‘சாதி, மத ரீதியாக பிரித்து பார்த்தால் திராவிட மாடல் தெரியாது. மக்களுக்கு சம்பந்தமில்லாத பதவியில் இருப்பவர்களை பற்றி கவலையில்லை’ என திராவிட மாடல் குறித்து சர்ச்சைக் கருத்து தெரிவித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில், ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, ஒரு லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகள், மாணவிகளுக்கு ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் உயர்கல்வி உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டைகள், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்களை பாராட்டி கேடயங்கள் ஆகியவற்றை வழங்கி பேசியதாவது: “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” உங்களால் மறக்க முடியாத குரல் இது. இரண்டாண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தமிழ்நாட்டு மக்களாகிய உங்களுடைய அன்போடு, ஆதரவோடு முதலமைச்சர் பொறுப்பில், தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்ல என்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டேன்.

மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நிறைவேற்ற முடியுமா, எடுத்துக் கொண்ட பணியை முடித்துக் காட்ட முடியுமா என்று என்னை நானே கேட்டுக்கொண்டபோது, என் மனதிற்கு தெம்பும் தைரியமும் கொடுத்தவர்கள் மூன்று பேர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர். இவர்கள் மூன்று பேரையும் மனதில் நினைத்து பார்த்தேன். அவர்களோடு அம்பேத்கர், காமராஜர், ஜீவானந்தம், காயிதேமில்லத் உள்ளிட்டவர்களும் என் மனதில் தோன்றினார்கள். ஏற்றுக்கொண்ட பொறுப்பை நிறைவேற்றி காட்ட முடியும் என்ற தன்னம்பிக்கையும் தைரியமும் தானாக எனக்கு வந்து விட்டது.

மக்களுக்காக பணியாற்றுவது என்பது எனக்கு புதிதல்ல. 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் இருக்கிறேன், பல சோதனைகளை நான் சந்தித்திருக்கிறேன். ‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும்’ என்றார் அண்ணா. ‘இதையும் தாங்கிப் பழகு’ என்று எனக்கு கற்றுக் கொடுத்தார் நம்முடைய கலைஞர். தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பேருக்கும்தான் நான் முதலமைச்சர். இது தமிழ்நாட்டு மக்கள் தந்த பொறுப்பு. அவர்களுக்காக பணியாற்ற வேண்டியது என்னுடைய கடமை. என்னால் முடிந்த அளவு பணியாற்றுகிறேன், ஓய்வின்றி பணியாற்றுகிறேன், என் சக்திக்கு மீறி பணியாற்றுகிறேன். அந்த உழைப்பின் பயனை தமிழ்நாட்டு மக்களான உங்களுடைய முகங்களில் பார்க்கிறேன்.

திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்கிறவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய மகிழ்ச்சியும் உங்களுடைய புன்னகையுமே பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று திருக்குறள் சொல்கிறது. எல்லாருக்கும் எல்லாம் என்று சொல்வது திராவிட மாடல். மக்களை சாதியால், மதத்தால், அதிகாரத்தால், ஆணவத்தால் பிரித்து பார்க்கிறவர்களுக்கு திராவிட மாடல் என்றால் புரியாது. தமிழ்நாட்டுக்கு விடியல் ஏற்படும் என்ற நம்பிக்கையோடு திமுகவுக்கு வாக்களித்து ஆட்சியில் உட்கார வைத்த மக்களுக்கு, அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு திராவிட மாடல் என்றால் என்ன என்பது நன்றாக புரியும். ‘மக்களுக்கு சம்பந்தமில்லாத பதவியில் இருக்கின்றவர்களை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. நம் கடமையை செய்தால் போதும் என்கிற குறிக்கோளுடன் நான் செயல்படுகிறேன்.

இரண்டு ஆண்டுகளை முடித்துவிட்டு, இப்போது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். தமிழ்நாட்டில் வாழும் 8 கோடி மக்களும் ஏதாவது ஒரு விதத்தில் நன்மையை அடைந்திருக்கும் ஆட்சியாக நமது திராவிட மாடல் ஆட்சி அமைந்திருக்கிறது. உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தார்கள் என்றால், அந்த குழந்தைகளுடைய ஊட்டச்சத்தை உறுதி செய்யக்கூடிய திட்டப்படி சத்தான உணவை நம் அரசு வழங்குகிறது. உங்கள் வீட்டில் அரசு பள்ளியில் படிக்கின்ற ஒரு மாணவனோ, மாணவியோ இருந்தால் அவர்களுக்கு காலை சிற்றுண்டியை நம் அரசு வழங்குகிறது.

உங்கள் வீட்டில் அரசு பள்ளியில் படித்து, காலேஜுக்கு போகின்ற ஒரு மாணவி இருந்தால், புதுமைப்பெண் திட்டம் மூலமாக அவர்களுக்கு மாதா மாதம் ஆயிரம் ரூபாயை நம் அரசு வழங்குகிறது. உங்கள் வீட்டில் இருக்கின்ற எல்லா பெண்களுக்கும் பஸ்ஸில் கட்டணமில்லாமல் பயணம் செய்கிற வசதியை நம் அரசு உருவாக்கி தந்திருக்கிறது. உங்கள் வீட்டில் கல்லூரிக்கு போகிற மாணவர் இருந்தால், அவரை எல்லா விதத்திலும் வேலைவாய்ப்புக்கு தகுதிப்படுத்த, ‘நான் முதல்வன்’ திட்டம் மூலமாக நம் அரசு பயிற்சி தருகிறது.அனைத்து வகைப்பட்ட மக்களுக்கும் உதவிகளை வழங்கி கைதூக்கி விடுகிறது நம் அரசு. அரசு ஊழியர்களின் நலன் காத்து அவர்களை பாதுகாத்து வேலைவாய்ப்புகளை உருவாக்கியும் தருகிறது அரசு. நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், கோடிக்கணக்கான மக்களுடைய இதயத்தில் மகிழ்ச்சியும், முகத்தில் மலர்ச்சியும் நிறைந்திருக்கிறது. அதை, நான் ஒவ்வொரு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறபோது கவனிக்கிறேன்.

