×

சூடான் வன்முறை கும்பலால் 10 லட்சம் போலியோ தடுப்பூசி சூறை: யுனிசெப் கவலை

கெய்ரோ: சூடான் வன்முறை கும்பலால் அங்கு பாதுகாக்கப்பட்ட 10 லட்சம் டோஸ் போலியோ தடுப்பூசி சூறையாடப்பட்டதாக யுனிசெப் கவலையுடன் தெரிவித்துள்ளது. சூடானில் நடைபெறும் உள்நாட்டு போரால் 600க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். நாட்டை விட்டு பலர் வெளியேறியுள்ள நிலையில், மோசமான வன்முறைக்கு மத்தியில் பலர் உயிருக்கு போராடி வருகின்றனர். இந்த வன்முறை காரணமாக சூடானில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட ஒரு மில்லியன் (10 லட்சம்) போலியோ தடுப்பூசிகள் வீணாகி உள்ளன.

இதுகுறித்து ஐ.நா-வின் யுனிசெப் வெளியிட்ட அறிக்கையில், ‘சூடானின் தெற்கு டார்பூரில் ஒரு மில்லியன் போலியோ தடுப்பூசிகள் உட்பட மருந்துகள் வைக்கப்பட்டிருந்தன. குளிர்சாதன அறையில் வைக்கப்பட்ட மருந்துகளை, வன்முறை கும்பல் சூறையாடிவிட்டது. சுமார் 10 லட்சம் போலியோ தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டன. சூடானில் கடந்த ஆண்டு போலியோ பாதிப்பு பரவியது, அப்போதிருந்து யுனிசெப் சார்பில் போலியோ தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்துள்ளது.

சவுதியில் அமைதி பேச்சுவார்த்தை
சூடானில் ராணுவ, துணை ராணுவ தளபதிகளுக்கு இடையிலான அதிகார போட்டியால் உள்நாட்டு போர் ஏற்பட்டுள்ள நிலையில், இதனை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளரின் சூடானுக்கான சிறப்பு பிரதிநிதி வோல்கர் பெர்த்ஸ் கூறுகையில், ‘தேசிய மற்றும் சர்வதேச பார்வையாளர்களின் மேற்பார்வையின் கீழ் நிலையான மற்றும் நம்பகமான போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். கடந்த வாரம் தற்காலிக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதால், சில பகுதிகளில் மோதல்கள் குறைந்துள்ளன. ஆனால் மற்ற பகுதிகளில் கடுமையான சண்டை தொடர்கிறது. இருதரப்பு பேச்சுவார்த்தைக்கான சூழல்கள் கூடி வருகிறது. ராணுவம், துணை ராணுவ தளபதிகளின் தரப்பில், தங்களது பிரதிநிதிகளை அமைதி பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைப்பதாக கூறியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தை சவுதி அரேபியாவில் நடக்கவுள்ளது’ என்றார்.

The post சூடான் வன்முறை கும்பலால் 10 லட்சம் போலியோ தடுப்பூசி சூறை: யுனிசெப் கவலை appeared first on Dinakaran.

Tags : Unicep ,Cairo ,Dinakaran ,
× RELATED தீர்க்கசுமங்கலி ஆக்கும் திருமணப் பொருத்தம்!