×

மணிப்பூரில் நடந்த பயங்கர வன்முறை சம்பவத்தில் ஐஆர்எஸ் அதிகாரி அடித்து கொலை; சிஆர்பிஎப் வீரர் சுட்டுக் கொலை: பாஜக எம்எல்ஏ மீது தாக்குதல்; 13,000 பேர் மீட்பு; சட்டப்பிரிவு 355 அமல்

இம்பால்: மணிப்பூரில் நடந்த பயங்கர வன்முறை சம்பவத்தில் ஐஆர்எஸ் அதிகாரி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். மேலும் வீட்டில் இருந்த சிஆர்பிஎப் வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து சுமார் 13,000 பேரை ராணுவம் மீட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த சில தினங்களுக்கு முன் மேதே சமூகத்தினரை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூர் பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில், ‘பழங்குடியினர் ஒற்றுமைப் பேரணி’ நடைபெற்றது. அப்போது நடந்த மோதல் சம்பவம் பெரும் வன்முறையாக மாறியது. மாநிலம் முழுவதும் ஏராளமான கடைகள், வீடுகள் சூறையாடப்பட்டு, தீ வைக்கப்பட்டன. மாநில போலீசாரால் வன்முறையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து, ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினர் உடனடியாக கலவரப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வன்முறையால் பாதிக்கப்பட்ட 13 ஆயிரம் பேரை போலீசார் மீட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர். நேற்று முதல் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.

இந்நிலையில் வருமான வரித் துறை அதிகாரியாக இம்பாலில் பணியாற்றி வந்த லெட்மின்தாங் ஹாக்கிப் என்பவர், அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் இருந்தார். அப்போது அவரை வெளியே இழுத்துச் சென்று வன்முறையாளர்கள் அடித்துக் கொன்றனர். இதுதொடர்பாக இந்திய வருவாய் சேவை (ஐஆர்எஸ்) சங்கம் வெளியிட்ட அறிவிப்பில், ‘வருமான வரித்துறை அதிகாரி லெட்மின்தாங் ஹாக்கிப் என்பவர் வன்முறையாளர்களால் கொல்லப்பட்டார். அவரது கொலைக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம். அரசுப்பணியில் இருக்கும் ஊழியரை கொன்றதை நியாயப்படுத்த முடியாது. அவரது உத்யோகபூர்வ குடியிருப்பில் இருந்த போது, அவரை ெவளியே இழுத்து போட்டு அடித்துக் கொன்றுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளது.

அதேபோல், சிஆர்பிஎஃப் கோப்ரா கமாண்டோ சோன்கோலன் ஹாக்கிப் என்பவர், விடுமுறையை கழிப்பதற்காக மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள அவரது கிராமத்தில் இருந்தார். அப்போது ஆயுதமேந்திய வன்முறை கும்பல் சோன்கோலன் ஹாக்கிப்பை சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘204வது கோப்ரா பட்டாலியனின் படைப் பிரிவை சேர்ந்த கான்ஸ்டபிள் சோன்கோலன் ஹாக்கிப் என்பவர், அவரது வீட்டில் இருந்த போது போலீஸ் அணியும் சீருடை போன்ற சீருடையில் வந்த கும்பல் அவரது கிராமத்திற்குள் நுழைந்து அவரை சுட்டுக் கொன்றது’ என்றார். மேற்கண்ட இரு கொலை சம்பவங்கள் குறித்தும் மாநில போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவத்தில் பாஜக எம்எல்ஏ வுங்ஜாகின் வால்டே என்பவரை வன்முறை கும்பல் சரமாரியாக தாக்கியது. அதனால் அவர் மணிப்பூரில் இருந்து வேறு மாநிலத்திற்கு விமானம் மூலம் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மணிப்பூர் டிஜிபி பி.டவுங்கல் தெரிவித்தார்.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘மணிப்பூரில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கவும், மீண்டும் இயல்பு நிலையைக் கொண்டுவரவும் ராணுவம், அசாம் ரைபிள்ஸ், விமானப்படை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. கடந்த 48 மணிநேரத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசித்த 13,000 பேரை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்துள்ளோம். கடந்த 12 மணி நேரத்தில், இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் ஆங்காங்கே தீவைப்பு சம்பவங்கள், முற்றுகை போராட்டங்களுக்கான முயற்சிகள் நடந்தன. ஆனால் அவை முறியடிக்கப்பட்டன. பெரும் வன்முறை சம்பவங்கள் நடந்ததால் ஒன்றிய அரசு சட்டப்பிரிவு 355ஐ பயன்படுத்தி பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுததுள்ளது’ என்றனர்.

The post மணிப்பூரில் நடந்த பயங்கர வன்முறை சம்பவத்தில் ஐஆர்எஸ் அதிகாரி அடித்து கொலை; சிஆர்பிஎப் வீரர் சுட்டுக் கொலை: பாஜக எம்எல்ஏ மீது தாக்குதல்; 13,000 பேர் மீட்பு; சட்டப்பிரிவு 355 அமல் appeared first on Dinakaran.

Tags : IRS ,Manipur ,CRPF ,Imphal ,CRBF ,Bajaka ,Amal ,Dinakaran ,
× RELATED மணிப்பூர் சிஆர்பிஎப் முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல்; 2 வீரர்கள் பலி