மாவட்டம்தோறும் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களின் மூலமாக, வீட்டுமனை பட்டா, கல்வி கடனுதவி, சுயதொழில் தொடங்க கடனுதவி, கூட்டுறவு கடன்கள், நகை கடன்கள், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன்கள், உழவர்களுக்கு புதிய இலவச மின் இணைப்பு, பயிர் கடன்கள், புதிய ஓய்வூதிய ஆணைகள், மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள், காலணிகள், புத்தக பைகள், உழவர்களுக்கு மரக்கன்றுகள், வேளாண் பொருள் தொகுப்புகள், கோயில் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகைகள், சாலைகள், மேம்பாலங்கள், குடியிருப்புகள், சத்துணவு மையங்கள், சமூக நலக் கூடங்கள் என்று எத்தனையோ திட்டங்களை மாவட்டம்தோறும், நகரங்கள் தோறும் நாம் செய்து கொடுத்திருக்கிறோம். துறைகள்தோறும் சாதனைகளை செய்து காட்டி கொண்டிருக்கிறோம்.

உங்களுடைய மகிழ்ச்சியும், வாழ்த்துகளும் நம்முடைய இலக்கை நோக்கி என்னை இன்னும் அதிகமாக உழைக்க வைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற உழைப்பேன். உங்களில் ஒருவனாக, உங்களோடு ஒருவனாக என்றும் இருப்பேன். ஆட்சியின் 5 ஆண்டுகளும் உங்களின் நலனுக்காக இருக்கும். அதன்பிறகும், உங்கள் ஆதரவோடு தொடரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், உதயநிதி ஸ்டாலின், ரகுபதி, கீதா ஜீவன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், எம்பி, எம்எல்ஏக்கள், தலைமை செயலாளர் இறையன்பு, கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

* ஒரு லட்சம் பேருக்கு ஓய்வூதியம் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஒரு லட்சம் புதிய பயனாளிகளுக்கு ஓய்வூதிய பயன்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது, அவர் பேசுகையில், ‘‘இன்றைக்குக்கூட இந்த நிகழ்ச்சியில் சாதனைகளை மட்டும் சொல்லுகிற நிகழ்ச்சியாக இல்லாமல் ‘புதுமைப் பெண்’ ‘நான் முதல்வன்’ திட்டங்களின் கீழ் ஆணைகளும், ஒரு லட்சம் பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்குகின்ற விழாவாகவும் ஏற்பாடு செய்திருக்கிறோம். செயின்ட் ஜார்ஜ் கோட்டை என்பது, இரண்டாண்டு காலமாக ஏழை மக்களின் நலன் காக்கக்கூடிய குடியிருப்பாக மாறியிருக்கிறது. தலைமை செயலகம் என்பது தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் முன்னேற்ற உழைக்கும் முதன்மை செயலகமாக மாறியிருக்கிறது. இந்த ஆட்சியின் முகம் என்பது அதிகாரம் முகம் அல்ல, அன்பு. ஆணவம் அல்ல, ஜனநாயகம். அலங்காரமல்ல, எளிமை. சர்வாதிகாரமல்ல, சமத்துவம். சனாதனமல்ல, சமூகநீதி. அதனால்தான் சிலரால் விமர்சிக்கப்படுகிறது. பலரால் விரும்பப்படுகிறது. நமது ஆட்சி என்பது, சமூகநீதி, சமநீதி, சுயமரியாதை, சமதர்மம், சகோதரத்துவம் ஆகிய உயரிய பண்பாட்டின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கக்கூடிய ஆட்சி’’ என்றார்.

* 2 ஆண்டில் 6,905 கோப்புகளில் கையெழுத்து
தலைமை செயலகத்தில் என் தலைமையில் இதுநாள் வரை 350க்கும் மேற்பட்ட துறைரீதியான ஆய்வு கூட்டங்கள் நடந்தது. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 6,905 கோப்புகளில் கையெழுத்திட்டிருக்கிறேன். கோட்டையில் தீட்டுகிற திட்டங்கள் கடைக்கோடி மனிதருக்கும் சென்று சேர்வதை உறுதிப்படுத்த ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தை 4 கட்டங்களாக 16 அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தியிருக்கிறேன். சொன்னதை செய்வோம்- செய்வதை சொல்வோம் என்பது கலைஞருடைய நடைமுறை. அப்படித்தான் ஆட்சி நடத்தினார். ஆனால் நமது திராவிட மாடல் அரசு, சொல்லாததையும் செய்வோம் – சொல்லாமலும் செய்வோம் என்கிற வேகத்தோடு செயல்பட்டு வருகிறது. வளமான தமிழ்நாட்டை, இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக தமிழ்நாட்டை, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் தமிழ்நாட்டை உருவாக்கிவிட முடியும் என்கிற நம்பிக்கை நமக்கு அதிகமாக இருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

The post சாதி, மத ரீதியாக பிரித்து பார்த்தால் திராவிட மாடல் தெரியாது ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி: மக்களுக்கு சம்பந்தம் இல்லாதவர்களை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என பேச்சு appeared first on Dinakaran.

Tags : G.K. Stalin ,Chennai ,
× RELATED 5 நாளில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர்...