×

திராவிட மொழிகளின் ஒப்பியல் அறிஞர் இராபர்ட் கால்டுவெல்லின் 209 ஆவது பிறந்தநாள் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி

1816-ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில், ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் கால்டுவெல். அவருடைய 23-வது வயதில், மதப் பரப்புரைக்காக அவர் ஒரு கப்பலில் ஏற்றி இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். 1837-ஆம் ஆண்டில் புறப்பட்ட அந்தக் கப்பல், வழியில் ஒரு பிரான்ஸ் நாட்டுக் கப்பலோடு மோதியதால், பெரும் விபத்துக்கு உள்ளாகியது. எப்படியோ தப்பித்து வந்த அந்தக் கப்பலில் பயணித்த பயணிகள், 1838-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில்தான் தமிழ்நாட்டின் கரையைத் தொட்டனர்.

தமிழ்நாட்டில் கிறித்துவ மதத்தைப் பரப்புவதற்காக தமிழைக் கற்றுக் கொள்வது முதல் தேவையாக இருந்தது. தமிழைக் கற்கத் தொடங்கிய கால்டுவெல், தமிழ்மொழியால் ஈர்க்கப்பட்டார். மதப்பரப்புரை அவருக்கு இரண்டாம் பட்சமாக ஆயிற்று. தமிழ் ஆய்வே அவருடைய முதல் பணியாக அமைந்தது

தமிழில் மட்டுமல்லாமல், தமிழோடு தொடர்புடைய மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு உள்ளிட்ட பல மொழிகளையும் அவர் கற்கத் தொடங்கினார். அவருடைய 18 ஆண்டுகால உழைப்பு, 1856-ஆம் ஆண்டு ஒரு பெரும் ஆய்வு நூலாக வெளிவந்தது. அந்த நூல்தான் ‘தென்னிந்திய அல்லது திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’என்பதாகும். அந்த நூல் இருபெரும் உண்மைகளை உலகுக்கு எடுத்துச் சொன்னது.

தமிழ், தெலுங்கு போன்றவை, தனி மொழிக் குடும்பங்கள் என்று கூறினார். எனினும் அந்த உண்மையை மிகப்பெரிய சான்றுகளுடன் வெளிக்கொண்டு வந்தவர் கால்டுவெல்தான்!
இந்த நூல் தமிழ்நாட்டு சமூக, அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்பத்தை உருவாக்கிற்று. “திராவிட மொழிக் குடும்பம்’ என்னும் சொல்லிலிருந்து ‘திராவிட மொழி, ‘திராவிட இனம்’, ‘திராவிட நாடு’ போன்ற சிந்தனைகள் இம்மண்ணில் வலுப்பெற்றன. திராவிட இயக்கத்துக்கான விதையை வித்திட்டவர் கால்டுவெல் என்றும் நாம் கூறலாம்.
இலத்தீன், கிரேக்கம், எரேபியம், ஜெர்மன், பிரெஞ்சு போன்ற வெளிநாட்டு மொழிகளிலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், துளு போன்ற தென்னக மொழிகளிலும் சிறந்த புலமைப் பெற்றிருந்தார்.

இதன்மூலம் “ஆரிய இன மொழிகள் வேறு, திராவிட மொழி இனங்கள் வேறு என்றும், தமிழுக்கும் வடமொழிக்கும் எவ்வித உறவும் இல்லை என்றும், வடமொழி இன்றியே தனித்து இயங்கக் கூடிய மொழி தமிழ் மொழி” என ஒப்பிலக்கண ஆய்வின் மூலம் உலகுக்கு உணர்த்திய பெருமைக்குரியவர்.

‘திராவிடம்’ என்ற சொல் தொடக்கத்தில் மொழியை, இனத்தை, நிலத்தைக் குறித்தது என்றாலும், கால ஓட்டத்தில் அது சமூகநீதி என்னும் கருத்தியலுக்கான ஒற்றைச் சொல்லாக ஆகிவிட்டது. அதனால்தான் 1968- ஆம் ஆண்டு, இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்ற போது, பேரறிஞர் அண்ணா அவர்கள் கடற்கரையில் நிறுவிய 10 சிலைகளில் கால்டுவெல் சிலையும் ஒன்றாக இருந்தது

அவர் பிறந்த நாளையும், அவரின் தமிழ்ப் பணியையும் நினைவு கூறும் வகையில் சென்னை காமராசர் சாலையில் (மெரினா கடற்கரையில்) அமைந்துள்ள இராபர்ட் கால்டுவெல்லின் திருவுருவச் சிலைக்கு 07.05.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09.30 மணியளவில் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ் வளர்ச்சித் துறையால் மலர் வணக்கம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசு அலுவலர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை மேற்கொண்டு வருகிறது.

The post திராவிட மொழிகளின் ஒப்பியல் அறிஞர் இராபர்ட் கால்டுவெல்லின் 209 ஆவது பிறந்தநாள் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Robert Caldwell ,Caldwell ,Scotland ,209th Birthday Flower Tribute Ceremony ,
× RELATED 30 மொழிகள் திராவிட மொழிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது