×

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் கஜேந்திர மோட்ச உற்சவம்: திரளான பக்தர்கள் தரிசனம்

திருச்சி: மன்னன் ஒருவன் பெருமாளை பூஜிக்கும்போது ஆச்சார குறைவு ஏற்பட்டு சாபத்திற்கு உள்ளாகி காட்டில் யானையாக பிறந்தான். அவன் கஜேந்திரன் என்ற பெயரில் காட்டில் வாழ்ந்து வந்தான். பெருமாள் மீது இருந்த பக்தியால் சாப விமோசனம் கேட்டு பெருமாளை தினமும் வழிபட்டு வந்தான். அதுபோல தாமரை குளத்தில் தனது தோழிகளுடன் குளிக்க சென்ற கந்தர்வன் ஒருவன் துர்வாச முனிவரின் கோபத்திற்கு ஆளாகி முதலையாக மாறும் சாபம் பெற்றான். அன்று முதல் கந்தர்வன் தாமரைக்குளத்தில் முதலையாக வாழ்ந்து வந்தான். ஒரு நாள் பெருமாளை பூஜிப்பதற்கு தாமரை மலரை பறிக்க வந்த கஜேந்திரனின் கால்களை கவ்விப்பிடித்த முதலை ஆழமான பகுதிக்கு இழுத்துச் சென்றது.

உயிர் பிழைக்க யானை கடுமையாக போராடியது. ஆனால் யானையால் முடியவில்லை. பெருமாளை மனதில் நினைத்து ஓம் நமோ நாராயணா என்று அலறியது. இதனைக்கேட்ட பெருமாள் கருடவாகனத்தில் அந்த தாமரைக்குளத்தின் அருகே எழுந்தருளி முதலையை சக்ராயுதத்தை கொண்டு தாக்கினார். சக்ர ஆயுதம் முதலையின்மீது பட்டவுடன் கஜேந்திரன் மன்னனாகவும், முதலை கந்தர்வனாகவும் சாப விமோசனம் பெற்றனர் என்பது புராணம். இதனை நினைவூட்டும் கஜமோட்ச வைபவம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை நம்பெருமாள் வழி நடை உபயங்கள் கண்டருளி அம்மா மண்டபக்கரையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் மதியம் எழுந்தருளினார்.

மாலை நம்பெருமாள் காவிரி ஆற்றில் இறங்கினார். காவிரியில் கிழக்கு நோக்கி நம்பெருமாளும், மேற்கு நோக்கி கோயில் யானை ஆண்டாளும் நின்றது. அப்போது கோயில் யானை ஆண்டாள், தனது காலை முதலை பிடித்து கவ்வி இழுப்பது போல் நம்பெருமாளை நினைத்து 3 முறை காப்பாற்று, காப்பாற்று என்பதுபோல் பிளிறியது.இதனையடுத்து நம்பெருமாளின் சடாரியை எடுத்து வந்து யானைமீது அர்ச்சகர்கள் வைத்தனர். இதில் யானை ஆண்டாள் சாப விமோசனம் பெற்றது. இந்த நிகழ்வு தத்ரூபமாக நடைபெற்றதை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

The post ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் கஜேந்திர மோட்ச உற்சவம்: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Kajendra Modsa ,Sriengam Mom Hall ,Trichy ,Perumal ,Kajendran ,Srinangam Mother Hall ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...