×

தமிழகத்தில் மக்களாட்சிதான் நடக்கிறது மதச்சார்புள்ள நாடாக திணிக்க வேண்டாம்: ஆளுநருக்கு சபாநாயகர் ‘அட்வைஸ்’

சூலூர்: கோவை மாவட்டம் சூலூரில் மாவட்ட வர்த்தக சங்கம் சார்பில் இரண்டாம் ஆண்டு நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வணிகர் சங்க தலைவர் முத்துப்பாண்டி தலைமை வகித்தார். கண்ணம்பாளையம் பேரூராட்சி தலைவர் புஷ்பலதா ராஜகோபால் குத்துவிளக்கேற்றினார். இதில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அவர் பேசியதாவது:

தமிழ்நாடு அரசு வர்த்தகர்களை அழைத்து பேசி ஆலோசனை பெற்று நிதிநிலை அறிக்கை தயார் செய்து வணிகர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. மாநில ஆளுநர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி பணியாற்ற வேண்டியவர்கள். அதன்படி பணியாற்ற வேண்டும். நம் நாடு மதச்சார்பற்ற நாடு. இந்தியாவில் சட்டத்தின் ஆட்சிதான் நடைபெறுகிறது. மதச்சார்பற்ற நாடு என்பதை மறைத்து மதச்சார்புள்ள நாடுதான் என்பதை திணிப்பது போன்று ஆளுநர்கள் பேசுவது தவறானது.

அரசியல் கட்சி பிரமுகர்களைபோல் ஆளுங்கட்சிக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை தமிழ்நாடு ஆளுநர் பரப்பி வருவதும், திராவிட மாடல் அழிந்துவிட்டது என்பதுபோல சொல்வதும் சரியானது இல்லை.இந்தியாவில் மக்களாட்சி தத்துவம்தான் சிறந்தது. தமிழ்நாட்டில் மக்களாட்சிதான் நடைபெறுகிறது. இதை தெரிந்து ஆளுநர்கள் சொல்கிறார்களா? அல்லது தெரியாமல் சொல்கிறார்களா? என்று தெரியவில்லை. கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக விரைவான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுத்தது. இது தொடர்பாக, ஏதாவது ஆதாரம் இருந்தால் அரசிடமோ, உள்துறை மற்றும் பிரதமர், குடியரசு தலைவரை சந்தித்து புகார் தெரிவிக்காமல் நான்காம் தர அரசியலை தமிழ்நாடு ஆளுநர் செய்கிறார். இதுபோன்று அரசியல் செய்ய வேண்டாம்.

மருத்துவ படிப்பில், இட ஒதுக்கீடு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பெற்றுத் தந்தது திராவிட அரசுதான். தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர்களைவிட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குத்தான் அதிக நேரம் பேச வாய்ப்பு கொடுக்கிறோம். தமிழ்நாட்டில் மட்டும் இருந்த திராவிட மாடல் தற்போது இந்தியா முழுவதும் பரவி உள்ளது.இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன், சூலூர் ஒன்றிய திமுக செயலாளர்கள் மன்னவன், அரசூர் அன்பரசு, ஏர்போர்ட் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ரகு துரைராஜ், இருகூர் சந்திரன் மற்றும் வணிகர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

The post தமிழகத்தில் மக்களாட்சிதான் நடக்கிறது மதச்சார்புள்ள நாடாக திணிக்க வேண்டாம்: ஆளுநருக்கு சபாநாயகர் ‘அட்வைஸ்’ appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Zulur ,District Trade Association ,Zulur, Gov ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...