×

அனைத்து ரேஷன் கடைகளிலும் கியூ ஆர் கோடு வசதி அறிமுகப்படுத்தப்படும்: அமைச்சர் சக்கரபாணி பேட்டி

கோவை: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் சக்கரபாணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் முடிந்து 3-வது ஆண்டை நோக்கி செல்கிறோம். மக்களுக்கு தரமான பொருட்களை கொடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மக்களுக்கு தரமான பொருட்கள் கிடைக்கின்றதா என்பதை அதிகாரிகள் மூலம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றோம். அரிசி கருப்பு, பழுப்பு நிறத்தில் இருக்க கூடாது என்பதில் இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது. 2 வருடங்களில் 16 லட்சம் பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது. குடும்ப அட்டை தொலைந்து விட்டால், ரூ.45 செலுத்தி அதன் நகலை பெற முடியும். தகுதியுள்ள அனைவருக்கும் குடும்ப அட்டை கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது.

சிறுதானிய உணவு திருவிழா அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட உள்ளது. அனைத்து நியாய விலை கடைகளிலும் கியூஆர் கோடு முறை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். இனி பொருட்களை கியூ ஆர் கோடு முறையில் வாங்கி கொள்ளலாம். அதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்க உள்ளது. கோவை மாவட்டத்தில் 536 நியாய விலை கடைகள் வாடகை கட்டிடத்தில் இருக்கின்றது, அவற்றிக்கு சொந்த கட்டிடம் கட்டப்படும். கோதுமையை பொறுத்தவரை 23 ஆயிரம் மெட்ரிக் என்பதை 8 ஆயிரம் டன்னாக ஒன்றிய அரசு குறைத்து விட்டனர். இது தொடர்பாக ஒன்றிய அரசுடன் பேசி கூடுதல் ஒதுக்கீடு கேட்க இருக்கின்றோம்.

நியாயவிலை கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குவது அரசின் பரீசிலனையில் இருக்கிறது. கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் முதல்கட்டமாக வழங்க திட்டமிடப்பட்டு இருக்கின்றது. மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை அதிகரிக்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி இருக்கின்றோம். இந்த விவகாரத்தில் தமிழக அரசை ஒன்றிய அரசு வஞ்சிக்கின்றது. பருப்பு, பாமாயில், சக்கரை போன்றவற்றை எவ்வளவு விலை கொடுத்தும் அரசால் வாங்கி விட முடியும். எதிர்கட்சி என்பதால் ஒன்றிய அரசு தமிழக அரசை வஞ்சிக்கின்றது. கோதுமை, மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு குறைத்து இருக்கின்றது. ரேஷன் கடைகளில் இரு விதமான அரிசி விநியோகம் செய்யப்பட்டாலும், மக்கள் எந்த அரிசியை விரும்புகின்றனரோ அதை மட்டுமே கொடுப்பார்கள் என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

The post அனைத்து ரேஷன் கடைகளிலும் கியூ ஆர் கோடு வசதி அறிமுகப்படுத்தப்படும்: அமைச்சர் சக்கரபாணி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Chakaraphani ,Govai ,Tamil Nadu Consumables Wanipak Club Masters Zone ,Govai District Collector ,Office ,Line ,Whearabani ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத குடிநீர் இணைப்பு: கோவை ஆணையர் எச்சரிக்கை